'ஆசிரியைக்கு இருக்கும் சுயமரியாதை ஆட்சியாளர்களுக்கு இல்லையே!' - ஸ்டாலின் கருத்து

நீட் விவகாரம் தொடர்பாகத் தனது பதவியை ராஜினாமா செய்த அரசுப் பள்ளி ஆசிரியை சபரிமாலாவுக்கு இருக்கும் சுயமரியாதை ஆட்சியாளர்களுக்கு இல்லையே என்று தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்துத் தெரிவித்துள்ளார். 


மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதா, கடந்த 1-ம் தேதி உயிரை மாய்த்துக்கொண்டார். அவர் மரணம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. மாணவர்கள், அரசியல் கட்சியினர் எனப் பல்வேறு தரப்பினரும் நீட் தேர்வுக்கு எதிராகவும், மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 
நீட் தேர்வுக்கு எதிராகத் தன் 7 வயது மகனுடன் களமிறங்கி அரசுப் பள்ளி ஆசிரியை சபரிமாலா பரபரப்பை ஏற்படுத்தினார்.

விழுப்புரம் மாவட்டம் வைரபுரம் ஒலக்கூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக அவர்  பணியாற்றி வந்தார். அரசுப் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றிக்கொண்டே, அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடக் கூடாது என்று துறைரீதியாக அவரை எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், வேலையைவிட தேசமே முக்கியம் என்று கூறி, சபரிமாலா ஆசிரியர் பணியை இன்று ராஜினாமா செய்தார். 


இதுகுறித்து ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், ‘நீட்டை எதிர்த்து ஆசிரியை சபரிமாலா ராஜினாமா: அவரது உணர்வை மதிப்போம். ஆசிரியைக்கு இருக்கும் சுயமரியாதைகூட தமிழகத்தின் ஆட்சியாளர்களுக்கு இல்லையே!’ என்று பதிவிட்டுள்ளார்.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!