Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆற்றைக் கூறுபோடுகிறது அரசியல்! வேகம் எடுக்குமா வேகவதி ஆறு சீரமைப்பு?

 

2015-ம் ஆண்டு ஏற்பட்ட பருவமழையில் வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அதில் மூழ்கியது காஞ்சிபுரம். இதனையடுத்து அப்போதைய மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி, வேகவதி ஆற்றைத் தூர் வாருவதற்கு ஏற்பாடு செய்தார். இதனால் அடுத்த சில தினங்களிலேயே வந்த பெருவெள்ளத்திலிருந்து தலைநகரின் தலை தப்பியது. அதன் பிறகு வேகவதி ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தொய்வு ஏற்பட்டது.

வேகவதி

வேகவதி

வேகவதி ஆற்றின் மொத்த நீளம் 26 கி.மீ. தாமல் ஏரி கலங்கள் பகுதியில் தொடங்கும் வேகவதி ஆறு, காஞ்சிபுரம் நகரத்தின் வழியாகத் திம்மராஜம்பேட்டையில் உள்ள பாலாற்றில் கலக்கிறது. வேகவதி ஆற்றிலிருந்து மஞ்சள் நீர்க் கால்வாய், அஷ்டபுஜம் கால்வாய், தேனம்பாக்கம் கால்வாய், ரெட்டைக்கால்வாய் என நான்கு கால்வாய்களாகப் பிரிந்து காஞ்சிபுரம் நகரத்தில் வருகிறது. வேகவதி ஆற்றின் அகலம் சில இடங்களில் 500 மீட்டராகவும், ஓர் இடத்தில் 50 மீட்டராகவும் இருக்கும். ஒரு சில இடங்களில் வெறும் 5 மீட்டர்தான் இருக்கும். அவ்வளவு ஆக்கிரமிப்புகள் வேகவதி ஆற்றில் உள்ளன. 2011-ல் தகவல் அறியும் உரிமைகள் சட்டத்தின்கீழ் பொதுப்பணித் துறை கொடுத்த புள்ளிவிவரப்படி 55 ஏக்கரில் 1,798 வீடுகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். ஆனால், 4,000-க்கும் மேற்பட்ட வீடுகளின் பிடியில் வேகவதி ஆறு சிக்கித்தவிக்கிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் ஒரு பகுதி வேகவதி ஆற்றை ஆக்கிரமித்துதான் கட்டப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரே வேகவதி ஆற்றில் சிமென்ட் சாலை, பொதுக் கழிவறை, தண்ணீர் டேங்க், மகளிர் சுயஉதவிக்குழு கட்டடங்கள் போன்றவைகளை நகராட்சி மூலமாகக் கட்டி, அரசாங்கமே ஆக்கிரமிப்பு செய்துள்ளது.

வேகவதி, ஆக்கிரமிப்புகள்

வேகவதி, ஆக்கிரமிப்புகள்!

கடந்த சில வருடங்களாகவே வேகவதி ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் போராடிவருகிறார்கள். ஆனால், அரசியல்வாதிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். ''ஆற்றிலும், கால்வாயிலும் அதிகாரிகளின் துணையோடுதான் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளன. ஆளும் கட்சி, எதிர்க் கட்சி என அரசியல்வாதிகளின் பிடியில் நீர்நிலைகள் உள்ளன. இதனால் பாசனநீர்க் கால்வாய் தற்போது கழிவு நீர்க் கால்வாயாக மாறிவிட்டது. ஆக்கிரமிப்பு இடங்களில் வீடு கட்டும்போதே தடுத்திருந்தால் பிரச்னைகளைத் தவிர்த்திருக்கலாம்” என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.

வேகவதி வரைபடம்

வேகவதி வரைபடம்!

''2015-ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது அடையாறு ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அகலப்படுத்தியது போன்று வேகவதி ஆற்றையும் அகலப்படுத்த வேண்டும்'' எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து கடந்த வருடமே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும் தடுப்புச் சுவர் கட்டுவதற்கும் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதற்காக 5.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கவும் செய்தார்கள். கடந்த ஒன்றரை வருடமாகக் கோப்புப் பணிகள் முடிந்து, கடந்த மாதம்தான் அப்பகுதி மக்களுக்கு நோட்டீஸ் வழங்கினார்கள். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் முத்துக்குமார், காஞ்சிபுரம் தி.மு.க எம்.எல்.ஏ எழிலரசன், காஞ்சிபுரம் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. விஸ்வநாதன் ஆகியோர் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். ஆகஸ்ட் மூன்றாம் தேதி காஞ்சிபுரம் நகரில் பேரணி நடத்தினார்கள். இதனால் 60 மீட்டர்வரை அகலப்படுத்த மாவட்ட நிர்வாகம் ஒப்புக்கொண்டது. 60 மீட்டர் அகலப்படுத்துவதற்கே நிறைய வீடுகளை இடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், செப்டம்பர் 4-ம் தேதி 60 அடிக்கும் கீழ் அகலப்படுத்த வேண்டும் எனப் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் என்ன செய்வதென்று கையைப் பிசைந்துகொண்டிருக்கிறது மாவட்ட நிர்வாகம். ''உயர் நீதிமன்றத்தில் யாராவது வழக்குத் தொடர்ந்தால், வேகவதி ஆற்றில் உள்ள மொத்த ஆக்கிரமிப்பையும் அகற்ற வேண்டி இருக்கும். அதனால், யாரும் நீதிமன்றத்துக்குச் செல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்'' என அதிகாரிகள் கட்சியினருக்குத் தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில் ''பிரச்னை என்றால், எங்களிடம்தான் வரவேண்டும்'' என ஆளும் கட்சியினர் மீசை முறுக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து கடந்த 5-ம் தேதி மாலை மாவட்ட ஆட்சியர் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது பொதுப்பணித் துறைக்கும் பொதுமக்களுக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்தது.

வேகவதி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

வேகவதி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்!

“பொதுப்பணித் துறை கணக்குப்படி ஒட்டுமொத்த ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும். ஆனால், நாங்கள் அப்படிச் செய்யவில்லை. 60 மீட்டர் வரை அகலப்படுத்திக் கொள்ளுங்கள் என ஏற்கெனவே நீங்கள் சொன்னபடிதான் நாங்கள் அகலப்படுத்துகிறோம். இதில், மீண்டும் குறைக்க முடியாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று இடம் தருவதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா உறுதியளித்திருக்கிறார். பிரச்னையை பெரிதாக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்” எனப் பொதுப்பணித் துறை சார்பில் கூறி இருக்கிறார்கள்.

வேகவதி, ஆக்கிரமிப்பு அகற்றம்

வேகவதி, ஆக்கிரமிப்பு அகற்றம்!

“100 மீட்டர் அகலப்படுத்த வேண்டிய இடங்களில்கூட 60 மீட்டர் அளவில் மட்டுமே அகலப்படுத்தப்படுகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் காஞ்சிபுரம் நகரம் வெள்ளத்தில் மூழ்கவேண்டியிருக்கும் என்பதுதான் வேதனை! தனது சுயலாபத்துக்காக கொள்கைக்கு முரணாக அரசியல்வாதிகள் நடந்துகொள்கிறார்கள். இதனால் அரசு நிர்வாகம் தனது கடமையைச் செய்ய அச்சப்படுகிறது. ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை எவ்வித பாரபட்சமும் இல்லாமல் அகற்ற வேண்டும். அப்போதுதான் நீர்நிலைகளைப் பாதுகாக்க முடியும். தவறினால் நீதிமன்றத்தின் கதவைத் தட்டுவதை தவிர, வேறு வழியில்லை. வேகவதி ஆறு உள்பட அனைத்து நீர்நிலைகளும் காப்பாற்றப்பட வேண்டும்” என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

ஆனால், ஆற்றைக் கூறுபோடுகிறது அரசியல்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement