கிருஷ்ணப்ரியா... சசிகலா குடும்பத்திலிருந்து அடுத்த என்ட்ரி...!?

நீட் போராட்டம் கிருஷ்ணப்ரியா

நீட் தேர்வுக்காகப் பல இடங்களிலும் பலதரப்பிலும் போராட்டங்கள் நடைபெற்றுவரும் வேளையில், சசிகலா குடும்பத்திலிருந்து டி.டிவி.தினகரனுக்கு அடுத்து இளவரசி மகள் கிருஷ்ணப்ரியா, வரும் 10-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்துக்கு அருகில் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட அழைப்புவிடுத்துள்ளார். இதில் பலதரப்பட்டவர்களும் கலந்துகொண்டு ஆதரவு தர வேண்டுமென்று தன்னுடைய முகநூலில் குறிப்பிட்டுள்ளார். இதில், ''நீட் தேர்வு எதிர்ப்பைப் பதிவு செய்வது மட்டுமே. நீதிமன்றத்தையோ, அரசாங்கங்களையோ, தனி நபர்களையோ அவமதிப்பதற்கு அல்ல'' என்று மேலும் குறிப்பிட்டுள்ளார். 

நீட் தேர்வுக்காகப் போராடிய அரியலூர் மாணவி அனிதா மரணம் தமிழகத்தையே நிலைகுலைய வைத்துள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர், அரசியல் கட்சியினர் என்று பலதரப்புகளில் இருந்தும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பரப்புரைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அனிதாவுக்காக ஓர் இரங்கல் அறிக்கையை மட்டும் வெளியிட்டுவிட்டு மெளனமாகிவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவர் அறிவித்த ஏழு லட்ச ரூபாய் நிவாரணத்தையும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பையும் அனிதா குடும்பம் நிராகரித்துவிட்டது. இந்த எதிர்ப்புகளால் ஆளும்கட்சித் தரப்பில் அனிதா வீட்டுக்கு ஆறுதல் சொல்லக்கூட யாரும் செல்லவில்லை. ஆனால், அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், அரியலூர் சென்று இறுதியஞ்சலி செலுத்தினார். ''தமிழக அரசுதான் அனிதா மரணத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும்'' என்று அப்போது பேட்டியளித்தார்.

நீட் போராட்டம் தினகரன்

மேலும், 9-ம் தேதி சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தப் போராட்டத்தில் டி.டி.வி.தினகரன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகச் சென்னை முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இவர்களோடு சேர்த்து, சசிகலாவின் குடும்பத்தில் இருந்து இன்னொருவரும் நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவர், சசிகலாவின் அண்ணன் ஜெயராமன் - இளவரசி மகள் கிருஷ்ணப்ரியா. அந்த கிருஷ்ணப்ரியா, தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அதாவது, கிருஷ்ணப்ரியா ஃபவுண்டேஷனின் நிர்வாக அறங்காவலராக இருக்கும் அவர், தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளதாவது, ''அனிதா... இப்பெயரை உச்சரித்ததுமே சட்டென்று நமக்குள் ஒரு வெற்றிடம்... அனிதாவின் மரணம், தமிழக மக்களாகிய நம் அனைவரையும் ஆழமான துயரில் ஆழ்த்தியிருக்கிறது என்பது எவராலும் மறுக்கமுடியாத உண்மை. எதிர்காலத்தில் இம்மாதிரி துயரச் சம்பவங்கள் தொடராது தடுக்கும் கடமையும், கண்ணுக்குத் தெரியாத லட்சோபலட்சம் அனிதாக்களைக் காப்பாற்றும் கடமையும் பொறுப்பும் சாமான்ய மக்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.

 நீட் போராட்ட அழைப்பு

பள்ளிக்கூடங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளிடையே வேறுபாடு, பாடத்திட்டத்தில் வேறுபாடு, கல்வித்தரத்தில் வேறுபாடு, வசதி படைத்திட்டோருக்கு ஒரு கல்வி முறை, ஏழை, எளிய மக்களுக்கு மற்றொரு கல்வி முறை எனக் கல்வியில் எத்தனையோ வேறுபாடுகள் தமிழகத்தில் நிலவும்போது இந்தியா முழுக்க ஒரே தேர்வு என்பது ஏழை, எளிய மக்களுக்கு, குறிப்பாக மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியில்லையா? இந்த அநீதியை எதிர்த்து, கிருஷ்ணப்ரியா ஃபவுண்டேஷன் சாமான்ய மக்களுடன் இணைந்து காவல் துறை அனுமதியோடு நடத்தும் 'நீட் எதிர்ப்பு அறவழி போராட்டத்தில்' பெற்றோர்கள், மாணவர்கள், தொண்டு நிறுவனத்தினர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் இதர சாமான்ய மக்கள் அனைவரும் கலந்துகொண்டு இப்போராட்டத்தினை அமைதியான வழியில் நடத்திக்கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 

இடம் : வள்ளுவர் கோட்டம், தேதி : 10-09-2017 (ஞாயிற்றுக் கிழமை), நேரம் : மாலை 3 முதல் 5 வரை. குறிப்பு : இப்போராட்டத்துக்குக் காவல் துறையின் அனுமதி பெறப்பட்டுள்ளது. இப்போராட்டத்தின் நோக்கம் நீட் எதிர்ப்பைப் பதிவு செய்வது மட்டுமே. நீதிமன்றத்தையோ, அரசாங்கங்களையோ, தனி நபர்களையோ அவமதிப்பதற்கு அல்ல'' என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்தப் போராட்டம் கிருஷ்ணப்ரியாவின் அரசியல் களத்துக்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்குமா..?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!