`அரிதான பழைய புத்தகம் தங்கத்துக்கு நிகர்’ - புத்தகங்களின் காதலன் எஸ்.வி.ஜெயபாபு | S.V. Jayababu who is collecting more than 50 thousands old books

வெளியிடப்பட்ட நேரம்: 15:29 (09/09/2017)

கடைசி தொடர்பு:15:29 (09/09/2017)

`அரிதான பழைய புத்தகம் தங்கத்துக்கு நிகர்’ - புத்தகங்களின் காதலன் எஸ்.வி.ஜெயபாபு

மிழகத்தில் புத்தகச் சேகரிப்பில் ஈடுபட்டுவரும் மிகச் சிலரில் எஸ்.வி.ஜெயபாபுவும் ஒருவர். அரசியல், ஆன்மிகம், சினிமா, சமுதாய வரலாறு எனப் பல்வேறு துறைகள் தொடர்பான 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிய இதழ்கள் இவரிடம் உள்ளன. சினிமா, அரசியல் குறித்து ஆய்வு மேற்கொள்பவர்கள், இவரது உதவி இல்லாமல் ஆய்வை நிறைவுசெய்திட முடியாது. பொக்கிஷப் புத்தகங்களை தன்னகத்தே வைத்திருக்கும் அவரைச் சந்தித்தோம்...


புத்தகம்

``சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த எரமலுார். அப்பா காலத்திலேயே சென்னைக்கு வந்துவிட்டோம். இப்போது ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறேன். மனைவி, மகன்களுடன் வாழ்க்கை சுவாரஸ்யத்தையும் பல்வேறுவிதமான அனுபவங்களையும் கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறது புத்தகங்கள்” என்று புத்தகச் சேகரிப்பின் மூலம்தான் பெற்ற ஆச்சர்ய அனுபவங்களை வார்த்தைகளால் அழகுபடுத்தினார் ஜெயபாபு.

“புத்தகச் சேகரிப்பை எப்போது தொடங்கினீர்கள்?''

``புத்தகச் சேகரிப்பில் என் முன்னோடி என் தந்தைதான். சினிமா மீது பெரும் ஈர்ப்புகொண்டிருந்த அவர், சினிமா இதழ்கள் அனைத்தையும் வாங்கிப் படிப்பார். சினிமா தொடர்பான சின்னச் சின்னத் துண்டுப்பிரசுரங்களைக்கூட விட மாட்டார். ஒருகட்டத்தில் தன் வேலையை உதறிவிட்டு அன்று பிரபலமாக இருந்த சினிமா இதழான `குண்டூசி'யில் வேலைக்குச் சேர்ந்தார். அதன் ஆசிரியர் பி.ஆர்.எஸ் கோபால். 

என் தந்தையின் சேகரிப்பு ஆர்வத்தைத் தெரிந்துகொண்ட அதன் உரிமையாளர், மொத்த குண்டூசி இதழ்களையும் என் தந்தைக்குக் கொடுத்தார். இது அவருக்குப் பெரும் உந்துதலாக இருந்ததால், அன்று முதல் மார்க்கெட்டில் இருந்த எல்லாப் பத்திரிகைகளையும் வாங்கி  சேகரிக்க ஆரம்பித்தார். அப்போது அவர் தொடங்கிய இந்தப் பணியை, தற்போது நான் தொடர்கிறேன்.''

``புத்தகங்களை எப்படிச் சேகரிக்கிறீர்கள்?''

``நடப்பில் உள்ள இதழ்களை அப்போதே வாங்கிவிடுவேன். பழைய இதழ்களுக்காக ஆரம்ப காலத்தில் பழைய புத்தகக் கடைகளைத் தேடி சென்னையில் மூர் மார்க்கெட், வழக்கமான பழைய புத்தகக் கடைகளுக்குத் தினமும் ஒருமுறையாவது நேரில் செல்வேன். சில கடைக்காரர்கள் என் அலைச்சலைக் குறைக்க என் தொலைபேசி எண்ணைப் பெற்றுக்கொண்டு, அரிய இதழ் ஏதேனும் வந்தால் அழைப்பார்கள்.''

``புத்தகச் சேகரிப்பு ஆர்வம் உங்களுக்கு எப்படி உருவானது?'

``1995-ம் ஆண்டுதான் இறக்கும்வரையில் புத்தகச் சேகரிப்பை விடாமல் தொடர்ந்தார் என் தந்தை. புத்தகங்களை, ஒருபோதும் அவர் வியாபார நோக்கத்துக்காகப் பயன்படுத்தியதில்லை. படிக்க மட்டுமே புத்தகங்களைத் தருவார். தன்னிடம் அரிய பல புத்தகங்கள் இருப்பது அவருக்குப் பெருமிதமும் மகிழ்ச்சியும் அளித்தது. அப்பாவின் இறப்புக்குப் பிறகு வீட்டுக்கு வந்தவர்கள், அப்பாவின் சேகரிப்பைப் பார்த்து நெகிழ்ந்து பாராட்டினார்கள். ஒருகட்டத்தில் வீடு முழுக்க இருந்த புத்தகங்கள் எனக்கும் ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்தியது. என் 15 வயதில் நானும் புத்தகச் சேகரிப்பில் இறங்கினேன். இப்போது புத்தகங்கள் வைக்க முடியாத அளவுக்கு வீடு சுருங்கிப்போய்விட்டது.''

புத்தகம்

``இந்தப் புத்தகங்களை எப்படிப் பராமரிக்கிறீர்கள்?''

``பழைய இதழ்களைப் பராமரிப்பது பெரும் சிரமமான பணி. அடிக்கடி இவற்றை எடுத்துப் பிரித்து அடுக்க வேண்டும். ஒவ்வொரு புத்தகத்தையும் பிளாஸ்டிக் பேக்கில் வைத்து பராமரிக்கிறேன். ரசக்கற்பூரங்களைப் போட்டுவைப்பேன். இவை குறைந்தபட்சப் பாதுகாப்பு அம்சங்கள்தான். கூடுதல் செலவு செய்தால், இன்னும் நல்லமுறையில் பராமரிக்கலாம். என் சொற்ப வருமானத்தில் அதைச் செய்ய முடியவில்லை. எதிர்காலச் சந்ததிகளுக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காக, இவற்றை டிஜிட்டலாக்க வேண்டும் என்ற ஆர்வமுள்ளது.'' 

``இந்த வேலையில் எப்போதாவது சலிப்பு ஏற்பட்டதுண்டா?''

``உண்டு. நிறைய நண்பர்கள் புத்தகங்களைப் படிக்க வாங்கிச் செல்வார்கள். சில நாள்கள் கழித்துக் கேட்கும்போது, `இங்கே வைத்தேன், அங்கே வைத்தேன்' எனப் பொறுப்பின்றி பதில் சொல்வார்கள். இப்படிப் புத்தகங்களை இழக்கும் நேரங்களில் மனம் கனத்துவிடும். சிலர் புத்தகங்கள், பத்திரிகைகள் மற்றும் பதிப்பகப் பணிக்காகப் புகைப்படங்களைக் கேட்டு பெறுவார்கள். அதற்கான சிறுதொகையைக்கூட உரிய நேரத்தில் தராமல் காலம் தாழ்த்துவார்கள். அந்த மாதிரி சந்தர்ப்பங்களில் நம் உழைப்பைப் புரிந்துகொள்ளாமல் பொருட்படுத்துகிறார்களே என மனம் உடைவதுண்டு.''

``வருமானம் இல்லையென்கிறபோதும் புத்தகச் சேகரிப்பைத் தொடரக் காரணம் என்ன?''

``தமிழகத்தில் பழைய புத்தகங்களைச் சேகரிக்கும் வழக்கம் எல்லோரிடமும் கிடையாது. எதிர்காலத் தலைமுறையினருக்குத் தமிழக அரசியல் வரலாறு, சினிமா தொடர்பான தகவல்கள் கொண்டுபோய்ச் சேர்க்க இந்தச் சேகரிப்பு பெரும் பங்காற்றுகிறது. இந்தப் பணியில் நானும் ஓர் அணிலாகப் பயன்படுவது மகிழ்ச்சி. அதனால்தான் எத்தனை நெருக்கடிகள் விமர்சனங்கள் வந்தாலும்  இதைத் தொடர்ந்து செய்துவருகிறேன். புத்தகச் சேகரிப்பு, எனக்குப் பணம், நகை, பொருள்களைத் தந்துவிடவில்லை. இவை தரும் மகிழ்ச்சியை, எனக்குப் பழைய புத்தகம் ஒன்று தந்துவிடும். நான் இன்று வரை இந்தப் பணியில் தொய்வின்றி இயங்க, இதுவே காரணம்.”

``பொருளாதார நெருக்கடியை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?''

``ஆய்வு மாணவர்கள், பழைய சினிமா வரலாறு எழுதுபவர்கள், முனைவர் பட்டமேற்படிப்பு மாணவர்கள் தங்கள் ஆய்வுக்காக என்னைத் தேடி வருவார்கள். ஆரம்பத்தில் அவர்களிடமிருந்து அதற்கான தொகை எதுவும் பெற்றதில்லை. பலருக்கும் உதவுகிறோம் என்ற மகிழ்ச்சி அளித்தது. ஆனால், வருமானத்தில் பெரும்பகுதியை புத்தகங்கள், புகைப்படங்கள் வாங்கச் செலவிட்டதில் ஒருகட்டத்தில் பொருளாதாரச் சிரமம் ஏற்பட்டது. அதன் பிறகே பழைய புத்தகங்களைத் தேடி வருபவர்களிடம் அவர்கள் தரும் சிறுதொகையைப் பெற்றுக்கொள்கிறேன். இதன் மூலம் வாழ்க்கையை ஓரளவுக்குச் சமாளித்துவருகிறேன்.''

``அரிய புத்தகங்களின் சேகரிப்பு எந்த அளவுக்கு மற்றவர்களுக்குப் பயன்படுகிறது?''

`பேசும் படம்', `குண்டூசி', `கலை', `இந்தியன் மூவி நியூஸ்' என அந்தக் கால சினிமாவை அறிய உதவும் பழங்கால இதழ்கள் இருப்பதால், சினிமா பற்றி கட்டுரை மற்றும் புத்தகங்கள் எழுதுபவர்கள் என்னைத் தேடி வருவார்கள். அவர்களுக்குத் தேவையான தகவல்களை அளித்து உதவுவேன். அதேபோல் சினிமா தொடர்பான கண்காட்சி விழாக்கள் நடத்துபவர்களும் என்னை அணுகி புகைப்படங்கள் மற்றும் தகவல்களைப் பெறுவர். சினிமா ஆய்வு மாணவர்கள், என்னைத் தேடி வருவார்கள். திரையுலகப் பிரபலங்களுக்கு நினைவு தினச் சிறப்பிதழ் மற்றும் மலர் வெளியிடவும் என்னிடம் தகவல் கேட்டு வருவார்கள். 

ரஜினியின் `சிவாஜி 25' நிகழ்ச்சிக்காக அவரது ஆரம்பகாலம் முதல் அளித்த பத்திரிகைப் பேட்டிகள் அவரது படங்களின் குறிப்புகளை அளித்தேன். என் சேகரிப்பில் எனக்குப் பெருமையளித்த விஷயம் அது. பத்திரிகைகளில் பழைய வரலாறு குறித்து எழுதும் பிரபல எழுத்தாளர்களான ராண்டார் கை, வாமனன் போன்றோர் தாங்கள் எழுதும் கட்டுரை குறித்து சந்தேகம் எழுந்தால், எனக்கு போன் செய்து கேட்பார்கள். புத்தகங்களைத் தேடிப் பார்த்து அதை உறுதிப்படுத்துவேன். 

தமிழகத்தின் பாரம்பர்யப் பத்திரிகை ஒன்று, பல ஆண்டுக்கு முந்தைய இதழ் ஒன்று தங்களிடம் இல்லை எனக் கேட்டார்கள். அதன் நகலை அவர்களுக்குக் கொடுத்தபோது பெரிதும் மகிழ்ந்தார்கள். அது என் தந்தை சேகரித்துவைத்தது. என் தந்தையின் உழைப்பு, பெரிய நிறுவனம் ஒன்றுக்கு உதவியதை நினைத்து பெருமையடைகிறேன். இவையெல்லாம் இந்தப் புத்தகச் சேகரிப்பால் கிடைத்த பலன்கள்.'' 

ஜெயபாபு

``உங்களிடம் உள்ளவற்றில் குறிப்பிடும்படியான இதழ்கள் என்னென்ன?''

``என்னிடம்  உள்ளவற்றில் 1934 முதல் 1936 வரை வெளியான `சங்கீத அபிமானி', 1939-ல் வெளியான `சினிமா உலகம்', 1930-களில் வெளியான தமிழிசைச் சங்க ஆண்டு மலர்கள், `சில்வர் ஸ்க்ரீன்' என ஆங்கிலத் தலைப்பில் வெளியான தமிழ் சினிமா பத்திரிகை, சில இதழ்களைத் தவிர்த்து 1945 முதல் வெளியான `பேசும் படம்'  சினிமா பத்திரிகைகளை வைத்திருக்கிறேன். `குண்டூசி' முதல் இதழிலிருந்து உள்ளது. 

பாலு பிரதர்ஸ் என்கிற சகோதரர்கள் நடத்திய `கலை' என்ற சினிமா இதழ்களும் வைத்திருக்கிறேன். 1950-களில் வெளியான `கலை மன்றம்' இதழ்கள். 1949-ல் வெளியான `ரசிகன்' சினிமா இதழ்கள், விஜயா வாஹினி நிர்வாகம் `அம்புலி மாமா'வின் ஆரம்பகாலம் தொட்டு இதழ்கள் மற்றும் 1950-கள் முதல் நடந்த சினிமா நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், 1933-ல் வெளியான சம்பந்த முதலியாரின் நாடக வாழ்க்கை அனுபவங்களின் ஆறு பாகங்கள்... இப்படி அரிதான நிறைய புத்தகங்கள் என்னிடம் உள்ளன'' என்றார் மிகுந்த பெருமிதத்துடன்.

`ஓல்டு ஈஸ் கோல்டு' என்பார்கள்... எஸ்.வி.ஜெயபாபுவைப் பொறுத்தவரை  `கோல்டு ஈஸ் ஓல்டு'! ஆம், அவருக்குத் தங்கம்கூட மதிப்பற்றதுதான்... ஒரு புத்தகத்தோடு ஒப்பிடுகையில்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்