வெளியிடப்பட்ட நேரம்: 19:35 (07/09/2017)

கடைசி தொடர்பு:19:35 (07/09/2017)

விட்டுக்கொடுக்காத விவசாயிகள்... வழிக்கு வந்தது வங்கி... மீண்டும் கிடைத்தது டிராக்டர்!

 

பல்லடத்தில் நடந்த விவசாயி தற்கொலைக்கு நீதி கேட்டு இன்று பல்வேறு விவசாயிகள் திருப்பூரில் உள்ள தனியார் வங்கியை முற்றுகையிட்டனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்துள்ள மலையம்பாளையம் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் விவசாயி வெள்ளியங்கிரி நாதன். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கோடக் மஹேந்திரா வங்கியில் டிராக்டர் வாங்குவதற்காக கடன்தொகை பெற்றிருந்தார். இந்நிலையில், கடும் வறட்சி காரணமாக விவசாயத்தில் வருமானம் இல்லாமல் போனதால், வெள்ளியங்கிரியால் வங்கிக்குத் தவணைத் தொகையை சரியாகக் கட்டமுடியவில்லை. இந்நிலையில் வெள்ளியங்கிரி நேற்று திருப்பூர் சென்றிருந்த சமயம் பார்த்து வங்கி அதிகாரிகள் வெள்ளியங்கிரியின் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். அப்போது வீட்டில் தனியாக இருந்த வெள்ளியங்கிரியின் மனைவி சுலோச்சனாவிடம் பேசிய வங்கி அதிகாரிகள், வெள்ளியங்கிரி வாங்கியிருந்த டிராக்டரை ஜப்தி செய்து எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.

இச்சம்பவத்தையடுத்து பல்லடம் காவல்நிலையத்துக்குச் சென்ற விவசாயி வெள்ளியங்கிரி, டிராக்டர் தொடர்பாக வங்கி அதிகாரிகள் மீது புகார் அளித்திருக்கிறார். ஆனால், காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மனமுடைந்த விவசாயி வெள்ளியங்கிரி, காவல்நிலையத்தின் முன்பாகவே பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவத்தால் கொதித்துப்போன பல்லடம் சுற்றுவட்டார விவசாயிகள் இன்று வெள்ளியங்கிரியின் மரணத்துக்கு நீதி கேட்டு பல்லடம் காவல்நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். பின்னர் அங்கிருந்து கிளம்பிய விவசாயிகள் நேராகத் திருப்பூரில் அமைந்திருக்கும் கோடக் மகேந்திரா வங்கியை முற்றுகையிட்டனர்.

 

பின்னர் விவசாயிகளைச் சமாதானப்படுத்திய காவல்துறையினர், வங்கியின் சார்பாக வழக்கறிஞர் ஒருவரை வரவழைத்து பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தனர். அப்போது விவசாயிகளிடம் பேசிய வங்கியின் தரப்பினர், ஜப்தி செய்யப்பட்ட டிராக்டரை விவசாயி வெள்ளியங்கிரியின் வீட்டிலேயே திரும்ப ஒப்படைப்பதாகவும், அவர் செலுத்த வேண்டிய மீதமுள்ள கடன்தொகை 6 லட்சத்தை ரத்து செய்துவிடுவதாகவும் விவசாயிகளிடம் உறுதியளித்துச் சென்றிருக்கிறார்கள்.

விவசாயி வெள்ளியங்கிரியின் மனைவி சுலோச்சனா ஒரு மாற்றுத்திறனாளி. இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகனும் இருக்கிறார். வெள்ளியங்கிரி மட்டுமே இந்தக் குடும்பத்துக்காக உழைத்துக்கொண்டு இருந்த சூழலில், அவரது குடும்பம் இப்போது நிற்கதியாக நிற்கிறது.