வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (08/09/2017)

கடைசி தொடர்பு:22:20 (08/09/2017)

தடையை மீறி நீட் தேர்வுக்கு எதிரான பொதுக்கூட்டம் நடக்குமா? திருச்சியில் பரபரப்பு

நீட் தேர்வுக்கு எதிராகச் சட்டப் போராட்டம் நடத்திய மாணவி அனிதா மரணத்தை அடுத்து, அனைத்துக் கட்சிகள் சார்பில் அனிதா உயிரிழப்புக்குக் காரணமான மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வலியுறுத்தியும் இன்று கண்டன பொதுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது. குறிப்பாக மாலை 5 மணியில் இருந்து கூட்டம் நடத்த அனுமதி வாங்கப்பட்டது. திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற இருந்த கூட்டத்தில், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்கள்.

இந்தக் கூட்டத்துக்காக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு, முன்னேற்பாடுகளை மிகப் பிரமாண்டமாகச் செய்து வந்தார். இந்த நிகழ்ச்சிக்காக திருச்சி முழுவதும் தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் கொடிகள், மாணவி அனிதா உருவ பொம்மை பொறித்த பதாகைகள் என மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து நேற்று தஞ்சாவூர் சென்ற மு.க.ஸ்டாலின், இன்று காலை மருத்துவர் அஞ்சுகம்- பூபதி திருமணத்தை நடத்தி வைத்தார். அங்கிருந்து புறப்பட்டு இன்னும் சற்று நேரத்தில் திருச்சி வர உள்ளார். இதேபோல் முத்தரசன், திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் திருச்சியில் தங்கி உள்ளனர். இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அனைத்துக்கட்சித் தொண்டர்கள், பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தை நோக்கி வந்துகொண்டே உள்ளனர்.

இந்நிலையில் சற்றுமுன் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் எனக்கூறி உச்ச நீதிமன்றத்தில் ஜி.எஸ்.மணி என்பவர் தொடர்ந்த பொது நல வழக்கின் மீது, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ‛நீட்' தேர்வுக்கு எதிராகத் தமிழகத்தில் அரசியல் கட்சிகள், தனிநபர்கள் போராடக் கூடாது என்றும், பொதுமக்களுக்கு இடையூறு செய்யாமல், சாலை மறியல், கடையடைப்பு போராட்டம் நடத்தக் கூடாது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை அரசு பாதுகாக்க வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் கொண்டுவரப்பட்ட ‛நீட்' சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். பொது மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் பிரச்னைகளை கையாள வேண்டும். தமிழகத்தில் ‛நீட்' தேர்வுக்கு எதிரான எந்தவொரு போராட்டத்தையும் அனுமதிக்க முடியாது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது,

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அடுத்து, திருச்சியின் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்படுவதாக திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். இதனால் திருச்சியில் பொதுக்கூட்டம் நடக்கும் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க