Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“அநியாயத்துக்கு எதிராக என் மகள் தொடர்ந்து போராடுவாள்!” - கம்பீரமாகச் சொல்லும் வளர்மதியின் தந்தை மாதையன்

வளர்மதி

பொதுமக்களிடையே துண்டுப்பிரசுரம் கொடுத்து அரசுக்கு எதிராகக் கலகம் செய்ததாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட வளர்மதி, அடக்குமுறையின் தடைகளை உடைத்திருக்கிறார்.

சேலம், அரசு மகளிர் கலைக்கல்லூரி அருகில் மாணவி வளர்மதி துண்டுப்பிரசுரம் வழங்கினார். 'இயற்கை பாதுகாப்புக் குழு' என்று அந்தத் துண்டுப்பிரசுரத்தில் அச்சிடப்பட்டிருந்தது. 'நெடுவாசல், கதிராமங்கலம் மக்களுடன் கரம் கோர்ப்போம்’ என்ற தலைப்பில் டெல்டா பகுதியில் செயல்பட்டுவரும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரானப் போராட்டங்களில் கலந்துகொள்ளக் கேட்டிருந்தார். 

இதைக் காரணம் காட்டி கைது செய்யப்பட்ட வளர்மதியின் மீது, மக்கள் பிரச்னைகளுக்காக போராடியது தொடர்பான பழைய வழக்குகளையும் இணைத்தனர். சேலம் ஆணையர் சஞ்சய்குமார் வளர்மதியைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, கோவை மத்திய சிறையில் வளர்மதி அடைக்கப்பட்டார். இதற்குத் தமிழக அளவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. வளர்மதியின் தந்தையான மாதையன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வளர்மதியைக் குண்டர் சட்டத்தில் அடைத்தது செல்லாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதையடுத்து, அவர் இன்று விடுதலையாகிறார். 

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நான்கு ஆண்டுகள் வேளாண்மைப் படிப்பை முடித்துவிட்டு, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இதழியல் பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார் வளர்மதி. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதால், பல்கலைக்கழகத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். முற்போக்கு சிந்தனையாளரான மாதையன், வளர்மதியையும் முற்போக்குடன் அநியாயத்தைத் தட்டிக்கேட்கும் வீரத்துடன் வளர்த்துள்ளார். வீராணம் அருகில் பள்ளிக்கூடத்தானூர் பகுதியில் சிறிய ஓட்டல் கடை நடத்திவந்த மாதையன், சில ஆண்டுகளாக விசைத்தறி நடத்திவருகிறார். வளர்மதியின் தாய் கமலா, விவசாய கூலி வேலை செய்கிறார். 55 நாள் சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலையாகி வரும் மகளுக்காகக் காத்திருக்கிறது அந்தச் சிறிய வீடு. வளர்மதியை அழைத்துவர அவரின் அண்ணன் ஜீவானந்தத்தை அனுப்பிவிட்டுக் காத்திருக்கும் மாதையனிடம் பேசினோம். 

வளார்மதி

‘‘என் பொண்ணு பலமுறை சிறைக்குப் போயிருக்கா. இந்தமுறை அதிக நாள் சிறையிலிருந்துவிட்டு திரும்பி வர்றா அவ்வளவுதான். அவளைப் பொண்ணுன்னு பிரிச்சுப் பார்த்து வளர்க்கலை. அவள் எனக்கே பாடம் சொல்லும் அளவுக்கு வளர்ந்து நிக்கிறா. சிதம்பரத்தில் படிச்சப்போ, ஸ்காலர்ஷிப் பிரச்னைக்காக ஆயிரக்கணக்கான மாணவர்களைத் திரட்டிப் போராடி கைது செய்யப்பட்டாள். அப்போதிருந்தே போலீஸுக்கு அவளைக் கண்டால் பிடிக்காது. படிப்பை முடிச்சுட்டு வந்ததுக்கு அப்புறமும் சமூகப் பிரச்னைகளுக்காக போராடுறதை வளர்மதி நிறுத்தலை. நோட்டீஸ் கொடுத்தால்கூட வழக்குப் போட்டு கைது செய்றதை போலீஸ் வழக்கமா வெச்சுருக்கு. நெடுவாசல் போராட்டம் நடந்தப்போ, என் பொண்ணு ரயிலில் திருச்சிக்குப் போனா. ரயில்லேயே நோட்டீஸ் கொடுத்திருக்கா. அவள் ரயிலைவிட்டு இறங்கினதும் போலீஸ் கைது பண்ணி, திருச்சி சிறையில் அடைச்சது. ஒரு மாசம் சிறையிலிருந்துட்டு திரும்பினா. அப்புறம், கதிராமங்கலம் போராட்டத்துக்காக நோட்டீஸ் கொடுத்ததுக்கு குண்டர் சட்டத்தில் அடைச்சுட்டாங்க. 

நம்ம பொண்ணு போராட்டம் போராட்டம்னு போறாளே. அவளுக்கு எப்படி நல்லது கெட்டது செய்யறதுண்டு வளர்மதியின் அம்மா சில சமயம் கவலைப்படுவாங்க. நான்தான் சமாதானம் பண்ணி தேத்துவேன். எல்லாருமே குடும்பம், குழந்தைன்னு வாழ்ந்துட்டிருந்தா, சமூகப் பிரச்னையை யார்தான் தட்டிக் கேட்கிறது? வளர்மதி நியாயத்துக்காகத்தானே போராடுறா. அதுல ஒண்ணும் தப்பில்லையே. எதிர்ப்பு வந்தாலும் என் பொண்ணு தைரியமா நிற்பாள். கோவைச் சிறையில் 'தன்னை குண்டர் சட்டத்தில் கைது பண்ணினது தப்பு'னு சொல்லி சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கினா. மூணு நாளாக எதுவும் சாப்பிடாமல் என் மகள் வாடிப்போய் இருந்தா. அவளைப் பார்க்க சிறைக்குப் போயிருந்தேன். தைரியம் சொன்னாலும், அவள் சாப்பிடாம கஷ்டப்பட்டதை ஏத்துக்க முடியலை. என் பொண்ணு அப்படி என்ன தப்பு செய்தா? உண்ணாவிரதத்தை கைவிடச் சொல்லிட்டு, அநியாயத்துக்கு எதிரா நானே வழக்குத் தொடர்ந்தேன். நியாயம் நம்ம பக்கம் இருக்கும்போது எதுக்கு பயப்படணும்? நோட்டீஸ் கொடுத்து, மறியல் பண்ணினதும் பெரிய குற்றம் கிடையாது. தங்கள் உரிமைக்குப் போராடறதும் அநியாயத்தைத் தட்டிக்கேட்கறதும் எப்படி தப்பாகும்? என் பொண்ணு வேடிக்கைப் பார்த்துட்டுப் போறவள் கிடையாது. வலியும் வேதனையும் தாங்கிட்டு போராடும் குணம் படைத்தவள். அன்பு மகளை வரவேற்கறதுக்காக சந்தோஷமா காத்திருக்கோம்’’ என்று கம்பீரமாக சொல்கிறார் மாதையன். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close