Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'நிதானமாகத்தான் இந்த முடிவை எடுத்துள்ளேன்' நீட் எதிர்ப்புக்காக வேலையை உதறிய ஆசிரியை சபரிமாலா!

ஆசிரியை சபரிமாலா - அனிதா

அரியலூர் மாவட்டம், குழுமூரைச் சேர்ந்த அனிதா 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் 1176 மதிப்பெண்களைப் பெற்று எப்படியும் மருத்துவராகவிடுவோம் எனும் எண்ணத்தில் இருந்தார். இந்த ஆண்டு நிச்சயம் நீட் தேர்வு வராது என ஆட்சியாளர்கள் நம்பிக்கை அளித்திருந்தனர். ஆனால், திடீரென்று நுழைக்கப்பட்ட நீட் தேர்வில் போதுமான மதிப்பெண்களை அனிதாவால் பெற இயலவில்லை. இதனால் மனமுடைந்த அவர், தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கல்லூரி மாணவர்கள் மட்டுமல்ல, அரசுப் பள்ளி மாணவர்களும் நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டக் களத்தில் குதித்தனர். அந்த வரிசையில் அரசுப் பள்ளி ஆசிரியை சபரிமாலா, அனிதாவின் மரணம் தந்த வலியில் இதற்குச் சரியான தீர்வு கிடைக்க வேண்டும் எனத் தனது அரசுப் பணியை ராஜினாமா செய்துள்ளார். 

ஆசிரியை சபரிமாலா

விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் ஒன்றியம், வைரபுரம் எனும் ஊரிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுபவர் சபரி மாலா. மாணவர்கள் மீது மிகுந்த அன்பும் அக்கறையும்கொண்டவர். மிகச் சிறந்த பேச்சாளர். இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் கருத்துகள் மீது அதீத பற்றுக்கொண்டவர். அவரின் கொள்கைகளை மாணவர்களிடம் கொண்டுசேர்க்கும் பேராவல் மிக்கவர். அதற்குப் பட்டிமன்றம் எனும் வடிவத்தைக் கைக்கொண்டார். பள்ளி மாணவர்களுக்கு அப்துல் கலாம் கருத்துகளைப் போதித்து, மேடையில் பேசுவதற்குப் பயிற்சி அளித்து, பல ஊர்களுக்கு அழைத்துச்சென்றுள்ளார். சபரிமாலாவின் இந்த முயற்சி அப்துல் கலாம் கருத்துகளைப் பரவலாகக் கொண்டுசெல்வதோடு, பட்டிமன்றத்தில் பங்குபெறும் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையையும் அளித்தது. அப்துல் கலாம் நினைவிடம் அமைந்திருக்கும் ராமேஸ்வரத்துக்கும் மாணவர்களை அழைத்துச்சென்ருள்ளார். அப்துல் கலாம் வீட்டுக்குச் சென்று அவரின் உறவினர்களோடு மாணவர்களை உரையாடச் செய்ய வைத்திருக்கிறார். ஆர்வத்துடன் பணியாற்றி சபரிமாலாவை அனிதாவின் தற்கொலைச் செய்தி மிகவும் பாதித்தது. அதுவேதான் இந்தத் துணிச்சலான முடிவை நோக்கி அவரை உந்தித் தள்ளியுள்ளது. இதுகுறித்து சபரிமாலாவிடம் பேசினோம். 

ஆசிரியை சபரிமாலா

"ஒருவரின் வாழ்வில் வெளிச்சம் பாய்ச்சுவது கல்விதான். அதனால்தான் ஆசிரியப் பணியை விரும்பி ஏற்றேன். அப்துல் கலாமின் கருத்துகள் ஆசிரியர் பணியின் கடமைகளை இன்னும் தெளிவாக உணர்த்தியது. அந்தக் கருத்துகளைப் பரப்புவதை என் வாழ்நாளின் மிக முக்கியமான பணியாக மாற்றிக்கொண்டேன். கல்வி குறித்த நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்று புதிய      செய்திகளை அறிந்துகொள்வேன். சென்ற வாரம் வெள்ளிக்கிழமை மாலையில், என்னை ஒரு கூட்டத்தில் பேச அழைத்திருந்தார்கள். ஏராளமான ஆசிரியர்கள் மத்தியில் பேசும் வாய்ப்பு. அதற்காக குறிப்புகளைத் தயார்செய்துகொண்டிருந்தேன். அப்போதுதான் இடியாக அந்தச் செய்தி வந்தது. அனிதா எனும் குழந்தை அவள் ஆசைப்பட்ட கல்வியைப் பெறமுடியாததால் மாண்டுபோனாள். இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. என்னையும் அறியாமல் கண்ணீர் சுரந்துகொண்டேயிருந்தது. கூட்டத்துக்குச் செல்வதா வேண்டாமா எனும் குழப்பம். அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு கூட்டத்துக்குச் சென்றேன். அனிதாவைப் பற்றி அங்கே பேசும்போது கண்ணீரை அடக்க முடியவில்லை. இயற்கையும் சேர்ந்து மழையாக அழுதது. 

 பிளாஸ்டிக் குடத்து நீரால் அனிதாவைக் குளிப்பாட்டியதை நீங்கள் பார்த்தீர்களா? அதைப் பார்க்கும்போது அனிதாவின் கனவுகள் கரைந்தோடுவதாகத் தோன்றியது. அந்தக் காட்சி திரும்பத் திரும்ப என் நினைவுகளில் வந்து வலியை உண்டாக்கியது. அந்தச் சின்னஞ்சிறு பெண் என்ன தவறு செய்தாள்? 

அனிதாவின் மரணம் மனதில் அழுத்திக்கொண்டேயிருந்தது. தன்னெழுச்சியான என் உணர்வை வெளிப்படுத்தும் விதத்தில் நேற்று (செப்டம்பர் 06) என் மகனோடு உண்ணாவிரதம் இருக்க முயன்றேன். என் மகன் ஜெயசோழனும் அரசுப் பள்ளியில்தான் படிக்கிறான். ஏற்றத்தாழ்வற்ற சமூகத்தை நோக்கிய என் பயணத்தின் ஒரு பகுதியே என் மகனை அரசுப் பள்ளியில் படிக்கவைத்திருப்பது. அதனால், மகனும் என்னோடு உண்ணாவிரத்தில் கலந்துகொண்டதில் ஆச்சரியமில்லை. காவல் துறையினர் அனுமதிபெறாமல் உண்ணாவிரதம் இருக்கக் கூடாது என்றனர். எனவே, ஒருநாள் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி, காவல் துறையிடம் கேட்டேன். அரசு ஊழியர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது எனச் சொல்லி அனுமதி மறுத்தனர். 

அனிதாவின் மரணமே நாம் கல்வியில் எழுச்சி காணவேண்டியதை உணர்த்துகிறது. நம் வீட்டுப் பிள்ளைகள் நீட் தேர்வு மட்டுமல்ல, அதைவிடக் கடினமான தேர்வையும் வென்றுவிடுவார்கள். ஆனால், கல்வி ஒரே மாதிரியாகவா இருக்கிறது? அதில் ஏற்றத்தாழ்வு இருக்கிறதே. முதலில் சீர் செய்யவேண்டியது அதைத்தானே. அதைச் சரிசெய்யாவிட்டால் அனிதா போன்ற கிராமப்புற ஏழை மாணவர்கள் ரொம்பவே பாதிப்படைவார்கள். என் மனதின் ஆற்றாமைகளை வெளிப்படுத்த முடியாமல் இந்த ஆசிரியர் பணியில் தொடர விரும்பவில்லை. அதனால், என் வேலையை ராஜினாமா செய்ய முடிவெடுத்தேன். எனது செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருக்கும் என் கணவர், இந்த முடிவை வரவேற்றர். 'அப்துல் கலாம் கருத்துகளைப் பரவலாக்க இனி அதிக நேரம் செலவிடு' என்றார். அதனால், இன்று மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரைச் சந்தித்து என் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தேன். அனிதாவின் இந்த முடிவிலும் நாம் முன்வராவிட்டால் வேறு எப்போதுதான் வருவோம் என்கிற மனநிலையில்தான் இந்த முடிவை எடுத்தேன். 

சிலர் நான் ரொம்ப எமோஷனில் எடுத்த முடிவாக நினைக்கின்றனர். அப்படியில்லை. மிக நிதானமாக யோசித்தே இந்த முடிவை எடுத்தேன். அதனால்தான் என் ராஜினாமா கடிதத்தில், 'சம்பளத்துக்காக ஆசிரியர்கள் போராடும்போது சமத்துவம்கொண்ட கல்விக்காக ஓர் ஆசிரியர் போராடக் கூடாது என்பது மிகுந்த வேதனையைத் தருகிறது. என் வேலையைவிட தேசம் முக்கியம் என்பதால், என் ஆசிரியர் பணியை 7.9.2017 முதல் வருத்தத்தோடு ராஜினாமா செய்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளேன். என் சக ஆசிரியர்களுக்கு உரிமையோடு ஒரு விஷயத்தைப் பகிர ஆசைப்படுகிறேன். மற்ற பணிகள்போன்றதல்ல ஆசிரியர் பணி. அடுத்த தலைமுறையினரை ஆரோக்கியமாக உருவாக்குவது நம் கடமை. அதனால், பாடம் நடத்தும் ஆசிரியராக மட்டுமில்லாமல், சமூகத்து ஆசிரியர்களாக மாறுங்கள்." என்று மாற்றத்தை எதிர்நோக்கும் நம்பிக்கை குரலில் கூறினார் சபரிமாலா. 

ஆசிரியை சபரிமாலா

ஆசிரியை சபரிமாலாவின் இந்த முடிவு குறித்து, ஆசிரியரும் 'கல்வியாளர் சங்கமம்' எனும் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளருமான சதீஷ்குமார், "மத்திய அரசின் தவறான நடைமுறையைக் கண்டித்தும், மாநில அரசின் மெத்தனப்போக்கைக் கண்டித்தும் உண்ணாவிரத அனுமதி கேட்டுள்ளார். அது கிடைக்காத வருத்தத்தில் ஆசிரியை சபரிமாலா தனது அரசுப் பணியை ராஜினாமா செய்துள்ளார். இது, அரசின் மீதான நம்பிக்கையின்மையைக் காட்டுகிறது. இதனை அரசு ஏற்றுவிடக்கூடாது. அவரது கோரிக்கை தனிப்பட்ட கோரிக்கை அல்ல. ஒட்டுமொத்த தமிழக மாணவர்களின் பெரும்பான்மை கோரிக்கை. இதனை உடனடியாகக் கருத்தில்கொண்டு நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் அமல் செய்யும்வரை நீட் தேர்வை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்பதையும், ராஜினாமா செய்த சபரிமாலாவின் செயலை தவிர்க்கச் செய்து, அவரது பணிப் பாதுகாப்பை உறுதிசெய்யவும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close