‘ஜக்கையன் மனமாற்றத்தால் உஷாரான தினகரன்!’ - வேறு மாநிலத்துக்குச் செல்லும் எம்.எல்.ஏ-க்கள் | 'Dinakaran gets alerted because of Jakkaiyan's change of mindset'- MLA's moved on to the next state

வெளியிடப்பட்ட நேரம்: 13:11 (08/09/2017)

கடைசி தொடர்பு:15:27 (08/09/2017)

‘ஜக்கையன் மனமாற்றத்தால் உஷாரான தினகரன்!’ - வேறு மாநிலத்துக்குச் செல்லும் எம்.எல்.ஏ-க்கள்

தினகரன்

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-வாக இருந்த எஸ்.டி.கே. ஜக்கையன், திடீரென முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரானார். இதனால் அதிர்ச்சியடைந்த தினகரன், எம்.எல்.ஏ-க்கள் அணி மாறுவதைத் தடுக்க, புதுச்சேரியிலிருந்து மைசூருக்கு முகாம் மாற்ற திட்டமிட்டுள்ளார். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் தினகரனுக்கும் இடையே அக்கப்போர் நடந்துவருகிறது. 'முதல்வரை மாற்ற வேண்டும்' என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர், கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி ஆளுநரைச் சந்தித்து கடிதம் கொடுத்தனர். அதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்குத் தங்களின் ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் குறிப்பிட்டனர். இதனால், சட்டசபையில் பெருபான்மையை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிடுவார் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், ஆளுநர் தரப்பிலிருந்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், ஆதரவை வாபஸ் பெறுவதாகக் கடிதம் கொடுத்ததும், தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி ஆகியவை ஆளுநரைச் சந்தித்தன. அதன்பிறகும் ஆளுநர் அலுவலகம் அமைதியாக இருந்துவருகிறது. 

இந்தச் சூழ்நிலையில், தினகரன் தரப்பில் நேற்று மீண்டும் ஆளுநரைச் சந்தித்து மனு கொடுக்கப்பட்டது. அப்போது. அ.தி.மு.க. கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ-வான கருணாஸ் மற்றும் இரண்டு எம்.எல்.ஏ-க்களும் தங்களின் ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் கொடுத்தனர். இதனால், ஆதரவை வாபஸ் பெறும் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது. ஆளுநரை தினகரன் சந்தித்த நேரத்தில், அவரது அணியிலிருந்த எஸ்.டி.கே.ஜக்கையன் எம்.எல்.ஏ., முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் தாவினார். இது, தினகன் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தற்போது, தினகரனுக்கு ஆதரவாக 21 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர்.

ஆளுநரைச் சந்தித்துவிட்டு தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்களுடன் தினகரன் ஆலோசனை நடத்தினார். அதில், புதுச்சேரி ரிசார்ட்டில் இருப்பதால் நமக்குப் பலவகையில் நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இதனால், கர்நாடக மாநிலம் மைசூருக்குச் செல்வோம் என்று கூறியுள்ளார். அதற்கு, அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்களும் ஓகே சொல்லியிருக்கின்றனர். அதன்படி, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் இன்று மைசூர் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எம்.எல்.ஏ-க்களின் பயண ஏற்பாடுகளை புகழேந்தி கவனித்துவருகிறார்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள்

இதுகுறித்து நம்மிடம் பேசிய தினகரன் ஆதரவாளர்கள், "எங்களின் தீவிர ஆதரவாளரான ஜக்கையன், அணி மாறுவார் என்று தினகரன் கனவில்கூட நினைக்கவில்லை. அவரை முழுமையாக நம்பியிருந்தார். ஆளுநரைச் சந்திக்க 10 பேருக்கு மட்டுமே அனுமதி கிடைத்தது. இதனால், மற்றவர்களை ஆளுநர் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லவில்லை. ஆளுநரை நாங்கள் சந்திக்கச் சென்ற சமயத்தில் எங்களுக்கு நெருக்கடி கொடுக்கவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜக்கையனைப் பயன்படுத்தியுள்ளதாகக் கருதுகிறோம்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜக்கையனிடம் தினகரன் பேசிப்பார்த்தார். அதன்பிறகு, உங்கள் விருப்பம்போல செயல்படுங்கள் என்று தினகரன் சொல்லிவிட்டார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் தரப்பினரே ஜக்கையன் மனதை மாற்றிவிட்டனர். நிர்ப்பந்தத்தின்பேரில்தான் அவர் அணி மாறியிருக்கிறார். ஜக்கையனைத் தொடர்ந்து, இன்னும் 9 எம்.எல்.ஏ-க்கள் தங்கள் அணிக்கு வருவார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் சொல்லியிருக்கிறார். அது நிச்சயம் நடக்காது.

இதற்கிடையில், எங்கள் ஆதரவு எம்.எல்.ஏ-வான கதிர்காமுவுக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதனால் கர்நாடக மாநிலம் மைசூர், கூர்க் பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு எங்கள் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் செல்கிறோம். நாங்கள் மைசூர் செல்வதைத் தடுக்கவும் பலவகையில் தடைகள் வந்துள்ளன. எங்கள் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் தனபால், மூன்றாவது முறையாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எங்களின் காலஅவகாசம் கோரிக்கையையும் சபாநாயகர் நிராகரித்துள்ளார். சட்டரீதியாக நோட்டீஸை எதிர்கொள்ள ஆலோசனை நடந்துவருகிறது. அடுத்தகட்ட நடவடிக்கைகுறித்து தினகரன் தீவிர ஆலோசனை நடத்திவருகிறார். எங்களின் ஸ்லீப்பர் செல் எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்கள் வெளியில் வரவேண்டிய நேரம் வந்துவிட்டது என்றே கருதுகிறோம்." என்றனர்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close