Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’’தொழில்முனைவோர், போட்டி மனப்பான்மையுடன் முன்னேற வேண்டும்!'' - கவின்கேர் ரங்கநாதன்

`பணக்காரர்கள் வாங்கி அனுபவித்து மகிழும் பொருள்கள், ஏழை மனிதனும் வாங்கிப் பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும்' என விரும்பினார் சின்னிகிருஷ்ணன். இவர்தான் இந்தியாவிலேயே முதன்முதலில் சாஷே சாம்பு உருவாகக் காரணமானவர். 

கவின்கேர்

சின்னிகிருஷ்ணன், ஒரு கணித ஆசிரியர். ஒருகட்டத்தில் தனது ஆசிரியர் வேலையை விட்டுவிட்டார். இவருக்கு இரண்டு மகள்கள், நான்கு மகன்கள். எல்லாரையும் ஒருநாள் அழைத்து, `நாம் சுயதொழிலில் இறங்க வேண்டும்' என்றார். அப்படிச் சொன்னதோடு நின்றுவிடாமல், மருந்துகளை ரீபேக் செய்யும் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். ஷாம்பூ பாட்டில்கள் இந்தியாவில் அறிமுகமாகியிருந்த காலம் அது. ஆனால், எல்லா ஷாம்பூகளுமே பெரிய பெரிய பாட்டில்களில் வந்துகொண்டிருந்தன. இதைப் பார்த்த சின்னிகிருஷ்ணன், `ஷாம்பூவை, பணக்காரர்கள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டுமா... ஏழைகள் பயன்படுத்தக் கூடாதா?' என்ற கேள்வியை எழுப்பினார். அத்துடன் நில்லாமல் வெல்வெட் ஷாம்பூவைத் தயாரித்து சந்தைப்படுத்தத் தொடங்கினார். `ஷாம்பூவை சிறிய சாஷேக்களாக அடைத்து விற்றால் என்ன?’ என்ற யோசனை தோன்றவே, சிறிய சாஷேக்களில் அடைத்து அறிமுகப்படுத்தினார். இது, அந்தக் காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்றைக்கு அவரது புதுமையான செயல்பாடுகளை சாஷேக்கள் வடிவத்தில் ஒவ்வொரு கடையிலும் நாம் பார்த்துவருகிறோம். 

இந்த நிலையில் சிறிய மற்றும் குறு அளவிலான தொழில் நிறுவனங்களை நடத்தும் ஆண் மற்றும் பெண் தொழில்முனைவோர்களை ஊக்குவிப்பதற்காக மறைந்த சின்னிகிருஷ்ணனின் பெயரில் அவருடைய மகனும் கவின்கேர் நிறுவனத்தின் நிறுவனரான  சி.கே.ரங்கநாதன் `சின்னிகிருஷ்ணன் இன்னோவேஷன் விருதை' ஒவ்வோர் ஆண்டும் வழங்கிவருகிறார். இந்த ஆண்டுக்கான கவின்கேர் - எம்.எம்.ஏ.சின்னிகிருஷ்ணன் இன்னோவேஷன் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. தனித்துவப் பண்பு, தரம் உயர்த்தும் திறன் மற்றும் மக்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கக்கூடிய ஆதாயங்கள் போன்ற முக்கிய அம்சங்களின் அடிப்படையில், டாக்டர் எஸ்.கவிதா, ஜி.வெங்கடசுப்ரமணியன், பி.பொன்ராம் ஆகிய தொழில்முனைவோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

டாக்டர். எஸ்.கவிதா, தலைமைச் செயல் அதிகாரி மற்றும் இயக்குநர், FIB-SOL லைஃப் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் 

கவின்கேர்

`ஒரு ஏக்கர் நிலத்தை உரமூட்டுவதற்கு 25 கிலோகிராம் உரம் பயன்படுத்தப்பட்ட நிலையில், அதே பரப்பளவு நிலத்தை இப்போது 25 கிராம் கொண்டு உரமூட்ட முடியும். டாக்டர் ஆனந்த் அவர்களுடன் கூட்டு சேர்ந்து `N-FIB 20' என்ற குறைந்த எடையுடன் மக்கக்கூடிய பாதுகாப்பான மற்றும் நிலையான உயிரி உரத்தைக்கொண்டிருக்கும் சவ்வை, கவிதா உருவாக்கியுள்ளார். இது பழுப்பு நிலக்கரி, கரி போன்ற மரபு சார்ந்தவற்றுக்குப் பதிலாக உயிரி உரங்கள் போன்ற வேளாண் முக்கியத்துவம் வாய்ந்த நுண்ணுயிரிகளை இந்தச் சவ்வு கொண்டிருக்கிறது. இந்த நானோ இழை சவ்வுகள், 25 கிராம் திசு தாளில் மண்ணுக்கு ஊட்டச்சத்து கொடுக்கக்கூடிய நுண்ணுயிரிகள் ஏற்றப்பட்டவை. இந்தத் திசு தாள், நீரில் எளிதாகக் கரையக்கூடியது. பிறகு, இதை ஒரு ஏக்கர் நிலத்தை உரமூட்டுவதற்குப் பயன்படுத்தலாம். பாரம்பர்யப் பொருள்களைவிட அளவில் இந்த இழை சவ்வு குறைவானது. அத்துடன், மக்கக்கூடிய இந்த இழை சவ்வு சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பானது'  என்பதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

ஜி.வெங்கடசுப்ரமணியன், கண்டுபிடிப்பாளர் மற்றும் பங்குதாரர், CMR பிட்பிளாஸ்ட் 

கவின்கேர்

`பிளாஸ்டிக் கழிவுகளைக்கொண்டு சிறந்த சாலைகளை அமைப்பது. சாலைகளை அமைப்பதற்கு பிளாஸ்டிக் கழிவைப் பயன்படுத்துவது என்பது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. ஆனால், தற்போது பயன்படுத்தப்படும் `உலர் செய்முறை' தொழில்நுட்பம், விலை உயர்ந்தது; சிரமமானது.  இது, சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர்களிடையே வரவேற்பு பெறாதது; அரசுக்கு, செயல்படுத்த சாத்தியமற்றதாகவே இருந்துவருகிறது. அதே சமயம் வெங்கடசுப்ரமணியன் அறிமுகப்படுத்தியுள்ள காப்புரிமை பெற்ற `ஈரச் செய்முறை', சாலை அமைப்பதில் சிக்கனச் செலவுகொண்டது. ஆரோக்கியமான சுற்றுச்சூழலைப் பராமரிப்பதில் உதவுகிறது' என்பதால் அவருக்கு விருது வழங்கி அவரை கெளரவிக்கப்பட்டது.

பி.பொன்ராம், இயக்குநர், தேஜாஸ் டிரான்ஸ்லேஷனல் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடேட்

கவின்கேர்

`இந்தியாவில் உடல் நலப் பராமரிப்புத் தொழில் துறையானது, அதிவேகமாக வளர்ந்துவருகிறது. வளர்ச்சிக்கு மேலும் வளர்ச்சி சேர்க்கும் வகையில் பொன்ராம் `வெயின் புரோப் வெயின் ஃபைண்டர்' என்ற நரம்பைக் கண்டறியும் புதுமையான மருத்துவச் சாதனத்தை உருவாக்கியுள்ளார். சில நொடிகளுக்குள் நரம்பைக் கண்டறிந்து ரத்த மாதிரி சேகரிப்பதற்கும், மருந்தை உட்செலுத்துவதற்கும் குறைந்த செலவில் இந்தச் சாதனம் உதவுகிறது. உடல் பருமன்கொண்ட, நீரிழப்பு ஏற்பட்டுள்ள அல்லது கறுப்பு நிறமுடைய நபர்களிடம் நரம்பைக் கண்டறிவது என்பது அனுபவமுள்ள தொழில்நுட்ப உதவியாளர்களுக்கும் சிக்கலானதாகவே இருக்கும். இந்த நிலையில், மிகவும் எளிதாக அதுவும் சில நொடிகளில் நரம்பைக் கண்டறிவதற்கு இந்த `ஒளி இயல்புடைய சாதனம்' உதவுவதற்காக இவருக்கு விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கவின்கேர் நிறுவனத்தின் தலைவர் சி.கே.ரங்கநாதன் பேசுகையில்,``இன்றைய சூழ்நிலையில் எந்த ஒரு தொழிலையும் எளிதாக நடத்திட முடியாது. புதிதாக 100 தொழில்முனைவோர்கள் உருவாகிறார்கள் என்றால், அதில் 3 அல்லது 4 தொழில்முனைவோர்கள் மட்டுமே பெரிய அளவில் வெற்றியடைகிறார்கள். தொழில்முனைவில் IQ (Intelliegence Quotient)-வைவிட, EQ (Emotional Quotient)தான் மிக முக்கியம். IQ அடிப்படையில் அவசியமான ஒன்றுதான். ஆனால், அதைவிட மிக முக்கியம் EQ. உங்களுடைய உணர்வுகளைச் சரியான முறையில் பயன்படுத்தினால், வாழ்க்கையில் மட்டுமல்ல எந்த ஒரு தொழிலிலும் வெற்றியடையலாம்.

தொழில்முனைவோராக விரும்பும் நபர்களுக்கு, தங்களுடைய தொழிலில் இந்த உத்தி பொருந்துமா பொருந்தாதா என்பதை அலசி ஆராய்ந்து முடிவெடுக்கும் திறன் தேவை. முக்கியமாக, போட்டியிடும் மனப்பான்மை அவசியம் இருக்க வேண்டும். ஏனெனில், தொழில்முனைவைப் பொறுத்தவரை ஆரம்பத்திலிருந்தே ஏராளமான பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடலாம். உங்கள் வீட்டார்கூட, `நல்ல வேலையை விட்டுவிட்டு, ஏன் சுயதொழில் தொடங்க நினைக்கிறாய்?' என்ற கேள்வியை முன்வைக்கலாம். இதுபோல் எந்த ஒரு சூழ்நிலை ஏற்பட்டாலும், மனம் தளராமல் போட்டி மனப்பான்மையுடன் முன்னேற முயற்சி செய்ய வேண்டும்.

சுயதொழிலில் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப வளைந்துகொடுக்கும் தன்மை மற்றும் கற்றல் போன்றவற்றை  தொழில்முனைவோருக்கு அவசியம் தேவை. உங்களுடைய தொழில்குறித்து எவ்வளவுக்கு எவ்வளவு ஆர்வமாக நீங்கள் கற்றுக்கொள்கிறோர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு உங்களுடைய தொழிலில் வெற்றியடையலாம். ஒரு தொழிலை அர்ப்பணிப்புடன் செய்வதோடு மட்டுமல்லாமல், தொழிலில் வெற்றிகரமாக நிலைத்திட தொடர்ச்சியாகக் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்" என்றார் அவர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close