புதுச்சேரி ரிசார்ட்டில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் வைத்த பாக்கித் தொகை எவ்வளவு தெரியுமா ?

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் அணியும் இணைந்தது, தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்த டி.டி.வி. தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், முதல்வர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்க வேண்டும் என்றும் அவருக்கு அளித்துவந்த ஆதரவைத் தாங்கள் விலக்கிக் கொள்வதாகவும் மனு அளித்தனர். இந்நிலையில், டி.டி.வி. தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேரையும் எதிரணியினர் வளைத்துவிடக்கூடாது என்பதற்காக, கூவத்தூர் பாணியில், கடந்த மாதம் 22-ம் தேதி புதுச்சேரி ‘விண்ட்ஃப்ளவர்’ என்ற தனியார் ”பீச் ரிசார்ட்டில்” தங்கவைக்கப்பட்டனர்.

புதுச்சேரி

வார இறுதி நாள்களுக்காக அந்த ரிசார்ட்டில் ஏற்கெனவே முன்பதிவுகள் செய்யப்பட்டிருந்ததால் 25, 26, 27 ஆகிய மூன்று நாள்கள் புதுச்சேரி 100 அடி சாலையில் இருக்கும் ‘தி சன் வே மேனர்’ என்ற நட்சத்திர அந்தஸ்து பெற்ற சொகுசு விடுதிக்கு இடம் பெயர்ந்தார்கள். பின்னர் மீண்டும் 27-ம் தேதியிலிருந்து நேற்று (7.9.2017) வரை ’விண்ட்ஃப்ளவர்’ ரிசார்ட்டில் முகாமிட்டிருந்தனர். இந்நிலையில், தினகரன் தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ-க்களில் ஒருவரான ஜக்கையனை வளைத்தது எடப்பாடி தரப்பு. அதில் அதிர்ச்சியடைந்த தினகரன், உடனே ரிசார்ட்டை காலி செய்துவிட்டு மீதியிருக்கும் 20 எம்.எல்.ஏ-க்களை வேறு இடத்துக்கு மாற்றும் வேலைகளில் இறங்கினார். முதல் கட்டமாக, நேற்று புதுச்சேரி ரிசார்ட்டை காலிசெய்தனர்.

அவர்கள் எங்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்ற தகவல்கள் உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவர்கள் தங்கியிருந்த விடுதி வாடகை மற்றும் பாக்கித் தொகை எவ்வளவு என்பது வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 22-ம் தேதியிலிருந்து 25-ம் தேதி வரை ’விண்ட் ஃப்ளவர்’ ரிசார்ட்   - ரூ.5 லட்சம். ஆகஸ்ட் 25-ம் தேதியில் இருந்து 27-ம் தேதி வரை ‘தி சன்வே மேனர்’ நட்சத்திர விடுதி – ரூ.7 லட்சம். ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை ‘விண்ட் ஃபிளவர்’ ரிசார்ட் - 18 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய். மொத்தத் தொகை 30 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய். இந்த ரூபாயை தினகரன் தரப்பு எம்.எல்.ஏ-க்கள் பாக்கி வைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!