மருத்துவ மாணவர்கள் கண்தான விழிப்பு உணர்வுப் பேரணி! | students of nellai medical college gone for a rally to give eye donation awareness to people

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (06/09/2017)

கடைசி தொடர்பு:08:15 (07/09/2017)

மருத்துவ மாணவர்கள் கண்தான விழிப்பு உணர்வுப் பேரணி!

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் பொதுமக்களிடம் கண் தானம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்தினார்கள்.

பேரணி

நெல்லை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கமும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் இணைந்து தேசிய கண்தான விழிப்பு உணர்வு பேரணியை நடத்தின. இதையொட்டி, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கண்தானம் குறித்த பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. மருத்துவ மாணவர்கள் மற்றும் செவிலிய மாணவர்கள் பங்கேற்ற இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குச் சான்றிதழும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

மாணவர்கள் பேரணி

பின்னர் கடந்தாண்டு கண்தானம் செய்த 26 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார். அப்போது பேசிய அவர், ’’நாடு முழுவதும் பார்வைக் குறைபாடுகளுடன் பலர் உள்ளனர். அவர்களுக்குக் கண் கிடைத்தால் மீண்டும் பார்வை பெறும் வாய்ப்பு உள்ளது. ஆனால், நமது நாட்டில் 30 சதவிகிதம் மட்டுமே கண்தானமாகக் கிடைக்கிறது. இதனால் பலர் கண் பார்வை பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, கண் தானம் குறித்து அனைவருக்கும் விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. 

ஏழை, எளிய மக்கள் பார்வை பெறும் வகையில் அனைவரும் கண்தானம் செய்ய வேண்டும். கண்தானம் செய்தவர்கள் மரணம் அடையும்போது அவர்களின் உறவினர்கள் உரிய நடவடிக்கை எடுத்து உரிய சமயத்தில் மருத்துவமனைக்குத் தகவல் அளித்தால் மட்டுமே தானம் செய்ய நினைத்தவர்களின் எண்ணம் நிறைவேறும். அதனால் குடும்பத்தினர் இதைக் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டியது அவசியம். இந்த நிகழ்ச்சியில் கண்தானம் செய்தவர்களின் குடும்பத்தினரைப் பாராட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார். 

பின்னர், மருத்துவக் கல்லூரி மாணவர்கள், செவிலிய மாணவர்கள் பங்கேற்ற பேரணி மருத்துவமனையில் இருந்து பெரியார் நகர் வரை நடந்தது. இதில், கண் தானம் குறித்த விழிப்பு உணர்வுப் பதாகைகளைக் கையில் ஏந்தியபடியே ஊர்வலமாகச் சென்றனர். மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் டாக்டர்.ரவிச்சந்திரன், துணை முதல்வர் டாக்டர்.ரேவதி மற்றும் பயிற்சி மருத்துவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் கலந்துகொண்டனர்.