வெளியிடப்பட்ட நேரம்: 16:13 (07/09/2017)

கடைசி தொடர்பு:16:29 (07/09/2017)

ஜாக்டோ - ஜியோ போராட்டத்துக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை!ஜாக்டோ- ஜியோ போராட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்துள்ள உயர் நீதிமன்றக் மதுரைக்கிளை, போராட்டத்தில் ஈடுபடுபவர்களைச் சென்றடையும் வகையில் ஊடகங்களில் பரப்புரைச் செய்ய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞர் சேகரன் என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்கள் கூட்டு செயல் குழுவினர் செப்டம்பர் 7-ம் தேதி முதல் (இன்று) காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாகக் கூறியுள்ளது. அன்று அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் இயங்காது என்றும், இந்த வேலை நிறுத்தத்தில்
12 லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்பார்கள் என்றும் அறிவித்துள்ளனர். மேலும், தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டம், சாலை மறியல் உள்ளிட்ட அனைத்து போராட்டங்களையும் நிறுத்தி அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் சுமுகமாகச் செயல்படத் தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு தலைமைச் செயலர், உள்துறைச் செயலருக்கு கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி மனு அனுப்பினேன். மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இடையூறு ஏற்படும். வேலை நிறுத்தத்தை அனுமதித்தால் அரசுப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு, ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ பயிலும் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகும். பொதுமக்களும் பாதிக்கப்படுவர். அரசு அலுவலங்களில் பணிகள் பாதிக்கப்படும். எனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் செப்டம்பர் 7-ம் தேதி முதல் மேற்கொள்ள உள்ள வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜாக்டோ- ஜியோ அமைப்பினரின் வேலை நிறுத்தம் குறித்து முதல்வர் தலைமையில் அமைச்சர்களின் கூட்டம் நடைபெற்ற நிலையில், அக்டோபர் 15-ம் தேதி வரை வேலை நிறுத்தத்தை ஒத்திவைத்திருப்பதாகவும், சில கூட்டமைப்புகள் மட்டும் தாலுகா மற்றும் மாவட்ட அளவில் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பின் காலவரையற்ற வேலை நிறுத்தத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும், அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்திய நீதிபதிகள், உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே,”பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், போராடுவது அடிப்படை உரிமையாகாது” என அறிவுறுத்தியுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பினர் தங்களது கோரிக்கைகளை முன்னிறுத்த வேறு வழிகளைக் கையாளலாம். அதைவிடுத்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது, தீர்வாக அமையாது. இது குறித்து ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு ஊழியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி ஆகியவற்றின் பொறுப்பாளர்கள் பதில் அறிக்கைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும், இந்த உத்தரவை போராட்டத்தில் ஈடுபடுபவர்களைச் சென்றடையும் வகையில் ஊடகங்களில் பரப்புரை செய்ய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.