வெளியிடப்பட்ட நேரம்: 13:47 (07/09/2017)

கடைசி தொடர்பு:19:38 (07/09/2017)

‘தினகரன் டு எடப்பாடி பழனிசாமி!’  - எப்படி நடக்கிறது எம்.எல்.ஏ-க்கள் வளைப்பு? #VikatanExclusive

தினகரன்

அ.தி.மு.க-வின் பொதுக்குழு கூடுவதற்குள், ஆட்சிக்கான பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் சில திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார், முதல்வர் பழனிசாமி. அதன் ஒருபகுதியாக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை வளைக்கும் வேலைகளும் நடந்து வருகின்றன. இன்று, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., ஜக்கையன், எடப்பாடி பழனிசாமி அணிக்குத் தாவியதும் இந்த அடிப்படையில்தான்' என்கின்றனர், ஆளும்கட்சி வட்டாரத்தில்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ள தினகரன் அணி எம்.எல்.ஏ-க்கள், ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்துக் கடிதம் கொடுத்தனர். ஆனால், அதற்கு இதுவரை ஆளுநர் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. புதுச்சேரியில் உள்ள ரிசார்ட்டில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களில் சிலர், மன வருத்தத்தில் இருப்பதாகத் தகவல் வெளியானது. அதை, தங்கச் தமிழ்செல்வன் எம்.எல்.ஏ மறுத்ததோடு, எங்கள் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஒற்றுமையாக இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களிடம் முதல்வர் தரப்பிலிருந்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருகிறது. அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக முதல்வர் தரப்பு தெரிவிக்கிறது.

'செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்துக்கு முன்பே தினகரனின் கூடாரம் காலியாகிவிடும்' என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய தரப்பு கணக்குப் போட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்துவருவதாக, உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. 
 இந்தச் சூழ்நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ரத்னசபாபதி, கலைச்செல்வன் மற்றும் அ.தி.மு.க கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ., கருணாஸ், ஏழு எம்.பி-க்கள் உள்ளிட்டோர், தினகரன் தலைமையில் மீண்டும் ஆளுநரைச் சந்தித்தனர். அப்போது, முதல்வரை மாற்றுவது குறித்து மீண்டும் வலியுறுத்துவதோடு, சட்டசபையில் பெருபான்மையை நிரூபிக்க வலியுறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகைக்குச் சென்ற நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-வான எஸ்.டி.கே.ஜக்கையன், சபாநாயகரைச் சந்தித்தார். இது, அ.தி.மு.க-வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் பழனிசாமி

நிர்வாகிகளைக் கட்சியிலிருந்து தினகரன் நீக்குவதற்கு அ.தி.மு.க-வில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. பொதுக்குழுவில், சசிகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி என்றும் தினகரனுக்குச் சொல்லப்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த தினகரன், பொதுக்குழுவை நடத்தினால்தான் சிக்கல், அதற்குத் தடை ஏற்படுத்த என்ன வழிவகை இருக்கிறது என்று சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்துவருகிறார். அ.தி.மு.க-வின் சட்டவிதிகள்மூலம் பொதுக்குழுவை நடத்த முட்டுக்கட்டை ஏற்படுத்தும் முயற்சிகள் தீவிரமாக நடந்துவருகின்றன.

இதுகுறித்து நம்மிடம் பேசிய கொங்கு மண்டல அ.தி.மு.க பிரமுகர் ஒருவர், “அ.தி.மு.க-வில் தினகரனின் ஆதரவாளர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, புதுச்சேரியில் தங்கியிருந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் சோர்வடைந்துள்ளனர். அவர்களில் சிலர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினருடன் நெருக்கத்தில் இருக்கின்றனர். இதை அறிந்துதான் ஆளுநரைச் சந்திக்க முடிவு செய்தார் தினகரன். தினகரனின் ஒவ்வொரு திட்டத்தையும் முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு, அதற்கேற்ப தடையை ஏற்படுத்திவருகிறது.

தினகரனிடமிருக்கும் எம்.எல்.ஏ-க்களில் சிலருக்கு அமைச்சர் பதவி தருவதாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. மேலும், சிலருக்கு வாரியத் தலைவர் பதவிகளும் வழங்கப்பட உள்ளன. இந்த உறுதிமொழியை ஏற்று 10 எம்.எல்.ஏ-க்கள் முதல்வரைச் சந்திக்கும் மனநிலைக்கு வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன. அத்தகைய மனநிலையிலிருக்கும் எம்.எல்.ஏ-க்களிடம், தினகரனும் உருக்கமாகப் பேசியுள்ளார். ஆனால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் குடும்ப உறுப்பினர்களின் மனதைக் கரைத்துவருகிறது முதல்வர் தரப்பு. பொதுக்குழு கூடுவதற்குள் இந்த அரசுக்கான பெரும்பான்மை அளவை பெற்றுவிடுவோம்" என்றார் உறுதியாக. 

இதுகுறித்து நம்மிடம் பேசிய தினகரன் ஆதரவாளர் ஒருவர், “புதுச்சேரியில் எம்.எல்.ஏ-க்களை தினகரன் சந்தித்தபோது, ‘நம்முடைய அணியிலிருப்பவர்களுக்குப் பல நெருக்கடிகள் வருகின்றன. ரிசார்ட்டில் தங்கியிருப்பதால் எந்தப் பயனுமில்லை. தொகுதியில் எங்களுக்கு எதிராக மக்கள் திசை திருப்பப்படுகின்றனர். ஆளுநர் தரப்பிலிருந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை' என ஆதங்கப்பட்டுள்ளனர். அதைக் கேட்ட தினகரன், ' இன்னும் சில தினங்களில் நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், நாள்கள் கடந்தநிலையில், எந்த முடிவும் எட்டப்படவில்லை. வீட்டுக்குச் செல்லும் மனநிலையில் இருந்த எம்.எல்.ஏ-க்கள், ரிசார்ட்டிலிருந்து கிளம்பிவிட்டனர். வீட்டுக்குச் சென்ற எம்.எல்.ஏ-க்களிடம் அவர்களது குடும்பத்தினர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிக்குச் செல்ல வலியுறுத்தியுள்ளனர். 'பொதுக்குழுவில் சசிகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டால், உங்கள் நிலைமை என்னவாகும்' எனவும் அறிவுரை கூறியுள்ளனர். இதனால், ஒரு சில எம்.எல்.ஏ-க்கள் குழப்பத்தில் இருப்பது உண்மைதான். அதையும் பேசிச் சரிசெய்யும் வகையில் தினகரன் செயல்பட்டுவருகிறார்" என்றார் விரிவாக.


டிரெண்டிங் @ விகடன்