Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதுச்சேரி டு கூர்க்... பயணமாகும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள்!?

புதுச்சேரியில்  முகாமிட்டுள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், விரைவில் தங்களது முகாமை மாற்ற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 21 பேர், முதல்வர் பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ளார்கள். முதல்வரை மாற்ற வேண்டும் என்று 10 தினங்களுக்கு முன் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவை சந்தித்து மனு கொடுத்துவிட்டு, அன்று இரவே புதுச்சேரியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்கினர். 

'புதுச்சேரிக்கு வந்ததே ரிலாக்ஸ் பண்ணத்தான்' என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். 'இரண்டு நாள்களில் கிளம்பிவிடுவோம்' என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கூறினார்கள். ஆனால், இரண்டு நாள்கள் கழித்து ரிசார்ட்டை மட்டுமே மாற்றினார்கள். புதுச்சேரியில் உள்ள வேறு ரிசார்ட் ஒன்றுக்கு படையெடுத்தது தினகரன் அணி. இன்று வரை அவர்கள் புதுச்சேரியில்தான் முகாமிட்டுள்ளார்கள். இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை வளைக்கும் வேலையில் எடப்பாடி அணியினர்  ஈடுபட ஆரம்பித்துள்ளார்கள்.

கடந்த 5-ம் தேதி அன்று எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், எத்தனை எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொள்கிறார்கள் என்பதை எடப்பாடி அணி உன்னிப்பாகக் கவனித்தது. ஆனால், 109 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே இந்த கூட்டத்தில் கலந்துகொண்டது, எடப்பாடி அணிக்கு ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பான்மையை விட குறைவான எம்.எல்.ஏ-க்கள் தன் வசம் இருப்பதை எடப்பாடியும் உணர்ந்துள்ளார். ஆனால், எடப்பாடி அணியைச் சேர்ந்த ஜெயக்குமார், 'இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களை வைத்து மட்டும் எங்கள் அணியை மதிப்பிட முடியாது. வரமுடியாதவர்கள் போனில் தகவல் சொல்லியுள்ளார்கள். ஏன், தினகரன் அணியில் இருப்பவர்களே எங்களுக்குத் தொடர்புகொண்டு பேசினார்கள்' என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஆனால் தினகரன் தரப்போ,  'எடப்பாடி அணியிலேயே எங்களுக்கு ஸ்லீப்பர் செல்லாக இருக்கும் எம்.எல்.ஏ-க்களைத் தேவைப்படும்போது நாங்களும் பயன்படுத்திக்கொள்வோம்' என்றார். 

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்

உண்மையில் அ.தி.மு.க-வில் இரு அணியில் இருக்கும் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையை  இரு அணியின் தலைவர்களும் கூறவில்லை. இது போதாது என்று திவாகரனும், தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏ-க்களும் எடப்பாடி அணியில் இருப்பதாகச் சொல்லியுள்ளார். இந்தக் குழப்பங்கள் அ.தி.மு.க-வின் ஆட்சிக்கு கத்தியாகவே உள்ளது. இந்நிலையில், வரும் 12-ம் தேதி அன்று அ.தி.மு.க-வின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெறும் என எடப்பாடி தரப்பு அறிவித்துள்ளது. ஆனால், இதை முறியடிக்கும் அனைத்து வேலைகளையும் தினகரன் அணியினர் மேற்கொண்டுவருகின்றனர். 

பொதுக்குழுவில் பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்கள் இருப்பதைக் காட்டிவிட வேண்டும் என்ற திட்டத்தில் எடப்பாடி அணியினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. ஒருவரை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பேசிவருகிறார்கள். எடப்பாடி அணியினரின் வேகத்தை முறியடிக்க, தினகரனே ஆளுநரை சந்திக்க முடிவுசெய்தார். அப்போதே, தினகரனுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தினகரன் அணியின் எம்.எல்.ஏ ஜக்கையனை  தங்கள் பக்கம் இழுத்து அதிர்ச்சி கொடுத்தது எடப்பாடி அணி. ஆனால் கலங்காத தினகரன், ஆளுநரை குறித்த நேரத்தில் சந்தித்து, 'முதல்வர் மீது எம்.எல்.ஏ-க்களுக்கே நம்பிக்கையில்லை என்று சொல்லியிருப்பதால், முதல்வரை மாற்ற வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார். ஆனால், ஆளுநர் தரப்பிலிருந்து சாதகமான பதில் தினகரனுக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்நி்லையில், எடப்பாடி அணியினர் பொதுக்குழுவுக்கு முன்பாகவே தினகரன் அணியில் இருந்து மேலும் சில எம்.எல்.ஏ-க்களைத் தங்கள் வசம் கொண்டுவரும் அசைன்மென்ட்டை உருவாக்கியுள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதில், முதல் விக்கெட்தான் ஜக்கையன் என்கிறார்கள். இதனால், இனியும் பாண்டிச்சேரியில் தொடர்ந்து இவர்களைத் தங்கவைப்பது ஆபத்து என்று தினகரன் தரப்பு உணர்ந்துள்ளது. இதனால், புதுச்சேரியில் இருக்கும் 20 எம்.எல்.ஏ-க்களையும் உடனடியாக இடம் மாற்றும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளார்கள்.

இதற்காக, கர்நாடகா மாநிலம் கூர்க் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றை புக் செய்துள்ளார்கள். ஏற்கெனவே, புதுச்சேரியில் தங்கியி்ருந்த விடுதிக்குச் சொந்தமான ரிசார்ட்தான் இது என்கிறார்கள். இந்த ரிசார்டுக்கு விரைவில் அனைத்து எம்.எல்.ஏ-க்களையும் அழைத்துச்செல்ல உள்ளார்கள். பொதுக்குழுவுக்கு முன்பே இந்த இடமாற்றம் நடைபெற்றுவிடும் என்கிறார்கள். புதுச்சேரியில் தொடர்ந்து இருப்பது சிக்கலை ஏற்படுத்திவிடும் என்பதால், அதிரடியாக இந்த இடமாற்றம் நாளைக்குள் நடக்க இருப்பதாகச் சொல்கிறார்கள். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close