வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (08/09/2017)

கடைசி தொடர்பு:17:08 (08/09/2017)

வறண்டு போன நிலத்தில் வந்திறங்கிய வெள்ளம்...! - அவிநாசியில் கொட்டித்தீர்த்த மழை

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளில் அதிக வறட்சி உள்ள பகுதியாக மாறியிருக்கிறது அவிநாசி வட்டாரம்.

விவசாயத்துக்குத் தண்ணீர் இல்லாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்ட நபர்களும், அதிர்ச்சி மரணம் அடைந்த விவசாயிகளின் எண்ணிக்கையும் இங்கு அதிகம். போதாக்குறைக்கு இப்பகுதி மக்களின் 60 ஆண்டுகால போராட்டமான அவிநாசி - அத்திக்கடவு திட்டமும் இன்றுவரை கானல் நீராகவே இருப்பதால் நாள்தோறும் பெரும் துயரத்தைச் சந்தித்து வருகிறார்கள் அவிநாசி மக்கள்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாகவே கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நொய்யலாற்றில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் நேற்றைய தினம் அவிநாசி வட்டாரத்தில் பெய்த பலத்த மழை, நொய்யலில் கிளை நதியாக இருந்து, பல ஆண்டுகளாக வற்றிப்போய் கிடந்த நல்லாறுக்குத் தற்போது தண்ணீரைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

அவிநாசியில் நேற்று மாலை பெய்ய தொடங்கிய கனமழை நள்ளிரவு வரை தொடர்ந்து அடித்து நொறுக்கியதால் நல்லாறு உட்பட அவிநாசியைச் சுற்றியுள்ள பல்வேறு ஓடைகளும், குட்டைகளும் மழைநீரால் நிரம்பிப்போயின. இத்தனை ஆண்டுகளில் இல்லாத வகையில் அவிநாசி லிங்கேஸ்வரர் திருக்கோயிலின் தாமரைக்குளம், படித்துறைகள்கூட காண முடியாத அளவுக்கு மழை வெள்ளத்தால் நிரம்பி காட்சியளிக்கிறது.

 

நல்லாற்றின் கரையோரங்களில் குடியிருந்த மக்களுக்கு நேற்று நள்ளிரவு முதற்கொண்டே வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம், அப்பகுதி மக்களை அருகில் உள்ள பள்ளிக்கூடங்களிலும், தனியார் மண்டபங்களிலும் தங்க வைத்தது. தொடர்ந்து மழை பெய்யும் வாய்ப்பு அதிகளவு இருப்பதால் அதிகப்படியான சேதங்களைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

வறண்டுபோன நிலத்தில் பெய்த கன மழையைக் கண்டு, அவிநாசி மக்கள் ஆர்ப்பரித்திருக்கிறார்கள். குளமும், குட்டைகளும் இருந்த இடமே தெரியாதவாறு முட்புதர்களால் மண்டிக் கிடந்த நீர்நிலைகளைத் தேடி, மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவந்து தன் இருப்பைக் காட்டியிருக்கிறது.

இயற்கை கொடுத்த இந்நிவாரணத்தை இப்போதும் நாம் பாதுகாக்கவில்லை என்றால் வறட்சி மட்டுமே நம் நிலையான ஆதாரமாகிப்போகும்.