வெளியிடப்பட்ட நேரம்: 08:50 (07/09/2017)

கடைசி தொடர்பு:15:49 (07/09/2017)

லாரிகள் விபத்து: மீட்புக்குச் சென்ற பெண் எஸ்.ஐ பலியான சோகம்!

நெல்லையில் லாரிகள் ஒன்றுடன் ஒன்று  மோதிக் கொண்டதால் ஏற்பட்ட விபத்தில் மீட்புப் பணிக்காகச் சென்ற பெண் எஸ்.ஐ-யான அகிலா என்பவர் மீது மற்றொரு வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். 

பெண் எஸ்.ஐ அகிலா

நெல்லை மாவட்டம் தாழையூத்து காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர், அகிலா. விக்கிரமசிங்கபுரம் காவல்நிலையத்தில் பணியாற்றிய அவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தாழையூத்து ஸ்டேஷனுக்கு மாறுதலாகி வந்தார். அவர் பணியில் இருந்தபோது, சென்னை-கன்னியாகுமரி நான்குவழிச் சாலையில் உள்ள நாரணம்மாள்புரம் விலக்கு என்ற இடத்தில் இரண்டு லாரிகள் மோதி விபத்துக்குள்ளானதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சமபவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டார். 

சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த கேஸ் சிலிண்டர் ஏற்றிச் சென்ற லாரியின் மீது அந்த வழியாக வந்த தண்ணீர் டேங்கர் லாரி மோதியது. இதில் இரு லாரிகளிலும் இருந்த 3 பேர் காயம் அடைந்தனர். அத்துடன், சிலிண்டர் லாரி கவிழ்ந்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறை உதவி ஆய்வாளரான அகிலாவும் அவருடன் சென்ற காவலர்களும், லாரியின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர், காவல்துறையின் மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு. சாலையோரத்தில் உருண்டு கிடந்த சிலிண்டர் லாரியைத் தூக்கும் பணி நடைபெற்றது. அப்போது அந்தப் பணிகளை மேற்பார்வையிட்ட எஸ்.ஐ அகிலா, நான்குவழிச் சாலையின் ஓரத்தின் நின்றபடியே உதவி செய்துகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பழம் ஏற்றிக்கொண்டு நாகர்கோவில் செல்வதற்காக வேன் ஒன்று வேகமாக வந்துள்ளது.

சாலையில் நின்று கொண்டிருந்த அகிலா மீது அந்த வேன் வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்யச் சென்ற பெண் எஸ்.ஐ அகிலா விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் பற்றி அறிந்ததும் நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரான அருண்சக்தி குமார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். இந்த விபத்து காவல்துறையினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. வேன் டிரைவர் மாதவன் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வாகனம் ஓட்டும்போது வேன் டிரைவர் மாதவன் கண் அயர்ந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

பலியான பெண் எஸ்.ஐ அகிலா நேர்மையானவர் என்றும் பிறருக்கு உதவும் குணம் கொண்டவர் என்றும் சக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். மீட்புக்குச் சென்ற இடத்தில் கவனக் குறைவுடன் அவர் சாலையில் நின்றுகொண்டு இருந்ததை உடன் இருந்த காவலர்களாவது சுட்டிக்காட்டி இருந்தால் இந்த விபத்தைத் தடுத்திருக்க முடியும் என அங்கலாய்க்கிறார்கள், தாழையூத்து காவல்நிலையத்தில் அவருடன் பணியாற்றிய சக ஊழியர்கள்.