காணாமல்போனது நடிகர் பிரகாஷ்ராஜின் மகளா? மறுக்கும் லலிதாகுமாரி

சினிமா

தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் நடித்து வரும் நடிகர் பிரகாஷ்ராஜ் - லலிதாகுமாரியின் மகளான அபிர்னா, இன்று காலை முதல் காணவில்லை என்று செய்தி வெளியானது . ஆனால், அதை லலிதா குமாரி மறுத்துள்ளார். தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான ஆனந்தன் பேத்தியும், பிரபல நடிகை டிஸ்கோ சாந்தியின் தங்கையுமான லலிதாகுமாரியும், நடிகர் பிரகாஷ்ராஜும் கடந்த 1996-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒரு மகன் பிறந்து விபத்தில் காலமாகிவிட்டார்.

கடந்த 2009-ம் ஆண்டு லலிதாகுமாரியும் பிரகாஷ்ராஜும் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் பரஸ்பர விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்தனர். இதன் அடிப்படையில், விவாகரத்து வழங்கப்பட்டது. விவாகரத்து பெற்றாலும் பிரகாஷ்ராஜும் லலிதாகுமாரியும் சுமுகமாகவே இருந்தனர். பிரகாஷ்ராஜும் தன் மகள்களை அடிக்கடி சந்தித்துவந்தார். பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் வெளியான 'பயணம்' படத்தை வெளியிடுவதற்கு சில ஃபைனாசியர்களால் சிக்கல் ஏற்பட்டது. அந்தச் சமயத்தில்கூட லலிதாகுமாரி தன் சொத்தை உத்தரவாதமாக அளித்து அந்தப் படம் வெளியாக உதவினார். பின்னர், பிரகாஷ்ராஜ் வேறொரு பெண்ணை மணம் முடித்துவிட்டார். இந்நிலையில்தான் பிரகாஷ்ராஜின் இரண்டாவது மகள் அபிர்னா, இன்று காலை முதல் காணவில்லை என்றும், தாம் பிரகாஷ்ராஜின் உறவினர் என்றும் ஒருவர் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், லலிதாகுமாரியைத் தொடர்புகொண்டு கேட்டபோது, "அது, தன் மகள் இல்லை. மற்ற விவரங்களை விரைவில் வெளியிடுகிறேன்" என்று கூறினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!