வெளியிடப்பட்ட நேரம்: 19:55 (08/09/2017)

கடைசி தொடர்பு:19:55 (08/09/2017)

மாணவன் மர்மச் சாவு: பண்ருட்டியில் பள்ளி முற்றுகை, சாலை மறியல்!

கடலூர் மாவட்டத்தில், மாணவர் ஒருவர் மர்மமாக இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


    

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள சூரக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த திருமால் மகன் மதிபாண்டியன். இவர் பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம் போல் இன்று பள்ளிக்குச் சென்ற மாணவன் மதிபாண்டியன், திடீரென்று வகுப்பறையில் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். இதைக்கண்ட ஆசிரியர்கள் மாணவன் மதிபாண்டியனை சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அப்போது, மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து, மாணவனின் சாவில் சந்தேகமிருப்பதாகக் கூறி, சக மாணவர்கள் மற்றும் மாணவனின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாணவனின் உடல் முண்டியம்பாக்கம் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாணவனின் உறவினர்கள், " அவனுக்கு உடலில் இதுவரை எந்தக் குறைபாடுகளும் இல்லை. காலையில் வீட்டிலிருந்து நல்ல முறையில்தான் பள்ளிக்குச் சென்றான். திடீர்னு, உங்க பையனுக்கு உடம்பு சரியில்லை மருத்துவமனைக்குக் கூட்டிகிட்டு போகும்போது இறந்துட்டான்னு சொல்றாங்க. இதை எப்படி ஏத்துக்க முடியும். சரியாக டெஸ்ட் எழுதலைனு ஆசிரியர்கள் அவனை அடிச்சுருக்காங்க அதனாலதான் மயக்கம்போட்டு கீழே விழுந்துருக்கான். எங்க பையனைக் கொன்ற ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கணும்" என்கிறார்கள்.