வெளியிடப்பட்ட நேரம்: 07:53 (07/09/2017)

கடைசி தொடர்பு:07:53 (07/09/2017)

காணி பழங்குடி இன மக்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்திய ஆசிரியர்!

ஆசிரியர் பணி என்பது அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி’ என்ற வார்த்தைக்கேற்ப வாழ்ந்து வருகிறார், கன்னியாகுமரி மாவட்டம் புலியூர்குறிச்சியில் உள்ள ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் முரளீதரன். அவரைச் சந்தித்துப் பேசினோம். உடனே தான் பணியாற்றிய தோட்டமலை காணி பழங்குடி இன மக்கள் வாழும் பகுதிக்கு நம்மை அழைத்துச் சென்றார்.

பேச்சிப்பாறைக்கு சென்று, பேச்சிப்பாறை அணை தண்ணீரில் தோட்டமலைக்கு ஐந்து கிலோ மீட்டர் படகில் பயணித்தோம். அங்கிருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் மலையில் நடந்து தோட்டமலை அரசு ஆரம்பப் பள்ளியை அடைந்தோம். ஆசிரியரைக் கண்டதும் பழங்குடி இன மக்களுக்கு மகிழ்ச்சி. ஒருவர் சேர் கொண்டு வர, ஒருவர் தண்ணீர் கொண்டு வர, ஒருவர் மாம்பழங்கள் கொண்டு வர என ஒரே பரபரப்பு. அந்தச் சமயத்தில் இளைஞர் ஒருவர் தென்னை மரத்தில் சறுசறுவென ஏறி இளநீர் பறித்து வெட்டிக் கொடுத்தார். அதைக் குடித்து விட்டு பேசத் தொடங்கினார்.

ஆசிரியர்

குமரி மாவட்டத்தில் உள்ள கண்ணணூர் என் சொந்த ஊர். தாய்மொழி மலையாளம், படித்ததும் மலையாளம். குடும்ப கொஞ்சம் பெரிய குடும்பம். அப்படி இருந்தாலும் குறைந்த வருமானத்தில், கஷ்டத்துலதான் இருந்தது. அரசு வேலைக்குக் காசு கொடுக்க முடியாத சூழ்நிலை. அப்போது நான் டீச்சர் ட்ரெய்னிங் படிக்கப் போனேன். மெரிட் அடிப்படையில் அப்போது சீட் கிடைத்தது. நான் எஸ்.எஸ்.எல்.சி முதல் பேட்ஜ். 333 மார்க் எடுத்திருந்தேன். 1968-70 வருஷத்தில் டீச்சர் ட்ரெய்னிங்  படித்து முடித்து வெளியே வந்தேன். அப்போது மலையாளத்துக்கு வேலை வாய்ப்பு குறைவு. எனக்கு முன்னால் படித்த விக்ரமன் என்பவர் நீலகிரிக்கு வேலைக்குப் போயிருந்தார். நான் போகிறபோதுதான் ராணுவத்துக்குக் கேரளா எர்ணாகுளத்தில் ஆள் எடுக்கிறார்கள் என்று தெரிந்து அங்கு போய் நடந்த போட்டியில் செலக்ட் ஆனேன்.

சில நாள்கள் கழித்து வரணும் என்று சொன்னபோது அது முடியாமல் நான் நீலகிரிக்கு விக்ரமன் அண்ணணை பார்க்கப் போயிருந்தேன். போகும்போது கோயம்புத்தூர்-ஊட்டி-கூடலூர் போய் அங்கிருந்து கையில் காசு இல்லாமல் 18 கிலோ மீட்டர் நடந்து போனேன். அவர் கூடவே தங்கி வேலை தேடினேன். ப்ருபான்ட் தேயிலை எஸ்டேட் பள்ளிக் கூடத்தில் தற்காலிகமாக வேலை கிடைத்தது. அந்த எஸ்டேட்டில் சுமார் 4,000 பேர் வேலை செய்துகொண்டிருந்தார்கள். நான் மலையாளம் பாடம்  எடுத்தேன். லீவு நாள்களிலும் பள்ளிக் கூடத்தில் வேலை செய்தேன்.

கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது ஆசிரியர்களைப் புதிதாக பணி நியமனம் செய்தனர். எனக்கு அதே பள்ளியில் நிரந்தர வேலை கிடைத்தது. ஒருகட்டத்தில் தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு மாறினேன். அதுதான் என் வாழ்க்கையில திருப்பு முனையாக அமைந்தது. அங்கிருந்து  நெல்லாக்கோட்டைக்கு மாறினேன். அப்போது ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு நிர்வாகியாக செயல்பட்டுக்கொண்டிருந்தேன். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வேண்டும் என ஆசிரியர்கள் 1985-ல் போராட்டம் நடத்தியபோது நானும் அதில் கலந்து கொண்டு சிறை சென்றேன். 

ஆசிரியர்

1989 ஜூலை 12ம் தேதி எனக்குத் திருமணம் நடந்தது. அதற்குள் எம்.ஏ பாஸ் செய்தேன். 1990-ல் ஏற்கெனவே கேட்டிருந்த டிரான்ஸ்பரை வைத்து குமரிமாவட்டம் திருநந்திக் கரை பள்ளிக்கு மாற்றினார்கள். அங்கே தமிழ் மலையாள மீடியம். மலையாளத்துக்கு மாணவர்களும் குறைவு. எனக்குத் தமிழ் தெரியும் என்பதால்  6,7,8  பத்தாம் வகுப்புக்கு சோசியல் ஸ்டடிஸ் எடுத்தேன். அந்தப் பள்ளியில் தங்கி இருந்தேன். நான் அங்கே போகும்போது 18 சதவிகிதம்தான் தேர்ச்சி. திருநந்திக்கரை பள்ளியில் சுற்றுச்சுவர் கிடையாது. அப்போது அங்கே கிட்டத்தட்ட 600-க்கு மேல் மாணவர்கள் படித்துக்கொண்டிருந்தனர். நான் அவர்களிடம் ஆளுக்கு ஒரு முழ நீள செம்பருத்தி கம்பு கொண்டு வரச் சொன்னேன்.

அதை வைத்து மதில்சுவர் போல வரிசையாக நட்டு, தண்ணீர் ஊற்றி வளர்க்க வைத்தேன். அது வளர்ந்து மதில் சுவர் மர சுவராக மாறியது. வெளியே இருந்து பார்த்தால் உள்ளே தெரியாது, உள்ளே இருந்து பார்த்தாலும் வெளியே தெரியாது. நான் போகும்போது அங்கு பெஞ்ச் கிடையாது. ஓலை செட்தான். ஹேம சந்திரன் எம்.எல் ஏ.விடம் பேசி கட்டடம் கட்டினோம். 1990-ல் இருந்து 1993 வரை அங்கே இருந்தேன். நான் திருநந்திக்கரை பள்ளியில் இருந்து வேறு இடத்துக்கு மாறுதலாகிச் செல்லும்போது 70 சதவிகிதத்துக்கு மேல் தேர்ச்சி விழுக்காடு இருந்தது.

அடுத்து தமிழ் ஆசிரியராக திருவிதாங்கோடு மலையாளப் பள்ளிக்கு வந்தேன். அங்கேயும் தமிழும் மலையாளமுமாக இருந்தது. மலையாள ஆசிரியர்களுக்குத் தமிழ் தெரிந்திருந்தால் பதவி உயர்வுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. திருவிதாங்கோடு பள்ளியிலும் ஓலை ஷெட்டுதான். அதையும் பெல்லார்மின் எம்.பி மூலமாகக் கட்டடம் கட்ட முயற்சி எடுத்து நிறைவேற்றினேன். மேல்நிலை பள்ளியில் இருந்து ஆரம்பப் பள்ளி பிரிக்கப்பட்டபோது எனக்குப் பதவிஉயர்வு வந்தது. அப்போது நான் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர். சுசீந்திரம், புறாவிளை, தோட்டமலை என மூன்று பள்ளிகளில் தலைமையாசிரியர் பதவி இருந்தது. நான் தோட்டமலையைத் தேர்ந்தெடுத்தேன்.  நான்தான் அங்கேபோன முதல் அரசு ஆசிரியர்.

தோட்டமலை ஆரம்பப் பள்ளிக்கூடம்  அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் 2006-ல் ஆரம்பிக்கப் பட்டது. ஒரு ஓலை ஷெட்டுதான் பள்ளி. அந்தப் பகுதி காணி பழங்குடி இனத்தைச் சேர்ந்த செல்வி என்கிற சிறுமி, பத்தாம் வகுப்பு வரை படித்திருந்தாள். அவர்தான் தாற்காலிகமாக வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது மூன்றாம் வகுப்பு வரைதான் இருந்தது.12 மாணவர்கள் மட்டுமே இருந்தனர். 2008 ஜனவரி 24-ம் தேதி தான் முதன்முதலாக பேச்சிப்பாறையில் காணி இனப் பழங்குடி மக்கள் வாழும் தோட்ட மலைக்குச் சென்றேன். படகில்தான் செல்ல வேண்டும். எட்டுக் கிலோ மீட்டர் பேச்சிப்பாறை அணை தண்ணீரில் படகில் பயணித்து,அங்கிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் மலையில் நடந்துதான் தோட்டமலை ஆரம்பப் பள்ளிக்குப் போகமுடியும்.

அப்போது சரியான படகு வசதியும் கிடையாது. நான் போன பிறகுதான், ஓலை ஷெட் பள்ளிக் கூடத்தை கட்டடமாக மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தேன். அந்தக் காணி பழங்குடி மக்களின் வீட்டுத் திண்ணைகளில் தங்கினேன். அங்கேதான் தூக்கம். அவர்கள் தருவதுதான் சாப்பாடு. நான் சைவம். ஆனால், அவர்கள் அசைவம் சாப்பிடுவார்கள். இருந்தாலும் எனக்கு அங்கிருந்த பலரும் உதவினர். ஆரம்பத்தில் அவர்களுக்கு என் மீது நம்பிக்கை இல்லை. ‛நம் கலாசாரத்தைக் கெடுத்துவிடுவான்’ என்கிற பயம் இருந்தது. நாளடைவில் என் அணுகுமுறையால் அது மாறியது. தோட்டமலைக்குப் படகு வசதி இல்லாததால் ஒரு படகு வாங்க முயற்சி செய்தேன். 73,000 ரூபாய்க்கு படகு வாங்கினேன். மற்றவர்களும் உதவினர்.

அப்போது கலெக்டராக இருந்த ஜோதி நிர்மலாவை தோட்டமலை பள்ளியைப் பார்க்க  வைத்தேன். அவருடன் அரசு அதிகாரிகளும் வந்திருந்தனர். மின்சாரம் இல்லாமல் இருந்த இந்த மலை கிராமத்துக்கு மின்சாரம் கிடைக்க முயற்சி செய்தேன். பைப் வசதியோடு குடிநீர் கிடைக்கச் செய்தேன். வனத்துறையில் இருந்து எந்தப் பிரச்னையும் வராதபடி பார்த்துக்கொண்டேன். ஓய்வு பெற 14 மாதங்கள் இருந்தன. அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் பெல்லார்மின் எம்.பி மூலமாக தோட்டமலை ஆரம்பப் பள்ளிக்கூட கட்டடம் கட்ட முயற்சி எடுத்தேன். 2008 ஆகஸ்ட்டில்தான் அதற்கு அனுமதி கிடைத்து. 2009 மே மாதம் புதிய பள்ளிக்கூட கட்டடம் திறக்கப் பட்டது.

மூன்றாம் வகுப்பு வரை இருந்த பள்ளியை ஐந்தாம் வகுப்பு வரை மாற்றினேன். தோட்டமலையில் மாலையில் மாணவர்களுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்தேன். நான் ஓய்வு பெறும்போது 36 மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தனர். கழிவறை, ஆஃபீஸ் ரூம், இன்னொரு ஆசிரியர் இங்கு வந்து தங்கினால் அவர் காணி மக்கள் திண்ணையில் தங்கக் கூடாது என்று நினைத்தே பள்ளியைக் கட்டினோம். கடைசி வரை புதிய பள்ளிக் கட்டடத்தில்  தங்காமலே 2009 மே 31-ம் தேதி ஓய்வு பெற்றேன். இந்த தோட்டமலையில் பலருக்கும் முதியோர் பென்ஷன் கிடைக்க உதவி செய்தேன்.

எனக்குக் குழந்தைகள் கிடையாது. மாணவர்கள்தான் என் குழந்தைகள். கஷ்டத்தைப் பார்த்திருந்தால் தோட்டமலைக்கு வந்திருக்க முடியாது. பழங்குடி காணி மக்களுக்குத் தொண்டு செய்த நிறைவு இருக்கிறது. இப்போது ஓய்வு நேரத்தில் அசைபோடும் அழகான நினைவுகளாக என் ஆசிரியப் பணி உள்ளது’’ என அந்தப்  பள்ளி திண்ணையில் சாய்ந்து நினைவுகளில் மூழ்கினார் முரளீதரன்.

நிஜமாகவே ஆசிரியப் பணி அறப்பணிதான்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்