கலாம் நினைவிடத்தில் நல்லக்கண்ணுவுக்கு நேர்ந்த கதி! | Officials did't allow Nallakannu in Abdul Kalam's memorial place

வெளியிடப்பட்ட நேரம்: 18:03 (07/09/2017)

கடைசி தொடர்பு:18:45 (07/09/2017)

கலாம் நினைவிடத்தில் நல்லக்கண்ணுவுக்கு நேர்ந்த கதி!

அப்துல் கலாம் நினைவிடத்துக்குச் சென்ற நல்லக்கண்ணுவை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

நல்லகண்ணு

சமகாலத்தில் எளிமை மற்றும் நேர்மை என இரண்டும் சேர்ந்த ஓர் அரசியல்வாதி என்று அனைவராலும் பாராட்டப்படுபவர் தோழர் ஆர்.நல்லக்கண்ணு. அணி மாறுவதற்காகக் கோடிகளில் பேரம் பேசி, ரிசார்ட் அரசியல் நடத்தும் இந்தக் காலகட்டத்திலும் எளிமையாக, நேர்மை அரசியலில் ஈடுபட்டுவருபவர். இந்நிலையில் இன்று ராமேஸ்வரம் சென்ற நல்லக்கண்ணு, அங்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காகச் சென்றுள்ளார்.


கடந்த வாரம் கலாம் நினைவிடத்துக்கு வந்த கிரண் பேடிக்கு வரவேற்பளித்த அதிகாரிகள் நல்லக்கண்ணுவை அனுமதிக்க மறுத்துவிட்டனர். நல்லக்கண்ணு அங்கே சென்றதும், அது தொடர்பான செய்தியைச் சேகரிப்பதற்காகச் செய்தியாளர்கள் அங்கு குவிந்துள்ளனர். அப்போது, அதிகாரிகள் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுத்துள்ளனர். இதையடுத்து, "என்னய்யா ஒரு படம்தான எடுக்கப் போறாங்க இது எப்பவும் நடக்கறதுதான? அவங்களை ஏன் தடுக்கறீங்க... விடுங்க" என்று நல்லக்கண்ணு கூறியுள்ளார். ஆனால் அதிகாரிகளோ நல்லக்கண்ணுவையும் அப்துல் கலாம் நினைவிடத்துக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால், அதிகாரிகளுடன் செய்தியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நல்லகண்ணு


"கடந்த வாரம் வரை இங்கு நாங்கள் செய்தி சேகரித்துக்கொண்டுதானே இருந்தோம். குறிப்பாக, கடந்த வாரம் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வந்தபோதுகூட செய்தி சேகரித்தோம். அப்போதெல்லாம் தடுக்காமல், இப்போது ஏன் தடுக்குறீர்கள்" என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு அதிகாரிகளோ,  "அப்ப வேற, இப்ப வேற. இனிமேல் இப்படித்தான்" என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டனர்.

இதனால் நல்லக்கண்ணு, கலாம் நினைவிடத்துக்கு அருகில் மலர்வளையத்தை வைத்து அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றார்.