வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (06/09/2017)

கடைசி தொடர்பு:08:24 (07/09/2017)

வீடியோ சர்ச்சை- கட்டாயக் காத்திருப்பில் உதவி கமிஷனர்!

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் பெண் போலீஸ் மீது பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்ட கோவை ஏ.சி ஜெயராமனை கட்டாயக் காத்திருப்பில் வைத்துள்ளார் கோவை கமிஷனர் அமல்ராஜ்.

 கடந்த திங்கள் கிழமை மாலை 4 மணிக்கு கோவை காந்திபுரத்தில் அனைத்து மாணவர் கூட்டமைப்பு சார்பாக நீட்டுக்கு எதிரான போராட்டம் நடந்தது. அதில், மத்திய அரசுக்கு எதிராகவும் மாநில அரசுக்கு எதிராகவும் மாணவர்கள் முழக்கம் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறை கைதுசெய்தது. இந்நிலையில், நேற்று இரவு சமூகவலைதளங்களில் பரவிய ஒரு வீடியோ அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கோவையில் நடந்த போராட்டக்களத்தில் போராட்டக்காரர்களை வேனில் ஏற்றிக்கொண்டிருந்த போலீஸ் கூட்டத்துக்குள் கோவை உதவி கமிஷனர் ஜெயராமன் ஒரு பெண் எஸ்.ஐ-ன் மீது பாலியல் ரீதியாகத் தொடுவது போன்ற காட்சி அதில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்துமாறு கோவை கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டிருந்தார்.

சம்பந்தப்பட்ட பெண் எஸ்.ஐ பேசாத நிலையில், "எந்தத் தவறும் செய்யாத என்னைக் குற்றவாளியைப் போல சித்திரிக்கிறார்கள். எனக்கும் பெண் பிள்ளை இருக்கு. ஒரு சாதாரண மனிதன்கூட அந்த இடத்தில் அப்படி நடந்துகொள்ள மாட்டான். அந்த வீடியோவைப் பார்த்ததும் நான் அதிர்ச்சியாகிவிட்டேன். என் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறோம். வெறும் பரபரப்புக்காக என்னென்னமோ செய்கிறார்கள். என் பொண்ணு முகத்தில் எப்படி விழிப்பேன்? என்று ஜெயராமன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், உதவி கமிஷனர் ஜெயராமனை டி.ஜி.பி அலுவலகத்துக்கு மாற்றி, கட்டாயக் காத்திருப்பில் வைத்துள்ளனர். அவர் மீதான விசாரணை நடக்கும்பொழுது அவர் பணியில் இருந்தால், விசாரணையில் தடங்கல் ஏற்படும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும். இனிமேல்தான் விசாரணை நடக்கவிருப்பதாகவும் கோவை கமிஷனர் அமல்ராஜ் தெரிவித்தார். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக பணி நீக்கம் கூட செய்யப்படலாம் என்கிறார்கள்.