Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“ஈழத் தமிழர்களுக்கு ஒரே ஆதரவு தமிழர்கள்தான்!” - இலங்கை அமைச்சர் அனந்தி சசிதரன் பேட்டி

அனந்தி சசிதரன், anandhi sasidharan

அனந்தி சசிதரன், இலங்கைத் தமிழர். இலங்கை வடக்கு மாகாண சபையின் உறுப்பினராக உள்ள இவர் சமூக சேவைகள், புனர்வாழ்வளித்தல், உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழில்துறை தொழில் முனைவோர் மேம்பாடு ஆகிய துறைகளுக்கான அமைச்சராகவும் உள்ளார். இவரது கணவர் சசிதரன்; விடுதலைப் புலிகள் இயக்கத்தின் திரிகோணமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்தவர். 

2009-ல் நடைபெற்ற இறுதிப் போருக்குப் பின்னர் இலங்கை ஆயுதப் படைகளிடம் சரணடைந்த சசிதரன் அதன் பின்பு காணாமல் போனதாகச் சொல்லப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கைத் தமிழ் மக்களுக்காக ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் திருமதி அனந்தி சசிதரன், ஒரு திருமண நிகழ்ச்சிக்காக தமிழ்நாட்டுக்கு வருகை தந்திருந்தார். அவரைச் சந்தித்துப் பேசியபோது...

''போருக்குப் பிந்தைய புனர்வாழ்வுப் பணிகள் எவ்வாறு நடந்து கொண்டிருக்கின்றன?''

''லட்சத்துக்கும் அதிகமான போராளிகள் மற்றும் மக்களுக்கான மீள் குடியமர்த்தல் பணிகளைச் செய்து வருகிறோம். இவர்கள் நிறைவான வாழ்க்கை வாழ்வதற்கான பொருளாதாரம் இல்லை. புனர்வாழ்வுக்கான நிதியும் மாநில அரசிடம் இல்லை. நேரடியாக மத்திய அரசாங்கமே இந்தப் புனர்வாழ்வுப் பணிகளைச் செய்து வருகிறது. (வெளிநாட்டு நிதியுதவிகளைப் பெறுவதற்காக) எந்தப் பகுதி மக்களுக்கு என்ன தேவை என்பது எங்களுக்குத்தானே தெரியும். எங்களிடம் கலந்தாலோசிக்காமலே மத்திய  அரசு செயல்படுகிறது. இதே மாதிரியான நிலைதான் 'தெற்கு மாகாண'த்திலும் நடைபெறுகிறது. எந்தவிதமான மாறுபாடும் இல்லை.''

''காணாமல் போனவர்களின் நிலை என்ன? அவர்களை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....?''

"நாங்கள் தமிழர் என்ற ஒரே காரணத்துக்காகக் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறோம். 18,000 பேருக்கு மேல் காணாமல் போயிருக்கிறார்கள். அரசாங்கம் அக்கறையில்லாமல் செயல்படுவதே இதற்குக் காரணம்.''

''போர்க்குற்றம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் அழுத்தமும், சர்வதேச நாடுகளின் அழுத்தமும் போதுமானதாக இருக்கிறதா....?''

“அழுத்தம் எங்கே இருக்கிறது... இலங்கை தப்பித்துவிட்டது. அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நீர்த்துப் போய்விட்டது. சர்வதேச போர்க்குற்றம் என்பது போய் உள்நாட்டுப் போர் என்றாகிவிட்டது. இந்த நிலையில், போர்க்குற்ற விசாரணைக்கு மேலும் இரண்டு ஆண்டு கால நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இது இலங்கை அரசு, தனக்கெதிரான அனைத்துத் தடயங்களையும் மறைப்பதற்கு வசதியாகிவிட்டது. இனி எங்களுக்கு நீதி கிடைக்க... இன்னும் கடுமையாகப் போராட வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.''

“சர்வதேச நீதிபதிகள் இலங்கைக்கு வர அனுமதியில்லை - என்ற குரல் அரசு தரப்பிலிருந்து வந்துகொண்டே இருக்கிறதே...?”

“போர்க்குற்றம் தொடர்பாக இலங்கை அரசிடம் இருந்த முடிச்சுகள் அனைத்தையும் அவிழ்த்தாகிவிட்டது. ஆட்சி மாற்றம் என்ற ஒன்றைக் கொண்டுவந்து, தன்னை எதற்கும் தயார்படுத்திக் கொண்டது இலங்கை அரசு. ‘என்னை விசாரிக்க, நானே நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்துக்கொள்வேன்' என இலங்கை செயல்படுவதிலிருந்தே சர்வதேசத்தின் அழுத்தம் இல்லை என்பது தெளிவாகப் புலனாகிறது.''

அனந்தி சசிதரன், anandhi sasidharan

''தொடர்ந்து தமிழக மீனவர்களை சிங்கள அரசு சுடுவதும், கைது செய்வதுமாக இருக்கிறது. இதைப் பற்றி உங்களின் கருத்து...?''

“இது உண்மையில் இலங்கை அரசும் இந்திய அரசும் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டிய பிரச்னை. ஈழ தமிழர்களுக்கு பக்கபலமான, ஆதரவான ஓரிடம் என்றால் அது தமிழகம்தான். தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையில் வெறுப்புஉணர்வை ஏற்படுத்தி இருவருக்குமான உறவினை அறுக்கும் வேலையை சிங்கள அரசு செய்து வருகிறது. இன்னொன்று கடல் பரப்பு எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. இப்பிரச்னையை இரு அரசுகளும் பேசித் தீர்த்துக்கொள்ளலாம்.''

''ஜெயலலிதா இல்லாத தமிழகத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்...?''

''போருக்குப் பிந்தைய காலகட்டத்தில், ஜெயலலிதா அம்மையார் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக 'சர்வதேச விசாரணை வேண்டும்' எனச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதும், 'இலங்கையில் நடந்தது இன அழிப்பு' என்று அம்மையார் பேசியதும் எங்களுக்குச் சற்று ஆறுதலாகவும், நம்பிக்கையாகவும் இருந்தது. ஈழத்தமிழர் பிரச்னையில் ஒரு தற்துணிவான முடிவெடுக்கும் துணிவு அவரிடம் இருந்தது. அம்மையாரின் மரணம் ஈழத்தமிழர்களுக்கு ஒரு பின்னடைவே. எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது... தமிழ்நாட்டு அரசியல் ஒரு பக்கம் சென்றாலும், தமிழ்நாட்டில் இருக்கும் தமிழ் உணர்வாளர்கள் எங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என நம்புகிறோம்.''

 

“ஈழ தமிழர்களுக்கு இந்திய அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்...?”

“இந்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான வெளியுறவுக் கொள்கை மூலம் நியாயத்தை பெற்றுத் தர முனைய வேண்டும். 

இந்தியா, எங்களுக்கு என்னதான் செய்திருந்தாலும் கூட, ஈழத்தமிழர்கள் இந்தியாவுக்கு ஒரு பாதுகாப்பு அரணாக இருப்போமே ஒழிய, விரோதமாக செயல்படமாட்டோம். இந்திய அரசிடம் நாங்கள் எதிர்பார்ப்பது, இறைமையுடன் கூடிய ஒரு சுயநிர்ணயத்தைப் பெற்றுத்தருவதுதான். எங்களுக்கான நீதியைப் பெற்றுத்தர வேண்டிய கடமை இந்திய அரசாங்கத்துக்கு உண்டு.”

“உங்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நீங்களே பல இடங்களில் சொல்லியிருக்கிறீர்கள். அந்த நிலை இப்பொழுது எப்படி இருக்கிறது...?”

“அச்சுறுத்தல் இல்லை என்றால்தான் ஆச்சர்யம். இந்தப் போராட்ட வாழ்க்கை பழக்கப்பட்டதாகி விட்டது. நீதி கேட்டு புறப்படும்போதே எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று எனக்குத் தெரியும். ஆனால், அதற்காகப் பயந்து மக்களுக்கு செய்ய வேண்டிய சேவைகளையும் கடமைகளையும் செய்யாமல் இருக்க முடியாது. மரண பயத்துடன் நாங்கள் வாழ பழகிக் கொண்டோம்.”

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close