நீட் எதிர்ப்பு மாணவர் போராட்டம் தீவிரம்.. தாமிரபரணி நதியை சுத்தப்படுத்தும் பணி தள்ளிவைப்பு!

தாமிரபரணி

அனிதா மரணத்தைத் தொடர்ந்து நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்கள் தீவிரம் காட்டும் சூழலில், தாமிரபரணி நதியைச் சுத்தப்படுத்தும் பணியை மேற்கொள்ளவிருந்த மாவட்ட நிர்வாகம் அந்தப் பணிகளைத் தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளது. 

தாமிரபரணி ஆற்றைச் சுத்தம் செய்யும் பணியில் அக்கறை காட்டிவரும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியின் முயற்சியால் கடந்த ஜூலை 16-ம் தேதி தாமிரபரணி ஆற்றைச் சுத்தம் செய்யும் பணி நடந்தது. மாணவர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்ற இந்தப் பணியின் மூலமாக தாமிரபரணியில் கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டன. அவர்களின் முயற்சியால் சுமார் 8 கி.மீ தூரத்துக்குத் தாமிரபரணி ஆறு சுத்தம் செய்யப்பட்டது. 

சுத்தப்படுத்தும் பணி

இந்த நிலையில், இரண்டாம் கட்டமாக வரும் 9-ம் தேதி மீண்டும் தாமிரபரணி நதியைச் சுத்தப்படுத்த மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டது. 25-க்கும் அதிகமான கல்லூரிகளின் மாணவர்கள் 2000 பேரை இந்தப் பணியில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டது. சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசுத் துறை ஊழியர்கள் உள்ளிட்டோரும் இந்தப் பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டமும் ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடத்தப்பட்டது. இதனிடையே, தற்போது அனிதா மரணத்துக்கு எதிர்ப்பு வலுத்து வருவதுடன், நீட் தேர்வை ரத்துசெய்யுமாறு கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாமல் பள்ளி மாணவர்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். நாளுக்கு நாள் இந்தப் போராட்டத்தின் வீரியம் வலுத்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை.  

இதனால், தாமிரபரணி சுத்தம் செய்யும் பணிக்காக 2000 மாணவ, மாணவிகள் ஒரே இடத்தில் திரளும்போது அவர்கள் தாமிரபரணியைச் சுத்தம் செய்வதுடன்,. அதன்பின்னர் ஆற்றிலிருந்து வெளியேற மறுத்து நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடக் கூடும் என்கிற தகவல் உளவுத் துறையினருக்குக் கிடைத்தது. இதுகுறித்து காவல்துறையினர் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டுசென்றனர். இது குறித்து மாவட்ட ஆட்சியரும் அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தினார்.

மாவட்ட ஆட்சியர்

இதைத்தொடர்ந்து தற்போது இருக்கும் சூழலில், இந்தத் திட்டத்தை நடத்துவது சரியல்ல என முடிவுசெய்யப்பட்டது. அதனால் தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்யும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாகவும் சுத்தம் செய்வதற்கான மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் தள்ளிவைக்கப்படுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வந்த பின்னரே காவல்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!