வெளியிடப்பட்ட நேரம்: 16:17 (07/09/2017)

கடைசி தொடர்பு:16:17 (07/09/2017)

நொய்யல் ஆற்று வெள்ளத்தின்போது என்னவெல்லாம் நடந்தது தெரியுமா?

நொய்யல் ஆறு

கடந்த சில தினங்களாகவே திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது.

இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மழைநீர் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது மிகப்பெரும் மழை வெள்ளத்தைக் கண்ட திருப்பூர் மக்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து, நொய்யலாற்றின் வெள்ளத்தைக் கூட்டம் கூட்டமாகச் சென்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

சாக்கடைக் கழிவுகளாலும், சாயப்பட்டறையிலிருந்து திறந்துவிடப்படும் சாய நீராலும் மாசடைந்துபோன நொய்யலாறு, எப்போதாவது பெய்யும் இதுபோன்ற பெருமழை வெள்ளத்தின் மூலம்தான் தன்னை ஓரளவு தூய்மைப்படுத்திக்கொள்கிறது. அக்காலத்தில், 'வற்றாத ஜீவ நதி' என்று பெயர் பெற்று விளங்கிய நொய்யலாறு. ஆனால், தற்போது சாயக்கழிவுகளால் தன் ஜீவனை இழந்து அரித்தெடுக்கும் அமிலமாக மாறியிருக்கும் நொய்யலாற்றுக்கு, இப்படியொரு காட்டாற்று வெள்ளம் அவசியம்தான்!

இந்த மழை வெள்ளத்தால், நொய்யலில் வினாடிக்கு, 2000 கன அடி அளவு வரை நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக நொய்யலாற்றின் குறுக்கே அமைந்திருக்கும் நல்லம்மன் தடுப்பணை, யானை மடை அணை, குளங்கள் என சகலமும் இந்த மழைநீரால் நிரம்பியிருக்கிறது. நீர் தேங்கும் பல பகுதிகளில் பல வருடங்கள் கழித்து தற்போதுதான் மீண்டும் நீர் தேங்கியிருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.

நொய்யல் ஆறு

நவீன எந்திரங்கள் தறிகெட்டு ஓடிக்கொண்டிருக்கும் இந்தத் திருப்பூர் மாநகரத்தை, ஒரு பெரும் மழை வெள்ளம் சற்று அசைத்துத்தான் பார்த்திருக்கிறது. பாய்ந்தோடும் வெள்ளச் சூழ்நிலையிலும் உயிரிழப்புகள் ஏதுமில்லை என்பது மட்டுமே சற்று ஆறுதல். நொய்யலாற்றில் மழை வெள்ளம் ஏற்படுத்தியிருக்கும் சில மாற்றங்களை இங்கே பார்க்கலாம்....

நொய்யலை வணங்குவோம் :

திருப்பூரில், 'ஜீவ நதி நொய்யல் பாதுகாப்புக் குழு' என்ற அமைப்பு இயங்கிவருகிறது. இவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்தப் பெருமழை நாட்களைக் கொண்டாடும் வகையில், மழை வெள்ளத்துக்கு ஆரத்தி எடுத்து மலர் தூவி மரியாதை செய்து வணங்கினார்கள். மேலும் 'இதுபோன்ற மழை வெள்ளம்தான் என்றேனும் ஒருநாள் நொய்யலை மீட்டெடுக்கப்போகிறது' என்று நம்பிக்கையும் தெரிவித்தனர்.

வெள்ளத்தை ரசித்த குடிபோதை இளைஞர் :

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த துளசிராஜ் என்பவர் திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நொய்யலாற்று வெள்ளத்தைப் பார்வையிடக் குடிபோதையில் வந்த இவர், திடீரென உற்சாகமாகி ஆற்றுப் பகுதிக்குள் உள்ள பாறையின்மீது ஏறி அமர்ந்து வேடிக்கைப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார். இதைக்கண்ட காவல்துறையினர் துளசிராஜை மேலே ஏறிவருமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அவர் அதை சற்றும் பொருட்படுத்தாமல், வெள்ளத்தைத் தொடர்ந்து ரசித்துக்கொண்டிருக்க, அதிகரித்துவிட்ட வெள்ள நீரால் நிலைமை மோசமாகிப்போனது. துளசிராஜ், கரைக்குத் திரும்ப முடியாமல் திணறினார். இதனையடுத்து தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு, ஒருமணிநேர போராட்டத்துக்குப் பிறகு துளசிராஜை பத்திரமாக மீட்டனர். பின்னர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்திருக்கிறார்கள்.

நொய்யல் ஆறு

வெள்ளத்தில் மூழ்கிய நல்லம்மன் :

திருப்பூர் மாவட்டம் மங்கலத்தின் வழியே செல்லக்கூடிய நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது அருள்மிகு நல்லம்மன் திருக்கோயில். அப்பகுதி மக்களின் மிக முக்கிய வழிபாட்டுத் தலமாக இருக்கும் நல்லம்மன் திருக்கோயில், இந்த மழை வெள்ளத்தில் முற்றிலுமாக  மூழ்கிப்போயிருக்கிறது. ''பல வருடங்களுக்கு முன்பு திருப்பூரில் பெய்த இதேபோன்றதொரு பெருமழையில் மூழ்கிய இந்த நல்லம்மன், அதற்குப் பிறகு தற்போதுதான் மீண்டும் முழ்கியிருக்கிறாள்'' என்று அப்பகுதியில் வாழும் பெரியவர்கள் நம்மிடம் தெரிவித்தார்கள்.

கரை இடிந்த எம்.ஜி.ஆர் பாலம் :

திருப்பூர் பார்க் ரோடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலை அருகேயுள்ள நொய்யல் ஆற்றுப் பாலத்தின் ஒரு கரை மழைநீரின் வேகத்தால் இடிந்து விழுந்திருக்கிறது. இதனால் அப்பகுதியைக் கடக்க முடியாமல் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகிவருகிறார்கள்.

நொய்யல் ஆறு

மூழ்கிப்போன தரைப் பாலம் :

சோமனூர் செல்லும் சாலையில் அமைந்திருக்கும்  அணைப்பாளையம் பகுதியில் உள்ள தரைப்பாலம் மொத்தமாக வெள்ளநீரில் மூழ்கிப்போனது. இதனால் அவிநாசி சாலையை இணைக்கும் பகுதியில், போக்குவரத்து துண்டிக்கப்பட்டு பொதுமக்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. பல வருடங்கள் கழித்து பெய்கின்ற இந்த பெருமழையால், ஏற்பட்டுள்ள இதுபோன்ற சிரமங்களையும் சிரித்த முகத்துடன் கடந்து செல்கின்றனர் திருப்பூர் மக்கள்.

மழை வெள்ளத்தின் முழுமையான சேத விபரம் இன்னும் வெளியாகாத நிலையில், தொடர்ந்து பெய்யும் இந்தத் தொடர்மழை, அதிகபட்ச சேதங்கள் எதையும் ஏற்படுத்திவிடாத வண்ணம் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!


டிரெண்டிங் @ விகடன்