தடையை மீறி திருச்சியில் தொடங்கியது எதிர்க்கட்சிகளின் கண்டனப் பொதுக்கூட்டம்! | Opposition parites meeting starts in Tirchy

வெளியிடப்பட்ட நேரம்: 18:34 (08/09/2017)

கடைசி தொடர்பு:22:22 (08/09/2017)

தடையை மீறி திருச்சியில் தொடங்கியது எதிர்க்கட்சிகளின் கண்டனப் பொதுக்கூட்டம்!

நீட் தேர்வுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்திய மாணவி அனிதா மரணத்தை அடுத்து, அனைத்துக் கட்சிகள் சார்பில் அனிதா உயிரிழப்புக்குக் காரணமான மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வலியுறுத்தியும் இன்று கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

நீட் கண்டனப் பொதுக்கூட்டம்


இதனிடையே திருச்சி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்படுவதாக, திருச்சி மாநகரக் காவல் ஆணையர் அருண் அரசியல் தலைவர்கள் தங்கியிருந்த சங்கம் ஹோட்டலுக்கே சென்று கூறினார். இதனால், பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தில் தொண்டர்கள் குவிய ஆரம்பித்தனர். இதையடுத்து, மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், தொல்.திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் சங்கம் ஹோட்டலில் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், "பொதுக் கூட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதிக்கவில்லை. எனவே, பொதுக்கூட்டம் நடைபெறும்" என்று கூறினார்.

இதையடுத்து, ஸ்டாலின், திருநாவுக்கரசர், தொல்.திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன், ஜவாஹிருல்லா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பொதுக்கூட்டம் நடைபெறும் மேடைக்குச் சென்றனர். அனிதாவின் படத்துக்கு மலர்தூவி அனைத்துக் கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

நீட் கண்டன பொதுக்கூட்டம்

முன்னதாக, எதிர்க்கட்சிகள் நடத்தும் பொதுக் கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி புதிய தமிழகம் கட்சி சார்பில் திருச்சி காவல்துறை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. 

கூட்டத்தில் பேசிய திருமாவளவன், "கடைசி நேரத்தில் பொதுக்கூட்டத்துக்கு அரசு தடைபோட்டது. தடையை கண்டு தமிழர்கள் அஞ்சமாட்டோம். அனிதா மரணத்திற்கு காரணமானவர்களை கண்டிக்கிறோம். பா.ஜ.க-வினர் புகார் அளித்ததால்தான் திருச்சி பொதுக்கூட்டத்திற்கு போலீஸ் தடை விதித்துள்ளது.

திருமாவளவன்


நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்காததற்கு மத்திய அரசே காரணம். கல்வி உரிமை மாநில அரசுக்குத்தான் உள்ளது. இந்தியா முழுவதும் ஒரே தேர்வை நடத்த ஏன் முடிவு செய்தனர். மோடி அரசு மறைமுகமாக மனு தர்மத்தை நிலைநாட்டப் பார்க்கிறது. மனு தர்மத்தை எதிர்த்த பாரம்பரியம் தி.மு.க-வுக்கு உள்ளது. அதை களத்தில் சந்திப்போம்

மருத்துவராகவில்லை என்று மட்டும் அனிதா தற்கொலை செய்யவில்லை. கிராமப்புறத்தில் படித்தவர்.வழிகாட்ட ஆள் இல்லாத குடும்பத்தில் 1176 மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வில் மதிப்பெண் எடுக்க முடியவில்லை என்கிற மன அழுத்தம்தான் அவரின் தற்கொலைக்கான காரணம். நீதி கேட்டு அனிதா  உச்ச நீதிமன்றம் பயணித்தார். அது ஏழை எளிய மக்களுக்கு நீதி சொல்லாது என்பது அனிதாவுக்கு தெரியாது.


மத்திய அரசு வழக்கறிஞர் அவசரச் சட்டத்தை பரிசீலிக்கிறோம் என மோடி அரசின் தரப பில் தமிழக அரசு கொண்டு வந்த அவசரச் சட்ட விவகாரத்தில் சொன்னார். மத்திய அமைச்சர்  நிர்மலா சீதாராமனும் உறுதி அளித்தார். குடியரசுத் தலைவரும் அவசரச் சட்டத்தை கண்டுகொள்ளவில்லை என்கிற வேதனை அனிதாவுக்கு எழுந்தது. இவை எல்லாம் அவரின் தற்கொலைக்கன காரணிகள். இந்த நீட் தேர்வால் அகில இந்திய அளவில் மாணவர்கள் பாதிப்படைந்துள்ளார்கள்.

நீட் எப்போதும் தரமான கல்வியை தரமுடியாது. தமிழ்நாட்டின் கல்விக்கூடம் நிலை சரியாக இல்லை. கட்டமைப்பு வசதிகளும் இல்லை. கல்வியில் ஏழை முன்னேறுவதை தங்களை தடுக்க வேண்டும் என்கிற உள்நோக்கத்துடன் மத்திய அரசு கூறுகிறது" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க