வேளாங்கண்ணியில் இன்று இரவு பெரிய தேர் பவனி

கீழைநாடுகளின் லூர்து நகரம் என்று அழைக்கப்படும் புனித ஆரோக்கியமாதா பேராலயம் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ளது. இந்தியாவிலுள்ள கிறிஸ்துவ ஆலயங்களில் 'பசிலிக்கா' என்ற பிரமாண்ட கட்டட அமைப்பில் கட்டப்பட்டுள்ள ஐந்து பேராலயங்களில் இதுவும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் அன்னை ஆரோக்கியமாதாவின் பிறந்தநாளை 10 நாள்கள் விழாவாக வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.  

இவ்விழாவில் கலந்துகொள்ள சிறப்புப் பேருந்து மற்றும் ரயில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன, என்றாலும் நாட்டின் பல்வேறு ஊர்களிலிருந்து நேர்த்திக்கடனாகப் பாதையாத்திரையாக வந்து தரிசனம் செய்வதைப் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். கடந்த மாதம் 29-ம் தேதி இவ்விழா தொடங்கி, தினந்தோறும் பேராலயத்தில் தொடங்கும் தேர்பவனி, கடற்கரைச் சாலைவழியாகச் சென்று மீண்டும் பேராலயம் வந்தடையும். இதற்கிடையில் நேற்று முன்தினம் காலை வேளாங்கண்ணியில் கடல் 50 மீட்டர் உள்வாங்கியது. இதனால் பக்தர்கள் பீதியடைந்தனர். எனவே, யாரும் கடலில் குளிக்க வேண்டாமென காவல்துறை அறிவித்தது. அன்று மாலையே கடல் பழைய நிலைக்குத் திரும்பியதும் பக்தர்கள் கடலில் நீராட அனுமதிக்கப்பட்டனர்.  

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி இன்றும் (07.09.2017) அன்னைமாதா பிறந்தநாளான நாளையும் (08.09.2017) நடைபெறவுள்ளது. பேராலயத்தில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்புக் கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. இவ்விழா நடைபெறும் எல்லா நாள்களிலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், கொங்கனி, இந்தி, மராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் சிறப்புத் திருப்பலி நடைபெறும். அத்துடன் ஜெபமாலை, நவநாள்ஜெபம், மாதாமன்றாட்டு, திவ்வியநற்கருணை ஆசீர்வாதம் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. அதன்பின் இன்று இரவு 7 மணியளவில் கண்ணைக்கவரும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் அன்னை மாதா எழுந்தருள தேர்பவனி நடைபெறும்.  

திருவிழாவின் ஒவ்வொரு நாளும் மதியம் 12 மணிக்குக் கொடி ஏற்றுதல், இரவு 9 மணிக்கு கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடைபெறுவதைப் பக்தர்கள் காண திரளாகக் கூடுகின்றனர். அப்போது மரியே வாழ்க என்று கோஷமிடுகின்றனர். பக்தகர்கள் தங்களது குறைகளை நிவர்த்திச் செய்ய வேண்டி புதிய மாதா பேராலயத்திலிருந்து பழையமாதா பேராலயம் வரை மண்டியிட்டே செல்லும் காட்சி பரவசமாகும். பேராலயம் மட்டுமல்ல விண்மீன் ஆலயம், பழையமாதா கோயில், தியான மண்டபம் எனத் திரும்பும் இடமெல்லாம் மின்விளக்கு அலங்காரத்தால் வேளாங்கண்ணியே ஜொலிக்கிறது. நாளை நடைபெறவுள்ள அன்னை மாதா பிறந்தநாளுக்காக நாகை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்திருக்கிறது மாவட்ட நிர்வாகம். இன்று இரவு பக்தர்கள் கண்டுகளிக்க குடந்தை ஜேம்ஸ் குழுவினருடன் சின்னத்திரை விஜய் டி.வி சூப்பர் சிங்கர் பங்குபெரும் தஞ்சை லயோவின் புதுத்தென்றல் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இவ்விழாவின் பாதுகாப்புக்கு 2,000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!