‘நாட்டுக்கோழிதான் நம் கலாசார உணவு!’ - கோடாங்கிபட்டி கூரைக்கடை ஸ்பெஷல் | Kodangipatti Kooraikkadai Mess special story

வெளியிடப்பட்ட நேரம்: 14:44 (08/09/2017)

கடைசி தொடர்பு:15:13 (08/09/2017)

‘நாட்டுக்கோழிதான் நம் கலாசார உணவு!’ - கோடாங்கிபட்டி கூரைக்கடை ஸ்பெஷல்

தேனி டு போடி செல்லும் வழியில் இருப்பது கோடாங்கிபட்டி கிராமம். மதிய வேளையில் அந்த வழியாகச் சென்றுகொண்டிருக்கும்போது, சாலையோரத்தில் இருக்கும் கூரை ஒன்றில் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. இருசக்கர வாகனங்களும் கார்களும் சாலையின் இருபுறமும் நின்றுகொண்டிருந்தன. விவரம் கேட்க அங்கே சென்றோம். அது ஒரு சாப்பாட்டுக் கடை. 

Kodangpatti Kooraikkadai

சிறிய அளவில் கூரை வேய்ந்து, 15 பேர் அமர்ந்து சாப்பிடும் அளவுக்கு உள்ளே இடவசதி செய்யப்பட்டிருந்தது. கடை ஓனரிடம் பேச, கடைக்குள் நுழைய முற்பட்டேன். ‘வரிசையில் வாங்க!’, ‘படிச்சவுங்க நீங்களே இப்படிப் பண்ணலாமா?’ போன்ற குரல்கள் கணீரென வந்து விழுந்தன. நானும் அமைதியாக வரிசையில் காத்திருந்து உள்ளே சென்றேன். நாட்டுக்கோழி சாப்பாட்டை சிலர் ருசித்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில், `நமக்கு இடம் கிடைக்குமா?` என்று ஏக்கத்துடன் காத்துக்கொண்டிருந்தது ஒரு கூட்டம்.  ஒருவழியாக எனக்கும் இடம் கிடைக்க, பந்தியில் அமர்ந்தேன்.

‘என்ன சாப்பிடுறீங்க?’ என்று புன்னகைத்த முகத்துடன் ஒருவர் வந்தார். ‘இங்க என்ன ஸ்பெஷல்?’ என்று கேட்டேன். ‘நாட்டுக்கோழிதான் நம்ம கடையில ஸ்பெஷல். சூடான நாட்டுக்கோழிக் குழம்பு, சுவையான நாட்டுக்கோழி சுக்கா, அருமையான நாட்டுக்கோழி வறுவல்’ என நாட்டுக்கோழி வெரைட்டிகளை கலர்ஃபுல்லாக நம் முன்னே எடுத்துவைத்தார். அதைக் கேட்டபோதே, பாதி வயிறு நிறைந்ததுபோல் இருந்தது.  நாட்டுக்கோழிக் குழம்பும் வறுவலும் ஆர்டர்செய்து சாப்பிட்டோம். வீட்டில் சூடாகச் சமைத்துச் சாப்பிடுவது போன்ற ஓர் உணர்வு. காத்திருந்து கறி கடிப்பதில் ஒரு திருப்தி இருப்பதை மனதார அல்ல ருசியார உணர்ந்தேன். கடையின் கூரை அமைப்பு, கிராமியச் சூழலைக்கொண்டிருந்தது.

Kodangpatti Kooraikkadai

சாப்பிட்டு முடித்து, பில் கொடுத்தவுடன் நமக்கு சப்ளை செய்தவரின் காதில், “கடை ஓனர் யார்?” என்று மெள்ள கேட்டோம். “நான்தான் ஓனர்!” என்றார் அதே புன்னகையுடன்.

“என் பேர் முருகன். நான் இருக்கிறது கோடாங்கிபட்டி. இந்தக் கடை ஆரம்பிச்சு, நாலு வருஷம் ஆச்சு. இதை `கூரைக்கடை' னுதான் சொல்வார்கள். சந்தையில் நாட்டுக்கோழி வாங்கி முடியை எடுத்து, மஞ்சள் தேய்ச்சு, தீயில் சுட்டு, வீட்டில் எப்படிப் பக்குவமா  சமைப்பாங்களோ, அதேபோலதான் இங்கேயும் சமைப்போம். எங்க வீட்டுப் பெண்கள்தான் சமையல் செய்வார்கள். எங்கள் வீடுகளில் இதற்காகவே நாட்டுக்கோழி வளர்க்கிறோம். அதனால் தரமான நாட்டுக்கோழிகளைத்தான் சமையலுக்குப் பயன்படுத்துவோம். தினமும் மதியம் 12 மணிக்குக் கடையைத் திறப்போம். 4 மணி வரை சாப்பாடும் நாட்டுக்கோழி வகையும் கிடைக்கும். அதேபோல மாலை 5 மணி முதல் 10 மணி வரை இட்லி, தோசை, பரோட்டா போன்ற டிபன் வகைகளுடன் நாட்டுக்கோழிக் குழம்பு, வறுவலும் கிடைக்கும்.

கூரைக்கடை

எங்க கடையின் தரத்தை வேற எங்கேயும் நீங்கள் பார்க்க முடியாது. சுவையா, அதே நேரம் நியாயமான விலையில் விற்பனை செய்றோம். அதனால்தான் கோடாங்கிபட்டியைத் தாண்டவிடாமல் எங்கள் கடையின் நாட்டுக்கோழி வாசம் எல்லாரையும் இழுக்குது. இப்பெல்லாம் யார் சத்தான உணவுகளைச் சாப்பிடுறாங்க? எல்லாம் பிராய்லர் கோழிகளைச் சாப்பிட்டுவிட்டு ஆஸ்பத்திரிக்குத்தான் பணத்தைக் கொடுக்கிறாங்க. எலும்புகள் வலுவா இருக்கணும்னா, நாட்டுக்கோழிதான் சாப்பிடணும். அதுதான் சத்தானது. நாட்டுக்கோழிதான் நம் கலாசார உணவு” என்றார்.


டிரெண்டிங் @ விகடன்