வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (07/09/2017)

கடைசி தொடர்பு:21:30 (07/09/2017)

’அனிதா மரணம் தொடர்பாக கிருஷ்ணசாமியைத்தான் முதலில் விசாரிக்க வேண்டும்’ - விளாசும் முத்தரசன்

மாணவி அனிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றால், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியிடம்தான் முதலில் விசாரணை நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். 

முத்தரசன்


நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாணவி, தனது மருத்துவர் கனவு பொய்யானதால் உயிரை மாய்த்துக்கொண்டார். இந்தச் சம்பவத்தை அடுத்து தமிழகம் முழுவதும் மாணவர் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. ஆனால், அனிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி டாக்டர். கிருஷ்ணசாமி நீதி. விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரைச் சந்தித்து மனு அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினரும், மாணவர்களும் கிருஷ்ணசாமிக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்தச் சூழலில், திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், ‘கொலை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்கிறார் கிருஷ்ணசாமி. சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றால், முதலில் கிருஷ்ணசாமியிடம் விசாரித்து, யார் இந்தக் கொலைக்குக் காரணம் என்பதை அவரிடம் கேட்டு, அவர் யாரைச் சொல்கிறாரோ. அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம். கிருஷ்ணசாமி ஒன்றை மறந்துவிடக் கூடாது. இந்த இடஒதுக்கீட்டுக் கொள்கையால்தான் கிருஷ்ணசாமி மருத்துவரானார் என்பதை மறந்துவிட்டு அவர் பேசிக்கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்ல, தனது மகளை மருத்துவராக்குவதற்குரிய ஏற்பாடுகளை முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்து அவர் செய்து கொண்டார். இவற்றையெல்லாம் மறந்துவிட்டு மனுதர்மத்துக்கு ஆதரவாக அவர் பேசிக்கொண்டிருக்கிறார்’ என்றார்.