வெளியிடப்பட்ட நேரம்: 19:54 (07/09/2017)

கடைசி தொடர்பு:19:54 (07/09/2017)

”விவசாயிகள் தற்கொலைக்கு வறட்சி மட்டுமா காரணம்!?’’ - ஊடகவியலாளர் சாய்நாத் அடுக்கும் காரணங்கள்

விவசாய நெருக்கடி குறித்த கருத்தரங்கில்

றட்சி, வங்கிக் கடன் சுமை, விலை நிர்ணய உரிமை இல்லாமல் இருப்பது போன்ற பிரச்னைகள்  காரணமாக இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இன்னும் சிலர், கருகிப்போன பயிரைக் கண்ட அதிர்ச்சியிலேயே மாரடைப்பு ஏற்பட்டு இறந்துபோனார்கள். விவசாயிகளின் இந்தப் பிரச்னை என்பது சுமார் 50 ஆண்டுகாலத்துக்கும் மேலாக நீடித்துக் கொண்டிருக்கிறது. கடந்த  2016 - ல் மட்டும்  4,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

விவசாயிகளின் பிரச்னை என்பது இந்த நாட்டின் பிரச்னையாகப் பார்க்கப்படுவதில்லை. அது தனிமனித பிரச்னையாகவேப் பார்க்கப்படுகிறது. ஆனால், விவசாயம்தான் இந்தியாவின் முதுகெலும்பு என்று மார்தட்டிக் கொள்கிறார்கள் ஆட்சியாளர்கள். அரசாங்கம்தான் விவசாயிகளை புறக்கணித்து வருகிறது என்றால், அதைப் பற்றிப் பேச வேண்டிய ஊடகமும் உரிய முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிடாமல், கமுக்கமாக ஒதுங்கிக்கொள்கிறது என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்துவருகிறது.

இப்படியான சூழலில், சென்னைப் பல்கலைக்கழக இதழியல்துறை 'விவசாயத் தற்கொலையும் இந்திய ஊடகமும்' என்ற கருத்தரங்கை  ஏற்பாடு செய்திருந்தது. விவசாயிகளின் தற்கொலைகளை முதன் முதலாக வெளியுலகுக்கு கொண்டுவந்ததோடு, அவர்களுடைய  அனைத்துப் பிரச்னைகளையும் முழுமையாக  பொதுவெளிக்குக் கொண்டு வந்து நிறுத்திய எழுத்துப் போராளி சாய்நாத் இந்த கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசினார். 

சாய்நாத்

"விவசாயிகள் வறட்சியால் மட்டும் தற்கொலை செய்துகொள்வதில்லை. வறட்சி, நிலத்தடி நீர் பற்றாக்குறை,போதிய விலை நிர்ணயயின்மை போன்ற பல பிரச்னைகள் இருக்கின்றன. நிலத்தடி நீர் பாதுகாப்பு குறித்தத் திட்டங்கள், நீரைச் சேமிக்க புதிய அணைக்கட்டுகள் என நீராதாரம் குறித்த எந்தவொரு திட்டமும் இல்லாமல்,  செயல்பட்டுக்  கொண்டிருக்கின்றது அரசாங்கம். இந்த நிலையில், ஒரு விவசாயி மழை வராமல்  தற்கொலை செய்துகொண்டால், 'வறட்சிக் காரணமாக இறந்துவிட்டார்' என்று சொல்வது அபத்தமானது. விவசாயிகளின்  தற்கொலைக்கு ஒரு காரணம் அல்ல... பல காரணங்கள் உள்ளன. விவசாயிகள் தற்கொலையிலும்கூட பெண்களின்  தற்கொலைகளை ஊடகமும் அரசாங்கமும் கண்டுகொள்வதில்லை. ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டால், அந்தக் குடும்பத்துப் பெண்கள் அனுபவிக்கும் பிரச்னைகள் ஏராளம். விவசாயிகளுக்குக் கடன் கொடுக்கும் விவகாரத்தை இந்திய ஊடகம் பெரிதாக எடுத்துப் பேசுகின்றன. ஆனால், உண்மையில் விவசாயிகளுக்கு கடன் கொடுக்கப்படுவதால் தனியார் கார்ப்ரேட்  நிறுவனங்கள்தான் பயன் அடைகின்றன என்பதை மட்டும் பேசத் தவிறிவிடுகின்றன.   

அதைப்பற்றிய ஆழமான பார்வையில்லாமல், வெறும் கடனைப் பற்றியே பேசும் ஊடகமாகவே இந்திய ஊடகம் இருக்கின்றன. 40 மில்லியன் விவசாயிகளுக்கு சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு கடன் வழங்கும் இந்த விவகாரத்தில் மிகப் பெரிய அரசியல் உள்ளது. அதைப்பற்றி ஊடகம் பேசுவதில்லை. விவசாயக் கடன் மற்றும் காப்பீடு போன்றவற்றால் கார்ப்ரேட் நிறுவனங்கள்தான் பயன் அடைகின்றன. அவற்றை எல்லாம் இந்த ஊடகம் ஆராய்ந்து எழுதுவதில்லை. காரணம் இங்கு ஊடகமும் கார்ப்ரேட் மையமாகி விட்டது. அதன் காரணமாக விவசாயிகளின் பிரச்னைகளையும் பத்திரிகையாளர்கள் கவனத்தில் கொள்வதில்லை. வெறும் வணிக மயமான எழுத்தாக மலிந்து போனதே இன்னும் விவசாயிகளின் பிரச்னைகள் தொடர்ந்து கொண்டிருக்கக் காரணம். விவசாயிகளின் பிரச்னைகளை அனைவருமே எடுத்துப்பேச வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. ஆத்மார்த்தமாக விவசாயிகளின் பிரச்னைகளைப் பேச வேண்டிய பொறுப்பும் கடமையும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும்  ஏற்பட்டுள்ளது. கடனை வாங்கிவிட்டு நாடு விட்டு நாடுசெல்லும் மல்லையாக்களைத் தூக்கிப் பிடிக்கும் அரசாங்கம், விவசாயிகளின் கடனுக்காக அவர்களது கழுத்தை நெறிக்கும் ஆட்சியைத்தான் செய்து வருகிறது. இதையெல்லாம் ஆராய்ந்து எழுத வேண்டிய பொறுப்பு இந்திய ஊடகத்துக்கு உள்ளது. 'நான் ஒரு  விவசாயி' என்று  பெருமையாக சொல்லிய  காலம் இருந்தது. ஆனால், தற்போது விவசாயி என்று சொல்வதற்கு தயங்குகின்றனர். இப்படியான மனநிலை மாற வேண்டும். அனைவரும் விவசாயிகளின் பிரச்னைகளைக்  கையிலெடுத்துப் பேச வேண்டும்'' என்றார்.

 


டிரெண்டிங் @ விகடன்