வெளியிடப்பட்ட நேரம்: 15:52 (07/09/2017)

கடைசி தொடர்பு:16:04 (07/09/2017)

'முதல்வர், துணை முதல்வர் விரைவில் வீழ்வார்கள்' - ஆளுநர் சந்திப்புக்குப் பின் தினகரன் பேட்டி

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்தார். 


டி.டி.வி.தினகரன், அவரது ஆதரவு எம்.பி-க்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களுடன் சேர்ந்து ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்தார். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'முதல்வரை மாற்ற வேண்டும். குதிரைப் பேரங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்று ஆளுநரிடம் கோரிக்கைவிடுத்தோம். எம்.எல்.ஏ ஜக்கையன் இன்று காலை என்னிடம் போனில் பேசினார். அவர், எடப்பாடி அணியினர் மிரட்டியதாகக் கூறினார். இந்த நிலையில் அவர் திடீரென்று எடப்பாடி அணிக்கு சென்றுள்ளார். தமிழக மக்களுக்கு யார் நல்லவர்கள் என்பது தெரியும். மிரட்டல்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதற்காகத்தான் பாண்டிச்சேரியில் உள்ளனர். எனது அணியைச் சேர்ந்தவர்கள் எடப்பாடி அணியில் இருக்கின்றனர்.

எடப்பாடி பதவி விலக வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் கோரிக்கை. ஆளும் அரசுக்கு மக்களிடம் வெறுப்பு உள்ளது. தைரியம் இருந்தால் அனிதா இறப்புக்கு ஆளும்கட்சியினர் சென்றிருக்க வேண்டும். அரசாங்கத்தின் மீது எவ்வளவு வெறுப்பு இருந்தால் அரசு அளித்த நிதி உதவியைத் திரும்ப அளித்திருப்பார். நீட் தேர்வுக்கு எதிராக அ.தி.மு.க அம்மா அணியினர் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பேன். துரோகம் வென்றதாகச் சரித்திரம் இல்லை. துரோக முதல்வர், துணை முதல்வர் விரைவில் வீழ்வார்கள். ஆளுநர் ஜனநாயகத்தைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும். நடப்பது அனைத்தையும் கவனிக்கிறேன். விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கிறேன்’ என்று ஆளுநர் கூறியதாகத் தெரிவித்தார்.