Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'செருப்புத் தைக்கிறவன் குழந்தை செருப்புதான் தைக்கணுமா?' - சீறும் வளர்மதி!

 “செருப்புத் தைக்கிறவன் குழந்தை செருப்புதான் தைக்கணும்ங்கிறதும், கோடிகள்ல புரளுகிறவனின் குழந்தை கோடிகளில் புரளணும்ங்கிறதும்தான் மத்திய மாநில அரசுகளின் கொள்கையாக இருக்கிறது” என்று ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புக்காக குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட வளர்மதி கோவையில் சீறியிருக்கிறார்.

வளர்மதி

 

நெடுவாசல் மக்களுக்கு ஆதரவாகவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகவும் போராட்டம் நடத்துவதற்காக துண்டு பிரசுரம் விநியோகித்த சேலத்தைச் சேர்ந்த இதழியல் துறை மாணவி வளர்மதியை குண்டர் சட்டம் பாய்ச்சி சிறையில் அடைத்தது தமிழகக் காவல்துறை. சட்ட ரீதியான போராட்டங்கள் நடத்தி குண்டர் சட்டத்தை உடைத்து 59 நாள்கள் சிறைவாசத்துக்குப் பிறகு வெளியேறியிருக்கிறார் வளர்மதி. இன்று கோவை சிறையிலிருந்து வெளியேறிய வளர்மதிக்குப் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்களால் வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த வளர்மதி 

 “உலகத்திலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு நம்முடைய இந்திய நாடுன்னு நமக்குச் சொல்லி கொடுத்திருக்காங்க. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக ஒரு துண்டு அறிக்கை கொடுக்குறது என்னுடைய அடிப்படை உரிமையாக இருந்தும் அதற்காக என்னை குண்டர் சட்டத்தில் போட்ருக்காங்க. இன்னைக்குக் கல்வி எப்படி இருக்கு? அனிதாவை ஒவ்வோர் இடத்திலும் தற்கொலைனு சொல்லிகிட்டு இருக்கோம். படிப்பதற்கு தகுதி இருந்தும் திறமை இருந்தும் அந்தப் பொண்ணால மருத்துவம் படிக்க முடியலைங்கிறதால அந்தப் பொண்ணு இந்த அரசால் கொலை செய்யப்பட்ருக்கா. இது வெறும் அனிதாவுடைய கொலையா மட்டும் பார்க்காமல் ஒவ்வொரு கிராமப்புறங்களிலிருந்தும் அடித்தட்டுக் குடும்பங்களிலிருந்து வருகிற மாணவர்களுடைய படுகொலை. செருப்புத் தைக்கிறவன் குழந்தை செருப்புதான் தைக்கணும்ங்கிறதும் கோடிகள்ல புரளுகிறவனின் குழந்தை கோடிகளில் புரளணும்ங்கிறதும்தான் மத்திய மாநில அரசுகளின் கொள்கையா இருக்குது.  

வளர்மதி

இவங்க கொண்டு வந்திருக்கிற நீட் தேர்வு திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் என ஒவ்வொரு திட்டமுமே மக்கள் நலனுக்காக என்று சொல்வதற்கு அருகதை அற்றது. எல்லாமே மிகப்பெரிய கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்கான திட்டங்களாகத்தான் இருக்கிறது. இதை எதிர்க்கிற ஜனநாயக அமைப்புகள், தோழர்கள், மாணவர்கள் மீது நக்சலைட்டுகள், தீவரவாதிகள் போன்ற முத்திரைகளைக் குத்தி ஒடுக்குகிறார்கள்.  மக்களைக் காப்பாற்ற பயன்படுகிற சட்டமும், நீதிமன்றமும் எப்படி இருக்கு.? என்னுடைய உரிமைகளுக்காகப் போராடும்போது என்னைத் தூக்கி குண்டர் சட்டத்தில் உள்ள வைக்கிறதுக்கும், திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் போன்ற தோழர்கள் மேல மெழுவர்த்தி ஏந்துனதுக்காகக் குண்டர் சட்டம் போடுகிற அளவுக்கும்தான் இந்தச் சட்டம் இருக்கு. சட்டம் என்பது மக்களைக் காப்பாற்றுவதற்கானதாக இங்கு இல்லை. 

அரசுக்கும் துளி கூட மக்கள் நலன் என்பது கிடையாது. ஒவ்வொரு இடங்களிலும் மாணவர் போராட்டம் வெடிச்சிகிட்டு இருக்கு. ஆனால், அரசாங்கம் என்ன பண்ணிகிட்டு இருக்கு? இதை காதுகொடுத்து கேட்பதற்கு கூட நம்முடைய பிரதம அமைச்சர் நரேந்திர மோடிக்கு நேரம் கிடையாது. அவர் நாடுநாடா சுத்திகிட்டுதான் இருக்கார்.  தமிழகத்துல எந்த அரசாங்கம் நடக்கிறது என்று யாருக்குமே தெரியலை. யாரு என்னைக்கு ஆட்சியில இருப்பாங்கனு தெரியலை. அப்படிப்பட்ட ஓர் அவலமான சூழல்தான் இங்கு இருக்கு. அதை மீறி சமூக அக்கறையோட, சமூகத்துல மக்கள் நடத்துகிற போராட்டத்துக்குத் துணை நின்று எங்களுடைய உரிமைகளைக் கேட்கும் எங்களை அரெஸ்ட் பண்ணி சிறையில் வைக்கிறதுக்குத்தான் இந்த அரசாங்கம் முழு மூச்சாக செயல்பட்டுகிட்டு இருக்கு. காவல்துறையும் அரசின் கைக்கூலியாக செயல்படுகிறதே தவிர அதுவும் மக்களைப் பாதுகாப்பதற்காக இல்லை. கண்டிப்பா நெடுவாசலுக்காகவும் கதிராமங்கலத்துக்காகவும் எங்கள் போராட்டம் தொடரும். மீண்டும் நெடுவாசலை நோக்கிப் பயணிப்போம். இது வெறும் நெடுவாசல் கதிராமங்கலத்துக்கான போராட்டம் மட்டும் கிடையாது. ஒட்டுமொத்த இயற்கையையும், நம் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றுவதற்கான போராட்டம்.” என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close