Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

' அம்மாவின் ஆன்மா சொன்னது என்ன?!'   - மெரினாவைக் கலங்கடித்த மாரியப்பன்

நீட் தேர்வுக்கு எதிராக மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் தியானம் மேற்கொண்டு அதிர வைத்துள்ளனர் மாணவர்கள். போராட்டக்காரர்களை அப்புறப்படுத்திய கையோடு, மெரினாவுக்குள் மக்கள் செல்லவும் தடை விதித்துள்ள சென்னை மாநகர காவல்துறை. ' பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் தியானம் மேற்கொள்ளும்போது கண்டுகொள்ளாத காவல்துறை அதிகாரிகள், எங்கள் மீது மட்டும் அடக்குமுறையை ஏவுகிறார்கள்' எனக் கொந்தளிக்கின்றனர். 

மருத்துவம் படிக்க முடியாத கவலையில், கடந்த வாரம் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார், அரியலூர் மாணவி அனிதா. மாணவியின் மரணத்துக்கு நியாயம் கேட்டும் நீட் தேர்வை ஒழிக்கக் கோரியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டங்களை நடத்திவருகின்றனர். இந்தப் போராட்டங்களை 20 நிமிடத்துக்குள் முடிவுக்குக்கொண்டு வந்துவிடுகிறது காவல்துறை. இதையும் மீறி சட்டக் கல்லூரி மாணவர்களும் அரசு கலைக் கல்லூரி மாணவர்களும் வீதிகள்தோறும் போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். நேற்று யாரும் எதிர்பாராத வகையில், முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஜெயலலிதா சமாதியில் கூடினர்.

 சுமார் 30 நிமிடங்கள் கண்களை மூடி தியானித்துள்ளனர். பன்னீர்செல்வம், தினகரன் எம்.எல்.ஏ-க்கள் பாணியில் மாணவர்களும் தியானத்தில் களமிறங்கியது காவல்துறையை அதிரவைத்தது. மௌனமாக நடந்த தியானப் புரட்சியை, அடுத்த சில நிமிடங்களில் கலைக்கத் தொடங்கியது காவல்துறை. தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவும் செய்துள்ளனர். 

 தியானப் போராட்டத்தை முன்னெடுத்த இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மாரியப்பனிடம் பேசினோம். "அம்மா ஆன்மாவின் விருப்பத்துக்கு எதிராக இங்குள்ள காவலர்களும் ஆட்சியாளர்களும் செயல்படுகின்றனர். நீட் தேர்வு, மாநில உரிமையைப் பறிக்கும் செயல். ' சமூக நீதிக்கு எதிரானது.'  என்பதில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உறுதியாக இருந்தார். அதனால்தான், அவரது சமாதியை போராட்டக்களமாக்க முடிவு செய்தோம். அவரது பெயரால் ஆட்சி நடத்துகிறவர்கள், மாநில உரிமைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதில்லை. ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட எம்.எல்.ஏ-க்கள் தியானம் செய்ய அனுமதி அளிக்கின்றனர். ஆனால், மாணவர்களுக்கு தியானம் செய்ய அனுமதி மறுக்கின்றனர். எங்களைக் கைதுசெய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். எல்லோருக்கும் சட்டம் ஒன்றுதானே. தியானத்தின்போது ஜெயலலிதா ஆன்மா எங்களிடம் ஒன்றும் பேசவில்லை. நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயப்போவதில்லை" என்றார் உறுதியாக. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close