வெளியிடப்பட்ட நேரம்: 17:06 (08/09/2017)

கடைசி தொடர்பு:17:06 (08/09/2017)

"நேற்று அரசுப்பணியை துறந்தவர்... இன்று அரசுக்கு எதிராக கலகம் செய்பவர்" - சபரிமாலாவை மிரட்டும் காவல்துறை!

போராட்டத்தில் ஆசிரியை சபரிமாலா

''நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் செய்வதற்கு வேலை இடைஞ்சலாக இருந்தால்... அந்த வேலையே எனக்கு வேண்டாம்'' என்று சொன்னதோடு,நேற்று (07-09-2017) தன் வேலையையும் ராஜினாமா செய்தார் ஆசிரியை சபரிமாலா. இதனைத் தொடர்ந்து அவர், இன்று (08-09-2017) தன்னுடைய வீட்டில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், ''அனுமதியின்றி வீட்டில் போராட்டம் செய்யக் கூடாது'' என்று அவருடைய போராட்டத்துக்கு இடைஞ்சலாகக் காவல் துறையினர் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் வைரபுரம் ஒலக்கூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாகப் பணியாற்றியவர் சபரிமாலா. இவர், நீட் தேர்வுக்காகப் போராடி உயிர்நீத்த அனிதாவுக்கு நீதி வேண்டியும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் தனது மகனுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். ''ஓர் ஆசிரியராக இருந்துகொண்டு அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தக் கூடாது'' என்று காவல் துறை எச்சரித்ததோடு அவருடைய உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி அளிக்கவும் மறுத்தது. இதனால், சபரிமாலா தனது ஆசிரியைப் பணியை ராஜினாமா செய்தார். 'இனி போராடுவதற்கு வேலை தடையில்லை' என்று கருதிய சபரிமாலா, இன்று காலை 8.30 மணியிலிருந்து சிங்கனூரில் உள்ள தனது வீட்டில் அமர்ந்து தனியாகப் போராட்டம் நடத்தினார். இதற்கு அப்பகுதியில் இருப்பவர்களும் ஆதரவு அளித்தனர். இந்தத் தகவல் அறிந்த காவல் துறையினர் உடனடியாகச் சபரிமாலா வீட்டுக்குச் சென்று அங்கிருந்த ஆதரவாளர்களை வெளியில் இழுத்துவந்தனர். அதோடு அங்குபோட்டிருந்த சாமியானா பந்தலை அகற்றினர். கொஞ்சமும் எச்சரிக்கை கொடுக்காதவண்ணம் போலீஸார் அங்கு இதுபோன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து சபரிமாலாவிடம் பேசியபோது, "போராட்டம் செய்வதற்கு அரசுப் பணிதான் இடைஞ்சல் என்பதால் எனது ஆசிரியர் பணியை ராஜினாமா செய்தேன். அதனால் இன்று காலையிலிருந்து எனது வீட்டுக்குள்ளேயே அமர்ந்து தனியாகப் போராட்டம் செய்துவருகிறேன். எனது போராட்டத்துக்கு ஆதரவு அளித்து இப்பகுதி மக்களும் மற்றும் மற்ற போராட்டக்காரர்களும் வீட்டுக்கு வந்தனர். அனைவருமே எனது வீட்டுக்குள்ளேயே அமர்ந்துதான் அமைதியான முறையில் போராடி வந்தோம். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு இங்குவந்த காவலர்கள், 'ஓர் அரசுப் பணியாளராக இருந்தவர் நீங்கள். அரசுக்கு எதிராகப் போராட்டம் செய்வது நியாயமா? அதனால், உடனடியாகப் போராட்டத்தை  முடித்துக்கொள்ளுங்கள்' என்று என்னிடம் கூறினார்கள். அதற்கு நான், 'சாலையில் அமர்ந்து போராடவில்லை. எனது வீட்டில் அமர்ந்துதான் போராடுகிறேன். என்னால் போராட்டத்தை முடித்துக்கொள்ள முடியாது' என்று கூறினேன். அதற்குக் காவலர்கள், 'போராட்டம் செய்வதற்கு எங்களிடம் அனுமதி வாங்க வேண்டும். நீங்கள் அனுமதி வாங்காமல் போராட்டம் செய்வது சட்டப்படி குற்றம்' என்று எச்சரித்து வலுக்கட்டாயமாக அங்கிருந்த ஆதரவாளர்களை அப்புறப்படுத்தினர். அதோடு என்னையும் மிரட்டினார்கள். தகவல் அறிந்த தாசில்தாரும் சப் - கலெக்டரும் என்னுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்தனர். ஆனால் நான், 'எனது முடிவில் இருந்து பின்வாங்க மாட்டேன்' என்று அவர்களிடம் அழுத்தமாகக் கூறிவிட்டேன். நான் எனது வீட்டில் போராடுவேன். எனது வீட்டில் போராட யாரிடமும் அனுமதி வாங்கவேண்டிய அவசியமில்லை. நீட் தேர்வை, அரசு ரத்து செய்ய வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். அதுவரை நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிக்கொண்டே இருப்பேன்" என்றார் திடமாக.

போராட்டத்தினால்தான் புரட்சி வெடிக்கிறது. அந்தப் புரட்சியை வெடிக்கவிடாமல் செய்வதுதான் அரசின் சூழ்ச்சி. அதுதானே எங்கும் நடக்கிறது.


டிரெண்டிங் @ விகடன்