"பாலபாரதியைச் சொன்னதுபோல ஜெயலலிதாவைச் சொல்லியிருப்பாரா கிருஷ்ணசாமி?!" கொதிக்கும் எழுத்தாளர்கள்

பாலபாரதி


அனிதாவின் மரணம் தமிழ்நாடு எங்கும் நீட் தேர்வுக்கு எதிரான மனநிலையை மாணவர்களிடையே உருவாக்கியுள்ளது. நீட் எதிர்ப்புப் போராட்டங்கள் நாள்தோறும் அதிகரித்துவருகின்றன. இந்நிலையில் அனிதாவின் மரணம் குறித்து சந்தேகங்களை எழுப்பி, விசாரணை வேண்டும் எனக் கோரிவருகிறார் 'புதிய தமிழகம்' கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி. மேலும், நீட் தேர்வுக்கு ஆதரவான கருத்துகளையும் தெரிவித்துவருகிறார். அதற்குப் பல தரப்பிலிருந்து எதிர்ப்புக் கிளம்பியுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியைச் சேர்ந்தவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பாலபாரதி, 'கிருஷ்ணசாமி தனது மகளுக்கு மருத்துவப் படிப்புக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் உதவிபெற்றார்' என்று ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார். மேலும், இதுகுறித்து சட்டசபையில் அதிமுக அமைச்சர் கூறியபோது, கிருஷ்ணசாமி அதை ஏற்றுக்கொண்டதோடு முதல்வருக்கு நன்றி தெரிவித்ததையும் பாலபாரதி குறிப்பிட்டிருந்தார். இந்த விஷயம் குறித்து டாக்டர் கிருஷ்ணசாமியிடம் கேள்வி எழுப்பியபோது, 'அந்தப் பொம்பளையை நான் சட்டசபையில் பார்த்ததே இல்லை' என்றார். தன்னைக் குற்றம்சாட்டியவர் பெண் என்பதால், இப்படியான சொல்லாடலைப் பயன்படுத்தினார். இதற்குப் பல்வேறு தரப்பினரும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா மற்றும் வே.மதிமாறன் ஆகியோரிடம் இதுகுறித்து கேட்டோம். 

கிருஷ்ணசாமி

"கருத்தியல் வலுவில்லாததால் சொன்ன வார்த்தை" - எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா 

'' 'புதிய தமிழகம்' கிருஷ்ணசாமி நீட் தேர்வை ஆதரிக்கும் முடிவு எடுத்திருப்பது அவரின் சொந்த மக்களின் நலன் கருதியதாக இல்லை. பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக செயல்பட்டுக்கொண்டிருப்பதற்கான அடையாளமே இது. நீட் தேர்வுக்கு எதிராகப் போராடுபவர்களைப் பற்றி அவர் எங்கு பேசும்போதும், 'மத்திய, மாநில அரசுகளுக்குக் கெட்டப் பெயர் ஏற்படுத்துபவர்கள்' என்றே தொடங்குகிறார். நீட் ஆதவன் தீட்சண்யா எதிர்ப்பாளர்கள் தாங்கள் ஏன் எதிர்க்கிறோம் என்பதைத் தெளிவாகக் கூறுகின்றனர். அதற்கு கிருஷ்ணசாமியிடம் வலுவான கருத்தியல் இல்லை. இந்த நிலையில் தோழர் பாலபாரதி, சட்டசபையில் நடந்த நிகழ்ச்சியைக் கூறினார். அது 2014-ம் ஆண்டே ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் வெளிவந்தது. மேலும், சட்டசபையில் நடந்தவை என அரசு சார்ப்பில் பதிவான விஷயம். அந்த நிகழ்ச்சி பற்றி கேட்டதற்கு, பதட்டமாகி 'பொம்பள' என்று சொல்கிறார். இது பண்பட்ட வார்த்தை அல்ல. ஒரு சமூக மக்களைப் பிரதிநிதிப்படுத்தும் கிருஷ்ணசாமி இவ்வாறு வார்த்தையைப் பயன்படுத்துவது முறையல்ல. இன்னொன்றையும் இந்த இடத்தில் குறிப்பிட வேண்டும். அனிதாவை உலகமே தங்கை என்றும், மகள் என்றும் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது. கிருஷ்ணசாமியோ, 'அனிதா எனும் பெண்மணி' எனக் குறிப்பிடுகிறார். ப்ளஸ் டூ முடித்தவரைப் பெண்மணி எனக் குறிப்பிடுவதையும், பாலபாரதியை 'பொம்பள' எனச் சொல்வதையும் வைத்துப் பார்க்கையில், பெண்கள் பற்றி அவர் கொண்டிருக்கும் மனநிலையைத்தான் வெளிப்படுகிறது. மூன்று முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, சட்டசபையில் திறம்பட பணியாற்றிய பாலபாரதியை சட்டசபையில் பார்த்ததே இல்லை என்று சொல்வது அபாண்டமானது.'' 


"பாலபாரதியை இப்படிக் கூறியவர், ஜெயலலிதாவைச் சொல்லியிருக்க முடியுமா?" - வே.மதிமாறன்: 

''என்னைப் பொறுத்தவரைக்கும் தனிப்பட்ட முறையில் பார்த்தால், 'பொம்பள' என்கிற சொல், தப்பான சொல்லாடல் இல்லை.  மதிமாறன்கிராமப்புறங்களில் எளிமையாகப் பயன்படுத்தும் சொல்தான். ஆனால், அதை நாம எங்கே பயன்படுத்துகிறோம் என்பது முக்கியம். கிருஷ்ணசாமியின் மகளுக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவ சீட் வழங்கியதாக குற்றச்சாட்டை முன்வைக்கிறார் பாலபாரதி. அதற்குப் பதிலளிக்கும்போது, 'பொம்பள' எனச் சொல்கிறார் கிருஷ்ணசாமி. அப்போ, இந்தப் பொம்பளங்குற வார்த்தையை அவர் இங்கே மோசமாக உபயோகிக்கிறது தெளிவாகிறது.. பாலபாரதி கூறிய குற்றச்சாட்டை ஏற்க முடியாமல், எழுந்த கோபத்தில் அப்படி ஒரு வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கார். சரி, பாலபாரதியை 'பொம்பள' எனக் கூறியவர், ஜெயலலிதாவை அப்படிச் சொல்லியிருக்க முடியுமா? முடியாது. எனில், அந்தச் சொல்லைப் பயன்படுத்தியது தவறு என்பதே என் கருத்து.''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!