அரசு ஊழியர்கள் போராட்டம் திருச்சி மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கைது

ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் இன்று திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

அரசு ஊழியர்கள்

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில், ஜாக்டோ- ஜியோவின் முக்கியத் தலைவர்களை அழைத்துப் பேச வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, 4-ம்தேதி அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகியோரை ஜாக்டோ- ஜியோ பிரதிநிதிகள் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக நேற்று ஈரோடு வந்திருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளைப் பெற்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்களைப் படித்துப் பார்த்துவிட்டு நவம்பர் 30-ம் தேதிக்குள் தமிழக அரசு முடிவு எடுக்கும் என உறுதியளித்தார்.

இதில் சிலர் உடன்பட்டார்கள். சில அதற்கு எதிராகத் திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என அறிவித்தனர். அதன்விளைவாக ஜாக்டோ- ஜியோ அமைப்பில் உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இருபிரிவாக நின்று வேலை நிறுத்தம் செய்வது என்று ஒரு பிரிவினரும், வேலை நிறுத்தத்தைத் தற்காலிகமாக ஒத்தி வைப்பது என அறிவித்தனர். இதனால், அரசு ஊழியர் சங்கங்களுக்குள் மோதல் போக்கு உண்டானது. ஜாக்டோ- ஜியோ அமைப்பு இரண்டானது.

அரசு ஊழியர் சங்கத்தினர் பிரதிநிதிகளான சுப்பிரமணியன், அன்பரசு மற்றும் தமிழக உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் மாயவன், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் தாஸ் தமிழக ஆசிரியர் முன்னேற்றச் சங்கத் தலைவர் தியாகராஜன் ஆகியோர் திட்டமிட்டபடி இன்று தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.

திருச்சி மாவட்டத்தில் இன்று நிலவரப்படி 90 சதவிகித ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போடவில்லை. மாணவர்கள் இன்று காலை பள்ளிக்கு வந்துவிட்டனர். அதனால் சிக்கல் உண்டானது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஜாக்டோ-ஜியோ இயக்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 61 பெண்கள் உள்பட 160 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல, திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டம் கோவில்பட்டியில் ஜாக்டோ-ஜியோ இயக்கத்தின் சார்பாக மூன்று அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல். போராட்டத்தில் ஈடுபட்ட 139 பெண்கள் உள்பட 246 பேர் கைதானார்கள். இந்நிலையில், ஜாக்டோ ஜியோ அமைப்பின் காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!