வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (08/09/2017)

கடைசி தொடர்பு:12:30 (08/09/2017)

‘ஏன் எங்களை விவசாயிகள் என்று அழைக்கிறீர்கள்?’- ஊடகவியலாளர் சாய்நாத்தை கலங்கவைத்த கேள்வி

சாய்நாத்

‘விவசாயிகள் என்பது யார்? விவசாயத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள்தான் விவசாயிகள். எங்கள் கட்டுப்பாட்டில் மண் இருக்கிறதா... எங்கள் கட்டுப்பாட்டில் விதை இருக்கிறதா... எங்கள் கட்டுப்பாட்டில் உரம் இருக்கிறதா... விவசாயம் சம்பந்தப்பட்ட எதுதான் எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது? பிறகு ஏன் எங்களை விவசாயி என்று அடையாளப்படுத்துகிறீர்கள்?’  கடந்த பல பத்தாண்டுகளாக விவசாயம் மற்றும் கிராமப்புறம் சார்ந்த பிரச்னைகளைப் பல ஊடகங்கள் வாயிலாக பொதுத் தளத்துக்குக் கொண்டுசென்ற பி.சாய்நாத்திடம், இந்தியத் தென் கோடியில் இருக்கும் நெல்லையைச் சேர்ந்த விவசாயியும் வடகோடி மாநிலமான ஹரியானா விவசாயியும் கேட்ட கேள்விகள் இவை. ‘விவசாய நெருக்கடியும் இந்திய ஊடகங்களும்’ என்ற தலைப்பில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.  அந்தக் கருத்தரங்கில் பேசிய சாய்நாத், தன்னைக் கலங்க வைத்த இந்தக் கேள்விகளைப் பற்றி உருக்கமாகப் பேசினார்.

மேலும், ‘நம் நாட்டில் விவசாயப் பிரச்னை என்பது என்னவோ, உலகமயமாக்கலுக்குப் பின்னரான 1991-ம் ஆண்டுக்குப் பிறகுதான் அதிகரித்தது என்பதுபோல ஒரு பிம்பம் உருவாக்கப்படுகிறது. உண்மையில், அதற்கு முன்னரே விவசாயம் சார்ந்து பல பிரச்னைகள் இருந்தே வந்திருக்கின்றன. ஏதாவது ஒரு வகையில், நிலச் சீர்திருத்தச் சட்டம், முறையாக அமல்படுத்தியிருந்தால்கூட 1991-க்கு முன்னர் விவசாயப் பிரச்னைகள்குறித்து அரசுக்கு வேறு விதமான அணுகுமுறை இருந்தது என்று கூறலாம். ஆனால், 30 ஆண்டுகளுக்கு முன்னர் யார் அதிகாரித்தில் இருந்து அரச கட்டமைப்பை ஆட்டுவித்தார்களோ, அவர்கள்தான் இப்போதும் அதிகாரத்தில் வேறு ரூபத்தில் இருந்து விவசாயத்தைக் கட்டுப்படுத்துகிறார்கள். விவசாயிகள் கையில் ஒரு கட்டுபாடும் இல்லை’ என்று வேதனையோடு தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் கடன்கள்குறித்து சாய்நாத், ‘விவசாயிகளுக்குக் கொடுக்கப்படும் கடன்கள் தள்ளுபடிசெய்யப்பட்டால், அது மானியங்களாகப் பார்க்கப்படும். இதே தேசத்தில்தான் கார்ப்பரேட் முதலாளிகளுக்குக் கொடுக்கப்படும் கடன்கள் ரத்து செய்யப்பட்டால் சன்மானமாகப் பார்க்கப்படுகிறது. விவசாயக் கடன்கள் வழங்கப்படுவதும், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு அல்ல. விவசாயம் செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் கடன்கள் வழங்கப்படுகின்றன. அதேபோல, பயிர்க்காப்பீடு செய்யும்போதும், 86 சதவிகித காப்பீட்டுப் பணம் விவசாயிகளுக்குக் கொடுக்கப்படுவதில்லை’ என்று விளக்கினார்.

தமிழக அளவிலும் இந்திய அளவிலும் நடக்கும் விவசாயிகள் தற்கொலை பற்றி சாய்நாத், ‘இந்திய அளவில் விவசாயிகள் தற்கொலையில் முதல்  ஆறு இடங்களில் தமிழகம் இல்லை. ஆயினும், இங்கு அந்த நிலை சீக்கிரம் மாறக்கூடும் என்றே தோன்றுகிறது. ஆனால், தமிழகத்தில் பொதுவாக தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை, மற்ற மாநிலங்களைவிட மிக அதிகம். எனவே, விவசாயிகள் தற்கொலையை சாதாரண தற்கொலை எனும் மடைமாற்றம் செய்யப்படுகிறதோ என்ற சந்தேகம்கூட இருக்கிறது. உண்மையில், விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது வறட்சியினால் மட்டுமல்ல. அதற்குப் பல்வேறு காரணிகள் இருக்கின்றன. ஆனால், ஊடகங்கள் அதை வெறும் வறட்சியோடு மட்டும் சேர்த்துப் பார்க்கிறது. கிட்டத்தட்ட 60 சதவிகிதம் நிலத்தடி நீரை நம்பி விவசாயம் பார்க்கப்படும் நம் நாட்டில், தொடச்சியாக ஐந்து பருவ மழை நன்றாகப் பெய்தாலும், தண்ணீர் பிரச்னையைச் சமாளிக்க முடியாது’ என்றார் வருத்தத்தோடு.

‘டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு முறைகளில் போராட்டம் நடத்திவருகின்றனர். குறிப்பாக, அவர்கள் முன்னெடுத்த போராட்டங்களில் சில இந்தியாவையே உலுக்கியது. அப்படி அவர்கள் செய்தது, அரசியல்வாதிகளின் கவனத்தை ஈர்க்க அல்ல. ஊடகங்களின் கவனத்தை ஈர்க்க. அவர்கள் விதவிதமான, விநோதமான போராட்ட வடிவங்களை முன்னெடுக்கவில்லையேயானால், பத்திரிகைகள் கண்டிப்பாக அவர்களை துச்சமெனக்கூட மதித்திருக்காது. எனவே, விவசாயப் பிரச்னைகள் பற்றி தொடர்ச்சியாக நாம் பேசவேண்டிய, எழுதவேண்டிய, கருத்து பரிமாறிக்கொள்ளவேண்டிய தேவை இருக்கிறது’ என்றார் நிறைவாக.