வெளியிடப்பட்ட நேரம்: 15:58 (09/09/2017)

கடைசி தொடர்பு:15:58 (09/09/2017)

தண்ணீரின்றி தவிக்கும் ஏரிகள்... மழையின்மை மட்டும்தான் காரணமா?

காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கக்கூடியவை ஏரிகள். பொதுப்பணித்துறையின் கீழ் 912 ஏரிகளும்,  ஊரகவளர்ச்சித்துறையின் கீழ் 1083 ஏரிகளும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளன. இவையாவும் பலநூறு ஆண்டுகளுக்கு முன் ஆட்சிசெய்த மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டவை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாற்றை ஒட்டியப் பகுதிகளைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் ஏரிகளாலேயே பாசனம் பெறுகின்றன. இதனாலேயே, காஞ்சிபுரம் மாவட்டத்தை ’ஏரிகள் மாவட்டம்’ எனப் பெருமையோடு அழைப்பார்கள்.

மதுராந்தகம் ஏரி ஏரிகள்

காஞ்சிபுரம் மாவட்டம் சென்னையை ஒட்டியுள்ளதால் இப்பகுதிகளில் தொழிற்சாலைகள் பெருகிவிட்டன. தொழிற்சாலைகள் ராட்சதகுழாய்கள் மூலம் நீரை உறிஞ்சுவதால், நிலத்தடி நீர் அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டது. இதனால், ஏரிகள் சீக்கிரமே வற்றிவிடுகின்றன. 

தென்மேற்கு பருவமழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வறண்டு கிடந்த ஏரிகளுக்கு ஓரளவு தண்ணீர் வர ஆரம்பித்துள்ளது. ஆனால், ஏரிகள் சரியாகப் பராமரிக்கப்படாத காரணத்தால், மழைநீர் வீணாகும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகிறார்கள். ஒவ்வோர் ஏரியும் நீர்வரத்து கால்வாய்களால் சங்கிலித்தொடர் போல இணைக்கப்பட்டுள்ளது. ஓர் ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர் மற்றொரு ஏரிக்குச் செல்லும். நகரமயமாதலின் விளைவாக ஏரிகளின் கீழ் உருவாகும் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் அனைத்தும் ஏரிக்கால்வாய்களில்தான் விடப்படுகின்றன. ஏரிகளைத் தூர்வார வேண்டும், கரைகளைப் பலப்படுத்த வேண்டும், மதகுகளைச் சீரமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. 

கீழ்மருவத்தூர் ஏரி

மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்று மதுராந்தகம் ஏரி. இந்த ஏரியின் மூலமாக 2853 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. பத்து அடிக்கு மேல் தூர்ந்துவிட்ட இந்த ஏரியை தூர்வார வேண்டும் என 30 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கின்றனர். ஆனால், இதுவரை எந்த அரசும் விவசாயிகளின் கோரிக்கைக்குச் செவிசாய்க்கவில்லை. இதேபோல பல ஏரிகளின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. செங்கல்பட்டு கொளவாய் ஏரியின் பரப்பளவும் கம்பெனிகளின் ஆக்கிரமிப்பால் படிப்படியாக குறைந்துவிட்டது. பேருந்து நிறுத்தமாக மாறிவிட்டது கீழ்மருவத்தூர் ஏரி. எஞ்சியிருக்கும் பல ஏரிகளில் ரசாயனக்கழிவும், சாக்கடைகளும் தேங்கும் இடமாகவே மாறிவிட்டன.  பல ஏரிகள் இருந்த தடமே தெரியாதவாறு அழிக்கப்பட்டுவிட்டன. 

செல்வம்திருப்போரூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி செல்வம், “திருப்போரூர் பகுதியில் உள்ள பஞ்சந்திருத்தி ஏரி 2015ம் ஆண்டு மழையில் உடைந்தது. இதை சீரமைப்பதாக காரணம்காட்டி ஏரியில் தற்போது மண் எடுத்து வருகிறார்கள். ஏரிகளில் 3 அடி மண் எடுப்பதற்கு மட்டுமே அனுமதி உண்டு. ஆனால் இவர்கள் 10 அடிக்கு மேல் மண் எடுக்கிறார்கள். ஆலத்தூர், இள்ளளூர், தண்டலம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகளிலும் இப்படித்தான் மண் எடுத்தார்கள். ஆழமாக ஏரியை தூர்வாருவதால் தண்ணீர் நீண்ட நாள்களுக்குத் தேங்காது. வேகமாக பூமிக்குள் சென்றுவிடும். வண்டல் படிமம் இருந்தால்தான் தண்ணீர் நீண்ட நாள்களுக்குத் தேங்கும். தூர் வாரப்பட்ட ஏரிகளில் மீண்டும் வண்டல் படிவதற்கு 10லிருந்து 15 ஆண்டுகள் வரை பிடிக்கும். விவசாய நிலப்பரப்பை விட ஏரி சற்று உயரமான இடத்தில் இருக்கும். அப்போதுதான் ஏரிநீர் மூலம் பாசனம் கிடைக்கும். அதிக அளவு மண் எடுப்பதால் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியைவிட, விவசாய நிலம் உயரமான இடத்தில் இருக்கிறது. இதனால் மதகுகள் வழியாகப் பாசனம் பெற முடிவதில்லை. கிணறுகளின் நீர்மட்டமும் குறைந்துவிடும். விவசாயமும் கடுமையாகப் பாதிக்கும்” என்கிறார்.

மாசிலாமணிஉத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி மாசிலாமணி, “உத்திரமேரூர் பகுதியில் வாடாபூர், திருப்புலிவனம், நெல்வாய், எடையாம்புதூர், சாலவாக்கம் போன்ற கிராமங்களில் பெரிய ஏரிகள் இருக்கின்றன. இந்த ஏரிகள் நிறைந்தால் முப்போகத்திற்கு பாசனம் நடைபெறும். ஆனால் பெரும்பாலான ஏரிகள் போதிய பராமரிப்பின்றி கிடக்கின்றன. ஏரிகளின் கரையை உயர்த்துவதால் மட்டுமே ஏரி நிரம்பாது. வருவாய் கால்வாய்களையும் தூர் வாரவேண்டும். நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் ஏரி வரத்துக் கால்வாய்களைத் தூர் வாருகிறார்கள். ஆனால், அவர்கள் அந்தப்பணியைச் சரியாக செய்வதில்லை. இதனால் மழைபெய்தாலும் ஏரிகள் நிரம்புமா என்ற சந்தேகம் விவசாயிகளுக்கு உள்ளது” என்கிறார்.

காஞ்சி அமுதன்காஞ்சிபுரம் பாலாறு படுகை விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் காஞ்சி அமுதன், “காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகள் நகர்ப்புறம் சார்ந்த பகுதிகளாக மாறிவருகின்றன. இதனால் ஏரிகள் தங்களது பாசனப் பரப்பை இழந்து வருகின்றன. இதனால் அப்பகுதியில் உள்ள ஏரிகளைப் பாராமரிக்கும் பணியைப் பொதுப்பணித்துறை செய்வதில்லை. ஏரிநிலங்கள் அரசு அலுவலகங்களாகவும், சாலைகளாகவும் மாற்றப்பட்டுவருகின்றன. உதாரணமாக காஞ்சிபுரத்தில் உள்ள பொன்னேரியில் உள்ள ஏரியில் உள்பகுதியில் சாலைகளைப் போட பொதுப்பணித்துறை அனுமதி வழங்கி இருக்கிறது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹுண்டாய் கம்பெனியின் கழிவுகள் அனைத்தும் செம்பரம்பாக்கம் ஏரியில் கலக்கின்றன. அதுபோல் காஞ்சிபுரத்தில் உள்ள சாக்கடை முழுவதும் நத்தப்பேட்டை ஏரியில்தான் தேங்குகின்றன. இதனால் ஏரிநீர் அனைத்தும் சாக்கடையாக வருகிறது.” என்கிறார் வேதனையாக.

பெருமாள்மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் “ காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம், செய்யூர் போன்ற பகுதிகளில் மழை மிகவும் குறைவாக இருக்கின்றது. இதனால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. எங்கள் பகுதியில் உள்ள மலை அடிவாரத்தில் இரண்டு நீர்தேக்கங்களை உருவாக்கினோம். இதனால் தண்ணீர் வேகமாக வெளியேறுவது தடுத்து நிறுத்தப்படுகிறது. தற்போது நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து எங்களுடைய நிலத்திற்கு தேவையான அளவு தண்ணீர் கிடைக்கிறது. எல்லா விவசாயிகளாலும் இதேபோல் நீர்த்தேக்கங்களை உருவாக்கும் அளவிற்கு பொருளாதாரம் இல்லை. அதனால் அரசாங்கம் புதிய நீர்நிலைகளை உருவாக்கி, பாதுகாக்க வேண்டும்.” என்கிறார்.

“நீரின்றி அமையாது உலகு“ என்னும் வள்ளுவன் கூற்றை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்