வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (07/09/2017)

கடைசி தொடர்பு:19:15 (07/09/2017)

அடுத்த விக்கெட் எம்.எல்.ஏ கதிர்காமு.?

வரும் 12ம் தேதி அ.தி.மு.க-வின் பொதுக்குழு கூட இருக்கிறது. இந்நிலையில்,  ”பொதுக்குழு கூடுவதற்குள் தினகரன் கூடாரம் காலியாகிவிடும்” என்று சொன்னார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதையே தான் சொன்னார் துணை முதல்வர் பன்னீர்செல்வம். அவர்கள் கூட்டாக சொன்னது போல தினகரன் அணியில் இருக்கும் ஒவ்வொருவராக அணிமாற ஆரம்பித்துள்ளனர்.

இன்று காலை புதுச்சேரியில் இருந்து சென்னை தலைமைச்செயலகம் வந்த கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன், சபாநாயகர் தனபாலைச் சந்தித்தார். பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”எங்கள் குடும்பத்தில் நடக்கும் சண்டையைப் பயன்படுத்திக்கொண்டு இந்த ஆட்சிக்கு தி.மு.க’வால் பங்கம் வந்துவிடுமோ என்ற அச்சத்தாலும், அதிகமான சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி அணியில் இருப்பதால், அவரது அணிக்கு மாறும் போது, இந்த ஆட்சி நிலைக்கும் என்பதாலே எடப்பாடி அணிக்கு மாறுகிறேன்.” என்றார்.

கதிர்காமு

இந்நிலையில், அடுத்ததாக கதிர்காமுவும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு மாற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எம்.எல்.ஏ கதிர்காமுவின் திடீர் அணிமாற்றம் குறித்து பதிலளித்த டி.டி.வி தினகரன், “குதிரை பேரத்தால் தங்கள் பக்கம் அவரை இழுத்துக்கொண்டுள்ளனர்” என்றார். முன்னதாக, எம்.எல்.ஏ கதிர்காமு, தினகரன் அணியை ஒருங்கிணைக்கும் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ தங்கத்தமிழ்ச்செல்வனுக்கு நெருக்கமானவர். அதனாலேயே தினகரனுடனும் நெருக்கமாகப் பயணித்தார். தேனி மாவட்டத்தைப் பொறுத்தவரை, கம்பம், பெரியகுளம், ஆண்டிபட்டி என மூன்று தொகுதிகள் தினகரனுக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. இன்று ஜக்கையனின் திடீர் அணித்தாவலால், தங்கத்தமிழ்ச்செல்வன் உட்பட தேனி மாவட்ட அதிமுக வட்டாரமே பரபரப்படைந்துள்ளது.

முன்னதாக பெரியகுளம் எம்.எல்.ஏ கதிர்காமு, தினகரன் கொடுத்த பதவியை வேண்டாம் என்று சொல்லி, பின்னர், ’தனக்கு உடல் நிலை சரி இல்லாததால் பதவி ஏதும் வேண்டாம்’ என்று பல்டியடித்தார். அப்போதே அவர் அணி மாற இருந்ததாகவும், அதனை தினகரன் மற்றும் தங்கத்தமிழ்ச்செல்வன் தடுத்து சமாதானம் செய்ததாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில், மற்ற எம்.எல்.ஏ- க்களை போல புதுச்சேரி தங்கும் விடுதியில் இருந்து வெளியே தனது சொந்த வேலைக்குச் செல்ல எம்.எல்.ஏ கதிர்காமு பெரும்பாலும் அனுமதிக்கப்படவில்லை. அப்படி அவர் வெளியே சென்றால் எடப்பாடி அணிக்குப் போய்விடுவாரோ என்ற அச்சமே காரணம் என்கிறார்கள் தினகரன் தரப்பு வட்டாரங்கள். எண்ணிக்கை அடிப்படையில் சரிவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் தினகரன் அணியில், அடுத்த விக்கெட் பெரியகுளம் எம்.எல்.ஏ கதிர்காமுவாக இருக்கலாம்.