வெளியிடப்பட்ட நேரம்: 16:39 (08/09/2017)

கடைசி தொடர்பு:18:35 (08/09/2017)

'என் சுதந்திரத்தையெல்லாம் பறிகொடுத்துப் படித்தேன்' - 'நீட்'டால் மெடிக்கல் சீட்டை இழந்த மாணவர் ஆவேசம்

அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், தமிழகத்தில் நீட் தேர்வு தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் 22-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒருங்கிணைந்து சமூக நீதிக்கான மாணவர், இளைஞர் கூட்டமைப்பின் சார்பாக சேலம் அரசு கலைக் கல்லூரியிலிருந்து பழைய பேருந்து நிலையம் மத்திய தபால் தந்தி அலுவலகம் வரை பேரணி நடைபெற்றது. இதில் 2000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டார்கள்.

பேரணியின்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகக் கண்டன குரல்கள் எழுப்பிக்கொண்டுச் சென்றார்கள். பிரதமர் மோடியையும்  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சனம் செய்தனர். தமிழ்நாட்டுக்குள் நீட் தேர்வுக்குத் தடை விதிக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தி அறிவிப்போம் என்றும் கூறினர்.

இந்தப் பேரணியில் கலந்துகொண்ட தமிழரசன் என்ற மாணவன், ''என் அப்பா பேரு வேல்முருகன், அம்மா பேரு கோமதி, என் பேரு தமிழரசன், என் தங்கை இலக்கியா. நாங்கள் சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த திருமனூர் கிராமத்தில் குடியிருக்கிறோம். அப்பா சின்னதாக ஒரு மளிகைக் கடை வைத்திருக்காங்க. அம்மா அங்கன்வாடி ஊழியராக இருக்காங்க. நான் பத்தாம் வகுப்பு வரை வாழப்பாடி அருகில் உள்ள ராசி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படித்தேன். பத்தாம் வகுப்பில் 500-க்கு 496 மார்க் வாங்கினேன். அதனால் நாமக்கல் குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஃபிரீ சீட் கிடைத்தது. பன்னிரண்டாம் வகுப்பில் 1200-க்கு 1190 மார்க் எடுத்தேன். மருத்துவ கட் ஆஃப் மதிப்பெண் 200-க்கு 198.75 மார்க் இருக்கு.

நிச்சயம் டாக்டராகிவிடுவேன் என்ற மகிழ்ச்சியில் இருந்தேன். நீட் தேர்வு தமிழ்நாட்டுக்கு வராது என்று மத்திய, மாநில அரசு பிரதிநிதிகள் சொன்னதால் நீட் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்தேன். திடீரென நீட் தேர்வு அறிவித்து எழுதச் சொன்னதால் 720-க்கு 235 மார்க்தான் எடுக்க முடிந்தது. நீட் தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் எனக்கு மெடிக்கல் சீட் கிடைக்கவில்லை. நான் கிராமப்புற மாணவன். மருத்துவம் படிப்பது என்னுடைய சிறு வயது கனவு. அதற்காக என்னுடைய சுதந்திரத்தையெல்லாம் பறிகொடுத்துப் படித்தேன். அனைத்தும் வீணாகப் போய்விட்டது. தற்போது வேண்டா வெறுப்பாகத்தான் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருக்கிறேன். ஒவ்வொரு மணித்துளியும் உளவியல் ரீதியாக மனம் பேதலித்துக்கொண்டிருக்கிறது.

  

அனிதாவைப்போல நிறைய மதிப்பெண் பெற்று மருத்துவம் படிக்க முடியாமல் ஆயிரமாயிரம் மாணவ, மாணவிகள் தமிழ்நாட்டில் தத்தளித்துக்கொண்டிருக்கிறோம். இந்த நீட் என்பது மருத்துவத்துக்கானது என்றும், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது என்றும் நினைத்து விட வேண்டும். இனி படிப்படியாக அனைத்து படிப்புகளுக்கும் அமல்படுத்தி ஏழை, எளிய, கிராமப்புற ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட எனப் பெரும்பான்மையாக வாழக்கூடிய அனைத்து மக்களின்  கல்வி உரிமையைத் தடுக்கும் நோக்கத்தில்தான் இந்த நீட் முதலாவதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது" என்று ஆவேசப்பட்டார்.