போராட்டத்தால் புத்தகக் காட்சியை மூடியது போலீஸ்!

புத்தக திருவிழா மதுரை

 

தமிழகம் முழுவதும் பல இடங்களில் 'நீட்' தேர்வுக்கு எதிராகவும் , அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது மதுரையிலும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை தமுக்கத்தில் 10 மணியளவில் மாணவர்கள் போராட்டம் தொடங்கியது. இதில் கல்லூரி மாணவ- மாணவியர் மட்டுமல்லாது பள்ளி மாணவ- மாணவிகளும் கலந்து கொண்டு நீட் தேர்வுக்கு எதிரான தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் போன்று சமூக வலைதளங்களால் ஒன்றிணைந்து இப்போராட்டத்தை நடத்தினர். மாணவர்கள் தமிழன்னை சிலை அமைந்துள்ள இடத்தில் ஏறி முழக்கமிட்டனர். அவர்களைக் கீழே இறக்குவதற்காக போலீஸார் மேலே ஏறினர். அப்போது ஒரு மாணவனைச் சட்டையைப் பிடித்து இழுத்தபோது இரண்டு போலீஸ்காரர்களும் ஒரு மாணவனும் கீழே விழுந்தனர். பலரையும் போலீஸார் சட்டையைப் பிடித்து இழுத்து குண்டுக்கட்டாகத் தூக்கிக் கைது செய்தனர். நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் காவல்துறையினர் 70 மாணவ, மாணவிகளைக் கைது செய்தனர். தற்போது  தமுக்கத்தில் 12 வது புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது .

 

புத்தகக் காட்சிக்கு வருவதாகச் சொல்லிவிட்டு மாணவர்கள் திடீரென்று போராட்டத்தில் குதித்ததால் இன்று ஒரு நாள் மட்டும் புத்தகக் காட்சியை அடைக்க காவல்துறை உத்தரவிட்டது. புத்தகக் காட்சியை மூடினால் மாணவர்கள் யாரும் தமுக்கத்துக்குப் போராடவரமாட்டார்கள் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. புத்தகக் காட்சியைப் பார்வையிடுவதற்காக வெளியூரிலிருந்து வந்த வாசக வட்டாரங்கள் இன்று ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!