Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்..! வைகோ கண்டனம்

'பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர் முற்போக்கு எழுத்தாளர்கள், இடதுசாரிச் சிந்தனையாளர்கள் மீதான தாக்குதல்கள் நடந்துவருகின்றன' என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

தீவிர இந்துத்துவா எதிர்ப்பாளர் மற்றும் மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ், கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தச் செயலுக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்துத்துவா வகுப்புவாத மதவெறிக் கும்பலின் ரத்த வெறிக்கு மேலும் ஒரு சிந்தனையாளர் பலியாகியுள்ளார். கன்னடப் பத்திரிகையான ‘லங்கேஷ் பத்திரிகே’ வார இதழின் நிறுவனரும் முதன்மை ஆசிரியருமான கௌரி லங்கேஷ், பெங்களூரில் செப்டம்பர் 5-ம் தேதி இரவு தனது வீட்டில் இருந்தபோது, மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பெண் பத்திரிகையாளராகப் பல்வேறு ஆங்கில நாளேடுகளில் பணியாற்றிய கௌரி லங்கேஷ் வகுப்புவாதம், மதவாதத்துக்கு எதிராக தொடர்ச்சியாக குரல்கொடுத்து வந்தவர். ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துத்துவா நாசகார சக்திகளின் வலதுசாரிக் கொள்கைகளைத் துணிச்சலுடன் தீவிரமாக எதிர்த்து வந்தவர். குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கலவரங்கள், இர்ஷத் ஜஹான் உள்ளிட்ட போலி மோதல் கொலைகள்குறித்து ராணா ஐயூப் எழுதிய ‘குஜராத் ~பைல்ஸ்’ நூலை கன்னடத்தில் மொழிபெயர்த்த கௌரி லங்கேஷ், மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தவர்.

மனித உரிமைகள் செயற்பாட்டாளரான கௌரி லங்கேஷ், நக்ஸலிசம்குறித்து மிக விரிவாகப் பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதியவர். நக்ஸலைட்டுகளின் வாழ்வில் மறுமலர்ச்சி காண, அவர்களுக்காக பரிவுடன் செயல்பட்டுவந்தார். தமது பத்திரிகையின் வாயிலாக சமூக நல்லிணக்க மன்றம் (Communal Hormony Forum) என்ற அமைப்பை முன்னெடுத்து வந்தார். இந்துத்துவா சக்திகள், நாடு முழுவதும் ஏவி விட்டுவரும் மத பயங்கரவாதத்துக்கு எதிராக கடுமையாகக் குரல்கொடுத்துப் பேசியும், எழுதியும் வந்தார். மதவெறியர்கள், கௌரி லங்கேஷ் மீது பல அவதூறு வழக்குகளைத் தொடர்ந்தனர். கொலை மிரட்டல்கள் இருந்தபோதும், துணிச்சலும் நேர்மையும்கொண்ட பத்திரிகையாளராகத் தனது கொள்கையில் உறுதியாக இருந்தவர்.

இந்துத்துவா கருத்தியலை எதிர்த்ததற்காக, கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது.  2015 ஆகஸ்டு 30-ம் தேதி, கர்நாடகாவில் சாகித்ய அகாதமி விருதுபெற்ற கன்னட எழுத்தாளரும், ஹம்பி கன்னடப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான எம்.எம்.கல்புர்கி மர்ம நபர்களால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு முன்பு, மகாராஷ்டிராவில் 2015 பிப்ரவரி 20ல் முற்போக்கு எழுத்தாளரும், இடதுசாரிச் சிந்தனையாளருமான 82 வயது கோவிந்த் பன்சாரே, நடைபயிற்சியின்போது சுட்டுக் கொல்லப்பட்டார். 2013ல், அதே மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடிய சிந்தனையாளர், நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்டார். 

தபோல்கர், பன்சாரே, கல்புர்கி ஆகிய முற்போக்கு எழுத்தாளர்கள், இந்துத்துவா மதவெறிக் கும்பலுக்கு எதிராகச் செயல்பட்டதால், சுட்டுக் கொல்லப்பட்டதைப் போன்றுதான், தற்போது பெங்களூரில் கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர், முற்போக்கு எழுத்தாளர்கள், இடதுசாரிச் சிந்தனையாளர்கள் மீதான தாக்குதல்கள் நடந்துவருகின்றன. சகிப்பின்மைக்கு எதிராக நாடு முழுவதும் எழுத்தாளர்கள், படைப்பாளிகள் தங்கள் சாகித்ய அகாதமி உள்ளிட்ட அரசின் விருதுகளைத் திரும்ப ஒப்படைத்தனர்.

கருத்துரிமைக்கு எதிராக அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பேச்சுரிமை, எழுத்துரிமைக்கு எதிராக இந்துத்துவ மதவெறிக் கும்பல் தொடர்ந்து வன்முறையில் ஈடுபடுவதற்கு, மோடி அரசு வழங்கிவரும் ஆதரவுதான் பின்னணி என்பதை நாடு அறியும். இந்தியாவின் பன்முகத் தன்மையை சீர்குலைத்துவரும் மதவெறி சக்திகளின் ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டியது, மதச் சார்பற்ற ஜனநாயக முற்போக்கு சக்திகளின் முதன்மையான கடமை என்பதைப் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை உணர்த்துகிறது. 

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலைக்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து, சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை வழங்க வேண்டும். படுகொலை செய்யப்பட்ட கௌரி லங்கேஷ் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், அவர் வாழ்நாள் முழுதும் எந்தக் கொள்கைக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டாரோ, அந்த லட்சியங்களை வென்றெடுக்க உறுதி ஏற்போம்' என்று குறிப்பிட்டுள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement