Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வேளாங்கண்ணியில் கோலாகலத்துடன் நடந்த அன்னை மேரி தேர் பவனி

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள மாதா கோயில் விழா, ஆண்டுதோறும் செப்டம்பர் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆகஸ்டு 29-ம் தேதி மாலை, கொடியேற்றத்துடன்  தொடங்கிய இந்த விழாவில், வெளிநாடுகளிலிருந்தும் வந்து ஏராளமானோர் பங்கேற்றனர். வெளிநாட்டு மற்றும் வெளிமாநில மக்களுக்காக பல மொழிகளில் திருப்பலிகள் நடத்தப்பட்டன. இந்த நாள்களில், பக்தர்களின் கவனத்தை ஈர்த்தது தினமும் இரவு நடைபெற்ற அன்னை மேரி தேர் பவனி. அன்னையின் திரு உருவம் தாங்கிய திருத்தேர், அழகாக அலங்கரிக்கப்பட்டு கண்ணைப்பறிக்கும் மின்னொளியில் வாணவேடிக்கைகளுடன் வந்த காட்சி, அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது. . 

அன்னை மேரி

விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக, நேற்று இரவு அன்னையின் பெரிய தேர் பவனி நடைபெற்றது. இரவு சுமார் 7.30 மணி அளவில் ஆலய மணிகள் ஒலிக்க, பேராலய முகப்பில் மின் விளக்குகள் மற்றும் மலர் அலங்காரத்துடன் மாதா சொரூபம் தாங்கிய பெரிய தேர் பவனி தொடங்கியது. கடை வீதி, கடற்கரைச் சாலை, ஆரிய நாட்டுத் தெரு வழியாக மக்கள் வெள்ளத்தில் மிதந்தபடி மீண்டும் பேராலயத்தை வந்தடைந்தது.  நிறைவு நாளான இன்று காலை, ஆரோக்கிய அன்னையின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. மாலை 6 மணி அளவில் ஆரோக்கிய அன்னையின் கொடி இறக்கப்பட்டு, விழா நிறைவு பெறும்.

பெரும்பாலான மக்கள் பாதயாத்திரையாகவே இங்கு வந்துள்ளனர். தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்துவதற்காக, 40 நாள்கள் விரதம் இருந்து வந்தவர்களும் உண்டு. சிலர்,  தங்களது தலைமுடியைக் காணிக்கை செலுத்தினர். இவை தவிர, காணிக்கையாகச் செலுத்தப்படும் பொருள்கள், பிரார்த்தனைக்குப் பிறகு அங்குள்ள அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்படுகின்றன.

திருத்தேர்

விழாகுறித்து பேராலய பாதிரியார் பிரபாகர் கூறியபோது, ''ஒவ்வோர் ஆண்டும் பல்லாயிரக்கணக்கான மக்கள் விழாவுக்கு வருகை தருவார்கள். அவர்களில், இரண்டு விதமான மக்களைக் காணலாம். தங்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தந்ததற்காக இறைவனுக்கும் மாதாவுக்கும் நன்றி சொல்பவர்கள் ஒருவிதம். தங்களது கஷ்டங்களைத் தீர்க்குமாறு கண்ணீர் மல்க வேண்டுபவர்கள் மற்றொரு விதம். தினமும் இயற்கைக்கு அப்பாற்பட்ட எவ்வளவோ விஷயங்கள் இறைமகன் இயேசுவின் அருளாலும் மாதாவின் பரிந்துரையாலும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close