வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (07/09/2017)

கடைசி தொடர்பு:16:34 (07/09/2017)

'நாங்கள் அனிதாவின் உருவங்கள்'!... வீதிக்கு வந்த பள்ளி மாணவிகள் உருக்கம்

மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதிகேட்டு மதுரையில் பள்ளி மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

நீட் தேர்வால் மருத்துவக் கனவு பொய்யானதை ஏற்றுக்கொள்ள முடியாத அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணம் தமிழகத்தை உலுக்கியது. பிக்பாஸைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த நெட்டிசன்கள்கூட, அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு களம் இறங்கினர். அவர்கள் மத்திய, மாநில அரசுகளைக் கேள்விக்குமேல் கேள்விகேட்டுக் கலங்கடித்து வருகின்றனர். அந்தப் போராட்டம் நாள்கள் கடந்தபின் கரையோடிப்போகும் என்று நினைத்த போலீஸ் வட்டாரங்கள் தொடர்ச்சியாகப் போராட்டம் வலுத்துவருவதைக் கண்டு அதிர்ந்துபோயுள்ளனர். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் அடி உதைகள் கண்ட இவர்கள், வலுவான போராட்டத்தை நடத்த மாட்டார்கள் என்று எண்ணிக்கொண்டிருந்த அதிகாரிகளுக்கு இது சற்று அதிர்ச்சியாகத்தான் உள்ளது. 


இந்நிலையில் மதுரை தமுக்கத்தில் காலையில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே, மதுரை அண்ணா நூற்றாண்டு பூங்காவின் எதிரே பள்ளி மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, ’நாங்களும் அனிதாக்கள்தான். அனிதா மறைந்துவிடவில்லை. எங்களைப்போல மாணவர்களால் மீண்டும் முளைத்துள்ளார்’ என்று அனிதாவுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர். நகரின் முக்கிய சாலையை மறித்து போராட்டம் நடத்தியதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பள்ளி மாணவிகளையும் போலீஸார் கைது செய்தனர்.