ஜக்கையன் திடீர் மனமாற்றம் ஏன்? தினகரன் அதிர்ச்சி பதில்

அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது பற்றி எம்.எல்.ஏ-க்களுடன் கலந்து பேசி முடிவெடுப்போம் என்று கூறிய டி.டி.வி.தினகரன், ஜக்கையன் திடீர் மனமாற்றத்துக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என்றார்.

நெல்லையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பெரும்பான்மையில்லாத முதல்வரை நீக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது பற்றி எம்.எல்.ஏ-க்களுடன் கலந்து பேசி முடிவெடுப்போம். கட்சியைவிட்டே நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தைத் துணை முதல்வராக்கியுள்ளனர். பதவியில் இருந்தால்போதும் என்ற சுயநலத்தாேடு அமைச்சர்கள் செயல்படுகிறார்கள். முதல்வர் பழனிசாமி தலைமையிலான அணி போலி பொதுக்குழுவைக் கூட்ட இருக்கிறது.

ஜனநாயகத்தில் எதையும் பொறுத்திருந்துதான் சாதிக்க முடியும். அனிதாவுக்கு அஞ்சலி செலுத்த அமைச்சர்கள் யாரும் செல்ல முடியவில்லை. ஜக்கையன் திடீர் மனமாற்றத்துக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. மனமாற்றம் ஏற்பட்டது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். பணம் பாதாளம் வரை பாயும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஜக்கையன் விவகாரத்தில் அது நடந்திருக்கலாம். ஜக்கையன் எனது நல்ல நண்பர் என்பதால் தவறான கருத்து எதுவும் கூற விரும்பவில்லை.

நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீட் தேர்வு தொடர்பாக நாளை ஆர்ப்பாட்டம் குறித்து சட்டவல்லுநர்களுடன் ஆலோசித்து பின்னர் முடிவு செய்யப்படும்" என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!