வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (07/09/2017)

கடைசி தொடர்பு:16:59 (07/09/2017)

முதலமைச்சரை வரவேற்க வந்த முன்னாள் கவுன்சிலர் நெரிசலில் சிக்கி மரணம்!

திண்டுக்கல்லில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்காக வந்த அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் ஒருவர் உயிரிழந்தார். 

பழக்கடை நாகராஜன்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறப்புவிழா திருமங்கலத்தில் இன்று நடந்தது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குத்துவிளக்கு ஏற்றி புதிய கல்லூரி கட்டடங்களைத் திறந்து வைத்தார். இதற்காக, மதுரை செல்லும் முதலமைச்சருக்கு திண்டுக்கல்லில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

மாவட்ட விளையாட்டு மைதானம் அருகேயுள்ள விருந்தினர் மாளிகை அருகில், வனத்துறை அமைச்சர் சீனிவாசன், மாவட்ட ஆட்சியர் வினய் ஆகியோர் பூங்கொத்துக் கொடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்றனர். அப்போது, பரமசிவம் எம்.எல்.ஏ, எஸ்.பி சக்திவேல் ஆகியோர் உடனிருந்தனர். காவல்துறை சார்பாக அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்த அவர், பின்னர் மதுரைக்கு கிளம்பினார். முதலமைச்சரை வரவேற்பதற்காகக் காலையிலிருந்தே அ.தி.மு.க-வினர் காத்திருந்தனர். இந்நிலையில், முதல்வர் வந்தபோது அவரைப் பார்க்கத் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டநெரிசல் சிக்கி அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் பழக்கடை.நாகராஜன் மயக்கமடைந்தார். 

உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்துவிட்டார். இந்தச் சம்பவம் திண்டுக்கல் அ.தி.மு.க-வினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகராஜன், திண்டுக்கல் 15 வது வார்டு கவுன்சிலராக இருந்தவர். அ.தி.மு.க-வில் அமைப்புச்சாரா ஓட்டுநர் அணியின் மாநில துணைச்செயலாளர் பதவியையும் அவர் வகித்து வந்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க