Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாணவர்களின் நீட் போராட்டத்தை திசைதிருப்பும் தமிழக அரசு!

                 நீட் தேர்வு போராட்டம்

‘நீட்’ தேர்வை எதிர்த்து அரியலூர் மாணவி அனிதா பற்றவைத்த நெருப்பை அணையாமல் காப்போம் என்ற உறுதிமொழியுடன் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கினார்கள் அரியலூர் அரசுக் கல்லூரி மாணவர்கள். இது ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் போன்று உருவாகி விடக்கூடாது என்பதற்காக, மாணவர்கள் விஷயத்தில் நேரடியாக களமிறங்கியிருக்கிறது தமிழக அரசு.

நீட் தேர்வு என்ற முரட்டு சட்டத்தால் அனிதாவின் உயிரைப் பறித்த மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துக் கொண்டிருக்கின்றன. அரியலூர் அரசுக் கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து மூன்று நாள்களாக உள்ளிருப்புப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்னொருபுறம் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் முற்றுகைப் போராட்டம் நடத்தி, அரியலூர் மாவட்டத்தையே திக்குமுக்காட வைத்திருக்கிறார்கள். இரண்டு நாள்கள் போராட்டம் நடத்திவிட்டுச் சென்றுவிடுவார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தது கல்லூரி நிர்வாகம். ஆனால், மாணவர்களின் போராட்டத்துக்கு பொதுமக்களும் ஆதரவு தெரிவித்ததுடன் சாப்பாடு, டீ, பிஸ்கெட்கள் கொடுத்து, தங்களது ஆதங்கத்தை மாணவர்களிடம் தெரிவித்துவருகின்றனர்.

                                நீட் தேர்வு போராட்டம்

மாணவர்களின் இத்தகைய போராட்டம், மாவட்ட நிர்வாகத்துக்கும், காவல்துறைக்கும் பெரும் தலைவலியைக் கொடுத்துள்ளது. 'போராட்டத்தை நிறுத்திக்கொள்ளுங்கள்' என்று கேட்டு போலீஸார், மாணவர்களிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதற்கு மாணவர்கள், "கல்வியைப் பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றவேண்டும், அனிதாவின் மரணத்துக்கு நியாயம் வேண்டும், அனிதாவின் உயிரைப் பறித்த மத்திய, மாநில அரசுகள் பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை எங்கள் போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை" என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். இதனால், செய்வதறியாமல் திகைத்துப் போயிருக்கிறார்கள் அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும். அரியலூர் மாவட்டத்தில் கல்லூரியிலேயே மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவதால், பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இதனால், 'அரியலூர் மாணவர்களின் போராட்டத்தை எப்படியாவது தடுத்து நிறுத்துங்கள்' என்று தமிழக அரசே மாவட்ட நிர்வாகத்திடம் சொல்ல, நேற்றிரவு அவசர அவசரமாக கலெக்டர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், கல்லூரி முதல்வர் என மூவரும் கூடிப் பேசியிருக்கிறார்கள்.

அப்போது, என்ன செய்தால் மாணவர்களின் போராட்டத்தைத் தடுத்து நிறுத்தலாம் என்று ஆலோசனை நடத்தியுள்ளனர். தவறான முடிவேதும் எடுத்தால், அது போராட்டத்தைத் தீவிரப்படுத்திவிடும் என்பதால் மிகக் கவனமாகக் கையாள வேண்டும் அப்போது விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, கல்லூரிக்கு மூன்று நாள்கள் விடுமுறை விடலாம். அப்படிச் செய்தால் மாணவர்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குச் சென்றுவிடுவார்கள். 'விடுமுறை முடிந்து, மாணவர்களின் பெற்றோர்களிடம் பேசிவிட்டுக் கல்லூரியைத் தொடங்கலாம்' என்று முடிவெடுத்து கல்லூரிக்கு விடுமுறை அளித்திருக்கிறார்கள் கல்லூரி நிர்வாகத்தினர்.

                நீட் தேர்வு போராட்டம்

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் கார்த்தியிடம் பேசினோம். "தலைவாருவதற்கு சீப்பை ஒழித்து வைத்தால், கல்யாணத்தைத் தடுத்து நிறுத்திவிடலாம்னு கல்லூரி நிர்வாகத்தினர் நினைக்கிறார்கள். எங்கள் போராட்டத்தை இவர்களால் ஒன்றும் செய்யமுடியாது. மக்களே வேண்டாம் என்று சொல்லும் திட்டங்களை ஏன் வலுக்கட்டாயமாக இந்த அரசுகள் திணிக்கிறார்கள் என்று தெரியவில்லை. மக்களுக்காகத்தானே இந்த அரசு இருக்கிறது. இதுவே எங்களுக்கு பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. மத்திய, மாநில அரசுகள் ஒரு உயிரை ப் பலிகொடுத்துவிட்டு, அனிதாவின் தற்கொலையைக் கொச்சைப்படுத்த நினைக்கிறது. தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தலைவர் அனிதாவின் சாவில் மர்மம் இருக்கிறது. இதனை சிபிஐ விசாரிக்கவேண்டும் என்று கூறி, இந்தப் பிரச்னையை தி.மு.க பக்கம் திருப்பப் பார்க்கிறார். நான் அவரிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறேன். இதே அவருடைய பெண்ணாக இருந்தால் இதுபோன்ற கருத்துகளைத் தெரிவிப்பாரா? நீங்கள் உதவிசெய்யவில்லை என்றாலும் பரவாயில்லை; தயவுசெய்து உபத்திரவம் செய்யாதீர்கள். அனிதா பிரச்னையை இரும்புக்கரம் கொண்டு அடக்கிவிடலாம் என்று அரசு கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறது.

எங்களை யாராலும் அடக்கமுடியாது. மாணவர்கள் சக்தியை ஜல்லிக்கட்டு போராட்டத்திலேயே பார்த்திருப்பார்கள். எனவே, எங்களை சீண்டிபார்க்காதீர்கள். பிரச்னை மேலும் பெரிதாகிவிடும். எங்களுக்குத் தேவை அனிதாவின் மரணத்துக்கு நீதி.மற்றொன்று நீட் தேர்வைத் தடை செய்யவேண்டும் அவ்வளவுதான். அதைச் செய்துவிட்டால் எங்கள் போராட்டம் முடிவடைந்துவிடும். அதை விட்டுவிட்டு வேறு எதுவும் செய்ய நினைத்தால் விபரீதம் ஆகிவிடும்" என அரசை எச்சரித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close