வெளியிடப்பட்ட நேரம்: 11:47 (09/09/2017)

கடைசி தொடர்பு:13:11 (09/09/2017)

அனிதா இறுதிச் சடங்கில் என்ன நடந்தது ? - ஒரு நிருபரின் குறிப்பிலிருந்து

அனிதாவின் மரணச் செய்தியைக் கேட்டதும் அன்று இரவே கிளம்பினேன். மலைக்கோட்டை எக்ஸ்பிரஸில் முன்பதிவு செய்யப்படாத இடத்திலிருந்து ஏறுவதற்கு, பெருங்கூட்டம் வெறியுடன் காத்துக்கொண்டிருந்தது. ரயில் நடைபாதையில் வந்து அதன் கதவு திறக்கப்பட்டதும் அவ்வளவு நேரம் என்னுடன் அன்பாகப் பேசிக்கொண்டிருந்த இளைஞர்கூட என்னை இடித்துக்கொண்டு உள்ளே போய் இடம் பிடித்தார். நான் ஏறுவதற்குள் அனைத்து இருக்கைகளும் நிரம்பிப்போயின. நான் பரிதாபமாக நின்றிருந்ததைப் பார்த்ததும் நடுத்தர வயது மனிதர் ஒருவர், பெரிய மனதுடன் இடம்கொடுத்தார். வண்டி நகர ஆரம்பித்ததும் இடம் பிடிப்பதற்கான களேபரங்கள் அடங்கிப்போய், ஜன்னல் வழியே வீசிய காற்றில் பயண சுகத்தை அனுபவிக்க ஆரம்பித்தனர். பெயரை அறிவித்துக்கொண்டு கைகுலுக்கல்களுடன் யாரும் ஒருவரையொருவர் அறிமுகம் செய்துகொள்ளவில்லை. எனினும், ஏதோ ஒரு புள்ளியில் உரையாடல் தொடங்கியது.

எனக்கு இடம் கொடுத்தவரிடம் ``அரியலூருக்கு வண்டி எத்தனை மணிக்குப் போய் சேரும்ணா?" என்றேன்.

``அது நடுஜாமம் ரெண்டரை  மணி இல்லை, மூணு மணிக்குப் போய்ச் சேருமுங்க" என்றார்.

``சரி'' என்று அமைதியாகிவிட்டதும், உரையாடலைத் தொடர அவர் விரும்பினார்போலும், 

``நீங்க, பொறுமையா காலையில கிளம்பியிருந்தா, சாயங்காலம் போய்ச் சேர்ந்திருக்கலாமே" என்றார்.

``இல்லிங்க கொஞ்சம் அர்ஜென்ட்."

``என்ன விஷயமா போறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?"

``அனிதானு ஒரு பொண்ணு, நீட் தேர்வால இன்னிக்கு தற்கொலை பண்ணிக்கிட்டாங்க தெரியுமா? அவங்க ஊருக்குத்தான் போறேன்."

``ம்ஹும் தெரியாதுங்க. சரி... நீங்க ஏன் போறீங்க?"

``நான் ஒரு பத்திரிகையாளருங்க" என்றதும் சுற்றி அமர்ந்திருந்தவர்களின் கவனம் என் மீது படர்ந்தது. 

``அனிதான்னு ஒரு சின்னப் பொண்ணு சூசைட் பண்ணிக்கிட்டாங்க உங்களுக்குத் தெரியுமா?" என்று குரலை சற்று உயர்த்தியே கேட்டேன்.

`தெரியாது' என்று உதட்டைப் பிதுக்கியபடி அவர்கள் பதிலளித்தார்கள். அனிதா இறந்து, ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் கடந்த ஐந்து மணி நேரமாகச் செய்திகளும் போராட்டங்களும் வலுத்துவந்த சமயம் அது.

ஒருபக்கம்,  `அனிதா, தற்கொலை  செய்துகொண்டார்' என்ற செய்தி பரவ ஆரம்பித்ததும், `அது தற்கொலை அல்ல; கொலை' என்று அரசியல் புரிதலுடன் உடனுக்கு உடனே எதிர்வினை ஆற்றிக்கொண்டிருக்கும் இன்னொரு புறம், அப்படியொரு சிறுமி தற்கொலை செய்துகொண்டாரா என்கிற விஷயம்கூட தெரியாமல் இருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த இரு தரப்பினருக்கும் உள்ள இடைவெளியைக் குறைப்பதில்தான் ஒரு போராட்டத்துக்கான வீரியம் இருக்கிறது என்று தோன்றியது.

அரியலூர் வந்து இறங்கும்போது மணி அதிகாலை 3. பாதுகாப்பு கருதி காவலர்கள் அரியலூரில் குவிக்கப்பட்டிருப்பதால், ரயில் நிலையத்தையொட்டி உள்ள லாட்ஜுகள் அனைத்திலும் காவலர்கள் நிரம்பியிருந்தனர். பிறகு, ஒரு லாட்ஜில் இடம் கிடைத்தது. சிறிது நேரம் கழித்து  அரியலூரிலிருந்து அனிதாவின் சொந்த ஊரான கழுமூருக்குப் பயணப்பட்டேன்.  கழுமூர் எல்லையில் காவலர்கள் குவிக்கப்பட்டு, ஊருக்குள் நுழையும் ஒவ்வொருவரையும் `யார்... என்ன?' என விசாரித்து, அதில் திருப்தியடைந்த பிறகே உள்ளே அனுமதித்தனர்.

அனிதா ஊர் கடையடைப்பு

அனிதா வீடு இருப்பது மிகக் குறுகலான சந்து என்பதால், வீட்டுக்கு அருகில் உள்ள விசாலமான இடத்தில் அவர் கிடத்தப்பட்டிருந்தார். ஒரு பக்கம், கிராம மக்கள் ஒன்றாக அமர்ந்து அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு குரல் எழுப்பிக்கொண்டிருந்தனர். இன்னொரு பக்கம், அனிதாவுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்கு அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் வருகை புரிய ஆரம்பித்த சமயத்தில், திடீரென பரபரப்பு ஏற்பட்டது. என்னவென்று போய்ப் பார்த்தேன். தங்கையை இழந்த தவிப்பில் அனிதாவின் மூன்றாவது அண்ணனுக்கு உடலில் ரத்த அழுத்தம் குறைந்ததால், அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு  அழைத்துச் சென்றுகொண்டிருந்தார்கள்.

அனிதா அண்ணன்

வெயில் ஏற ஏற கூட்டமும் அதிகரித்துக்கொண்டிருந்தது. அனிதா வீட்டைச் சுற்றி இருப்பவர்களிடம் போய்ப் பேசப் பேச, அதைக் கேட்டு எப்படி எதிர்வினையாற்றுவது எனத் திணறவேண்டியிருந்தது. அவர்களிடமிருந்து விடைபெற்று அனிதாவின் வீட்டுக்குச் சென்றேன். மிகச்சிறிய வீடு. குடிசை வீடாக இருந்து சமீபத்தில்தான் அது கல்வீடாக மாறி இருந்தது. அங்கு இருந்த அலமாரிகளில் பெரிய பெரிய புத்தகங்கள் அடுக்கப்பட்டு, அவை சிதறிக்கிடந்தன. அதை எடுத்துப் புரட்டும்போது எல்லாப் புத்தகங்களின் கடைசியிலும் தன் அப்பா-அம்மாவின் பெயரை `சண்முகம் - ஆனந்தம்' என அனிதா எழுதிவைத்திருக்கிறார். அத்துடன் பாடம் குறித்த முக்கியமான குறிப்புகளும் இருந்தன. அதையெல்லாம் படித்துப் பார்க்கும்போது, வெகுநேரமாக அடக்கிவைத்திருந்த அழுகையை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.

அந்தச் சூழலில், எனக்கு அறிமுகமான ஆங்கில இணைய ஊடகத்தின் பெண் நிருபர், ``அனிதா தற்கொலை செய்துகொண்டது முறையல்ல'' என்று என்னுடன் பேச, அது எங்கள் இருவருக்கும் வாக்குவாதமாக மாறியது. ``அனிதா, சவாலை எதிர்கொண்டிருக்க வேண்டும்'' என்று அவர் சொன்னார். அந்த வீட்டில் கழிவறைகூட இல்லை எனத் தெரிந்ததும், அந்தப் பெண் நிருபரிடம் சொன்னேன் ``பிறந்ததிலிருந்து கழிவறை இல்லாத வீட்டில் வளர்ந்து படித்த இந்தச் சிறுமி, ஒரு மருத்துவர் ஆவதற்கான தகுதியை அடைந்திருக்கிறார் என்றால், இதைவிட அவள் வேறென்ன சவாலை எதிர்கொள்ள பயப்பட்டிருக்க முடியும்? அவமானத்தால் தன்னை மாய்த்துக்கொண்டாள் என்று அவளைக் கோழையாக்க முயற்சிக்காதே. மீண்டும் நீ அப்படி சொல்வாய் என்றால், உன் தவறிலிருந்து நீ தப்பிப்பதற்கு அவள் மீது பழியைப் போடுகிறாய் என்றுதான் அர்த்தம். உன்னைப் போன்றோர் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். அவளுடைய மரணத்திலிருக்கும் நியாயத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்" என்றேன். அந்த வீட்டில் இருந்த ஊர்க்காரர்கள், இதை அமைதியாகக் கவனித்துக்கொண்டிருந்தனர்.

அனிதாவின் மரணம் நடந்த இடத்தில்  எரிச்சலடையவைத்த  இரண்டு சம்பவங்கள் குறிப்பிடத்தக்கன. முதலாவது, சினிமாத் துறையினர் மீதுள்ள ரசிக மனோபாவம்.  இடம் பொருள் தெரியாமல் பயன்படுத்தும் சிலரின் முட்டாள்தன செய்கைகள்  கடும் கண்டனத்துக்குரியது. அனிதாவின் அப்பா, பாட்டி அவரின் அண்ணன்களின் குமுறல்களைக் கேட்டு தாள முடியாமல் ஒருகட்டத்தில் அழுதுவிட்டார் இயக்குநர் பா.இரஞ்சித். அவர் அந்த இடத்திலிருந்து கிளம்பி வெளியே வருகையில், அவரை இளைஞர்கள் சூழ்ந்துகொண்டு செல்ஃபி கேட்டது என்ன மாதிரியான மனநிலை என்றே புரிந்துகொள்ள முடியவில்லை. இந்தச் சம்பவம் மட்டுமல்ல, சினிமாத் துறையினர் எங்கே கூடினாலும் அந்தச் சூழலைப் பொருட்படுத்தாமல் வெளிப்படும் ரசிக வெறி  வருத்தமளிக்கிறது.
 

அனிதா ஊர் மக்கள்

இன்னொரு விஷயம், அனிதாவுக்கு மரியாதை செய்ய வந்த நாம் தமிழர் இயக்கத்தைச் சார்ந்தவர்கள்  `பறிக்காதே பறிக்காதே... எங்கள் சலுகைகளைப் பறிக்காதே' என கோஷமிட்டார்கள். அவர்களில் ஒரு நபரின் கையைப் பிடித்து ``தோழரே, சலுகை அல்ல,  உரிமைன்னு சொல்லுங்க" என்றேன். அவர் கூட்டத்திலிருந்து தனிமைப்பட்டதாக உணர்ந்தார்போலும், என் கையை உதறிவிட்டு வீராவேசத்துடன் தன் முழக்கத்தைத் தொடர்ந்தார்.

ஸ்டாலின் வருவதற்காக இறுதிச்சடங்குகள் இரவு வரை தள்ளிப்போடப்பட்டு, பிறகு ஊர்வலம் நடைபெற்றது. அனிதாவை இடுகாட்டுக்குக் கொண்டு சென்று உள்ளே நுழையும் சமயத்தில் ஒரே பரபரப்பு. எத்தனை நேரமானாலும் கலந்துகொள்ள வேண்டும் என்ற துடிப்பில் கடைசி நேரம் விஜயகாந்த் வந்து சேர்ந்தார். அதே நேரம் மழையும் கொட்ட, அதைப் பொருட்படுத்தாமல் அனிதா தகனம் செய்யும் இடம் வரை சென்றுவிட்டு கிளம்பினார் விஜயகாந்த். எல்லா பரபரப்புகளும் அடங்கிய பிறகு, விறகை அடுக்கினார்கள். அதிகார மையங்களின் கண்ணாமூச்சி ஆட்டத்தில் பலியான பட்டாம்பூச்சியின் மீது நெருப்பு படர ஆரம்பித்தது. 'எங்களை மன்னிக்காதே அனிதா!' என்றுதான் மன்றாடத் தோன்றியது!