சவால் விட்ட அமைச்சர்; மல்லுக்கட்டும் தினகரன் ஆதரவாளர்கள்!

நெல்லை நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, இன்று மாலை மதுரை வந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார் டி.டி.வி.தினகரன். இந்த நிலையில் அவருக்குத் திருமங்கலம் நகரில் மிகப்பெரிய வரவேற்பை கொடுக்க மதுரை மாவட்டச் செயலாளர் மகேந்திரன், மேலூர் சாமி ஆகியோர் தலைமையில்  ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

'இந்த வரவேற்பை சாதாரணமானதாக நினைக்க கூடாது, அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் மானத்தை வாங்கும் நிகழ்ச்சி' என்று பரப்பி வருகிறார்கள் தினகரன் ஆதரவாளர்கள். சமீபத்தில் ஆர்.பி.உதயகுமார், ''தினகரனுக்குத் தைரியமிருந்தால் என்னுடைய திருமங்கலம் தொகுதிக்குள் வந்து பார்க்கட்டும், அவருக்கு நாங்கள் யாரென்று காட்டுவோம், இல்லையென்றால் அவர்கள் சொல்கிற இடத்துக்கு நாங்கள் வருகிறோம்'' என்று அறிக்கை விட்டிருந்தார்.

திருமங்கலம்

இது தினகரனுக்கும், அவர் ஆதரவாளர்களுக்கும் கடும் கோபத்தை உண்டு பண்ணியது. சமூக ஊடகங்களில் உதயகுமாரை கடுமையாக வறுத்தெடுத்தார்கள். இந்தக் கோபத்தின் வெளிப்பாடாக நேற்று மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் தினகரன் ஆதரவாளர்களுக்குமிடையே கடுமையான மோதல் நடந்தது.

இந்த நிலையில்தான ஆர்.பி.உதயகுமாரின் சவாலை சந்திக்கும் வகையில் அவர் தொகுதியான திருமங்கலத்தில் இன்று மாலை தினகரனுக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்கவுள்ளதாக ஆதரவாளர்கள் அறிவித்துள்ளனர். இதற்கு உதயகுமார் என்ன  செய்யப்போகிறார் என்று தெரியவில்லை. இதனால் மதுரையில் பரபரப்பு நிலவுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!