வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (08/09/2017)

கடைசி தொடர்பு:12:47 (08/09/2017)

தமிழக உள்ளாட்சித் தேர்தல்: தி.மு.க கேவியட் மனுத்தாக்கல்!

தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, தி.மு.க சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக் காலம் முடிவடைந்ததையொட்டி, தேர்தல் நடத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டே நடத்தப்படவேண்டிய தேர்தலை, மாநிலத் தேர்தல் ஆணையமும் தமிழக அரசும் இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடத்துவற்கான உறுதியான அறிவிப்பை வெளியிடவில்லை. இந்த நிலையில், நவம்பர் 17-ம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக, கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செப்டம்பர் 18-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு, நவம்பர் 17-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு அளித்திருக்கும் தீர்ப்பை வரவேற்கிறேன். உள்ளாட்சி ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் உயர் நீதிமன்றத்தின் இந்த மிக முக்கியமான தீர்ப்பு, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ‘குதிரை பேர’ அரசின் அடாவடிப் போக்குக்கு ஓர் எச்சரிக்கை மணியாக அமைந்திருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தி.மு.க சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று கேவியட் மனுத்தாக்கல்செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஏதேனும் மனுத்தாக்கல்செய்யப்பட்டால், எங்கள் தரப்பு விளக்கத்தைக் கேட்ட பின்னரே தீர்ப்பு அளிக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி மனுத்தாக்கல் செய்தார்.